நாளை 'விடுதலை 2' சிறப்புக் காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி!
.
விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள 'விடுதலை 2' படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விடுதலை 2' சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சேத்தன், கௌதம் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த 'விடுதலை 2' திரைப்படம் நாளை (டிச.20) திரைக்கு வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படம் விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாகும்.
விடுதலை முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விடுதலை 2 படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. கிட்டதட்ட 230 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றதாக விஜய் சேதுபதி படத்தின் புரமோஷனில் கூறியிருந்தார். கனிமவளம் திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி, மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி இயக்கம் அமைத்து செயல்படுகிறார்.இதனால் அந்த இயக்கத்தை காவல்துறையை கொண்டு அழிக்க அரசு முயற்சி செய்கிறது. இதனையடுத்து காவல்துறையில் பணிபுரியும் சூரி மக்களுக்கு எதிராக செயல்படுகிறாரா அல்லது அரசுக்கு எதிராக செயல்படுகிறாரா என்பதே கதை. இப்படம் சூரியின் திரை வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது. சூரியை காமெடியனாக பார்த்த ரசிகர்களுக்கு, அவரிடம் கதையின் நாயகனாக தனித்துவமான நடிப்பை விடுதலை 1 படத்தில் பார்க்க முடிந்தது. விடுதலை 2 படத்திலும் சூரியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடுதலை 2 நாளை வெளியாகிறது. விடுதலை 2 சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நாளை (டிசம்பர் 20) ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த வருடம் வெளியான பெரிய படங்களான கோட், வேட்டையன், அமரன், கங்குவா ஆகிய படங்களுக்கு சிறப்புக் காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.