திருட்டு, ஆயுமுனையில் கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு, மதபோதகர் வேடம்! - மனைவியும் கூட்டுக் களவாணி?.
.
இலங்கையின் பிரபல திருடன் ஒருவன் மனைவியுடன் பிரான்ஸ் தப்ப முற்பட்ட போது கைது!
யாழ்ப்பாணம், கோப்பாய், அச்சுவேலி பிரதேசங்களில் நீண்டகாலமாக கலக்கிய திருடன் ஒருவன் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவால் அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் குறித்த நபரை கைது செய்வதற்கு முற்பட்ட பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் வயிற்றில் பலமாக கடித்து தப்பிக்க முயன்ற நிலையிலும் பொலிசாரின் துரித நடவடிக்கையின் காரணமாக றேகன் என்கின்ற இந்த நீண்டகால திருடன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
மேலும் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில் , 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு பகுதியை சொந்த இடமாகவும் புங்குடுதீவினை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் செபராசா தயானந்தன் ( றேகன் ) என்பவர் கடந்த இருபது வருடங்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா கொழும்பு போன்ற இடங்களில் திருட்டு, ஆயுமுனையில் கொள்ளை, ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
2019 ம் ஆண்டு வரை 32 பாரிய குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் காணப்படும் நிலையில் நீதிமன்றத்திலிருந்து தனது மூன்றாவது மனைவியின் துணையுடன் தப்பியோடிய இவர் மலேசியா நாட்டிற்கு சென்று சில காலம் மதபோதகர் போன்று செயற்பட்டிருந்தார்.
பின்னர் மீண்டும் 2022 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு திரும்பி , கொழும்பு மாவட்டத்தின் புறநகரில் வீடொன்று கொள்வனவு செய்து மறைமுகமாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து தனது மனைவியுடன் சொகுசு காரில் யாழ்ப்பாணம் வந்து , விடுதிகளில் தங்கி நின்று பகல் வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று வீடுகளை நோட்டமிட்ட பின்னர் , ஓரிரு வீடுகளை இலக்கு வைத்து , மாலை வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று, இலக்கு வைத்த வீட்டிற்கு அண்மித்த பகுதிகளில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை களவாடிய பின்னர் , அதிகாலை 1 மணிக்கும் – 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் , சென்று வீட்டில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு கொள்வார்.
திருட்டின் போது நகைகள் , பணம் என்பவற்றை மாத்திரமே திருடிக்கொள்வார். தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களை திருடுவதில்லை.
திருட்டின் பின்னர் , அந்த வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் மீண்டும் சென்று சந்தேகம் இல்லாத பிறிதொரு இடத்திற்கு மனைவியை காரில் வருமாறு அழைத்து , துவிச்சக்கர வண்டியை அருகில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் வீசி விட்டு , காரில் தப்பி கொழும்பு பிரதேசத்திற்கு சென்று விடுவார்கள்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு நபர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் , 300 பவுணுக்கும் அதிகமான நகைகள் மற்றும் பெருந் தொகை பணம் போன்றவற்றை இந்த நபர் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பொலிசாரின் தீவிர விசாரணைகளை அடுத்து , சந்தேக நபர் கம்பஹா மாவட்டத்திலுள்ள வத்தளை நகரில் தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரிய வந்த நிலையில் யாழில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை மனைவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடிய பணம், நகைகளை என்பனவற்றின் ஊடாக கொழும்பில் சொகுசு வீடு வாங்கிய பத்திரங்கள் , கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் , வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.
அதேவேளை , திருட்டு நகைகளை கொழும்பில் அடகு வைத்த நபர்கள் மற்றும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பிரதான சந்தேகநபரை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரின் மனைவியை கைது செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் , நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனரா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளில் சந்தேக நபர் , தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பி செல்ல முகவர் ஒருவருக்கு பெருந்தொகை பணம் கொடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்ட பிரபல திருடன் றேகன் என்கின்ற தயானந்தனின் தந்தையார் ஈபிடிபி கட்சியின் நீண்டகால உறுப்பினர் என்பதோடு யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் பொருளாளர் ஆவார். இந்த அமைப்பானது கடந்த ஆட்சியில் அப்போதைய கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது ஆகும்.