சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு; திருகோணமலையிலும் பேரணி!
.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற உரிமை ரீதியான பிரச்சினைகளை வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பேரணி நிகழ்வு இன்று (11) திருகோணமலையில் இடம்பெற்றது.
அகம் மனிதாபிமான வள நிலையத்தின் அனுசரணையில் கிழக்கு மாகாண சிவில் வலையமைப்பு இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது திருகோணமலை சிவன் கோவிலடியில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகி குளக்கோட்டன் மண்டபத்தை சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்டோர் சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
வடக்கு கிழக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, உண்மை மற்றும் பொறுப்பு கூறல், கூட்டுப்படுகொலைகளுக்கான நீதி, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், அரசியல் கைதிகளின் விடுதலை,
பாதிக்கப்படட விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கல், மீனவர்களுக்கான நிவாரணம் வழங்கல், பன்முகப்படுத்தப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் பெண்களுக்கான தீர்வு, 76 வருட தேசிய இனப்பிரச்சிக்கான நிலையான அரசியல் தீர்வு போன்ற விடயங்களை உள்ளடக்கிய கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் இறுதியில், குறித்த விடயங்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக சிவில் அமைப்புகளால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய மூவின மக்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், துறைசார் சிவில் அமைப்புக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், விவசாயிகள், நிலத்தினை இழந்தவர்கள், மத வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டவர்கள், மீனவர்கள், பெண்கள், சிவில் செயற்பாட்டாளர்கள மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.