மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும்..!
.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடத்தும் மாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் கண்காட்சியும், மன்னாரில் இன்று இடம்பெற்று வருகின்றது.
அன்படி மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றது.
மங்கல வாத்தியங்களுடனும் கலை நிகழ்வுகளுடனும் விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது, தமிழ், சிங்கள, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இன்னியம் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி ஆரம்ப பேரணி இடம்பெற்றது.
இதன்பின் பண்பாட்டுக் காண்பியக் கூடமாக தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் ஓவியங்கள், புத்தகங்கள், சிற்பங்கள், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் செய்த ஆவணப்படுத்தல் வேலைகள் என்பன நகர சபை மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கலை நிகழ்வுகளும், பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
சில வெளீட்டு நிறுவனங்களின் புத்தகங்களும் இங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பல வருடங்களுக்கு முன் வெளியான, இன்று பார்பதற்கு மிக அரிய புத்தகங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பண்பாட்டின் பிரதான பகுதிகளாக திகழ்கின்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிற்பக் களைஞர்களை வெளிப்படுத்துவதற்காக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடந்தோரும் இந்நிகழ்வை நடத்துகின்றமை சிறப்பாகும்.
அத்துடன் நிகழ்வின் தலைமை விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமாக க.கனகேஸ்வரன், கௌரவ விருந்தினராக நானாட்டான், நாட்டுக்கூத்துக் கலைஞர் செ.மாசிலாமணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.