சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவு!
.
சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.சமீபத்திய வரலாற்றில் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்ததாக அவர் தனது X தளத்தில் பதிவொன்றை இட்டு குறிப்பிட்டுள்ளார்.இதனை நிதியமைச்சும் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களிடமிருந்து 98% பேர் பத்திரப் பரிமாற்றத்தில் விருப்பம் தெரிவித்துள்ளனர்..
இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் மறுசீரமைப்பு தற்போதுள்ள பத்திரங்களுக்கு புதிய பத்திரங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு கடந்த நவம்பர் 26ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது.
அப்போது நிலுவையில் உள்ள பத்திரங்களின் மதிப்பு 12.55 பில்லியன் டொலராக இருந்ததால் அதற்கேற்ப பத்திரங்கள் மறுசீரமைக்கப்பட இருந்தன.
இதற்கான அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தற்போதுள்ள பத்திரங்களை வைத்திருக்கும் தரப்பினருக்கு புதிய பத்திரங்களுடன் தங்கள் பத்திரங்களை பரிமாற்றிக்கொள்ள 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அதன் இறுதிநாள் நேற்றாகும் (12).
அதன்படி, கூடிய விரைவில் இந்த பத்திர பரிமாற்ற செயல்பாட்டில் இணையுமாறு சம்பந்தப்பட்ட பத்திரதாரர்களிடம் இலங்கை கோரிக்கை ஒன்றையும் விடுத்திருந்தது.
2024 செப்டம்பர் 19 ஆம் திகதியன்று இரண்டு பத்திரதாரர்களுடன் கொள்கை ரீதியான ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சர்வதேச பத்திரங்களை வைத்திருக்கும் சர்வதேச முதலீட்டாளர்களைக் கொண்டுள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் உள்நாட்டு நிதி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.