எமது கட்சிக்கு முதன்முதலில் ஆயுதங்களை வழங்கிய ஜே.வி.பி.யினரே மக்களை சுட ஆயுதங்களை கேட்டனர் ; நாங்கள் கொடுக்கவில்லை
.
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளநர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம், பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுரகுமார திசாநாயக்க (27) மட்டக்களப்பில் நடந்த கூட்டமொன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பாக கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அநுரகுமார திசாநாயக்கவுக்கு மண்டை பழுது. அவர்கள்தான் எங்களுக்கு முதலில் ஆயுதங்களை தந்தார்கள். பின்னர், மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள். நாங்கள் கொடுக்கவில்லை. அப்போது வேறு ஆட்கள் தலைவராக இருந்தனர்.
பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடிய வாக்குகளை பெற்றது யார்? எனவே, ஜனநாயகத்தை பற்றி கதைப்பது என்றால் அநுர குமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராக கதைக்க பழகவேண்டும்.
அதேவேளை, இந்த நாட்டை தீக்குள் தள்ளி அநியாயமாக பல்கலைக்கழக மாணவர்களை கொண்டுசென்று வன்முறையில் ஈடுபடுத்தும் கட்சி அது.
இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகின்றேன். அவர்கள்தான், ஒரு பிரபல்யமான ஆயுத குழு. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான். பின்னர் அதனை கைமாற்றியதும் அவர்கள்தான். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுரகுமார திசாநாயக்கவுக்கு தெரிவிக்கின்றேன் என்றார்.