“பாரபட்சமில்லாமல் தமிழர்களின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும்”- எம்.பி பதவி குறித்து வாய் திறந்த கமல்ஹாசன்!
திமுகாவின் இன்னெரு அரிதார வேடமா?

புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் மீது விமர்சனம் வைக்க விரும்பவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பாரபட்சமில்லாமல் தமிழர்களின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக வெளிநாடு செல்வதற்கு நடிகர் கமலஹாசன் அதிகாலை (மே 31) சென்னை விமான நிலையம் வந்தார். அவரிடம், தி.மு.க தலைமையில் ம.நீ.ம கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், “நமது குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தில் குரல் அங்கே ஒலிக்க வேண்டும். அந்த குரல் பாரபட்சம் இல்லாத தமிழர்களுக்கான குரலாக இருக்கும்” என்றார்.
தொடர்ந்து, 2026ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க விஜய் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதலளித்த அவர், “நடிகர் விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். நான் புதிதாக கட்சி ஆரம்பித்தவர் தான். அதனால், நான் அவர் மீது விமர்சனம் வைக்க விரும்பவில்லை” எனக் கூறினார்.
முன்னதாக, தக் லைஃப் திரைப்படம் குறித்து பேசிய அவர், “தக் லைஃப் திரைப்படம் நன்றாக இருக்கும் என நம்பி தான் மக்கள் முன் எடுத்து வந்துள்ளோம். மக்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.
அதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளோம். தற்போது, மலேசியா சென்று புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின் அங்கிருந்து துபாயில் நடைபெறும் புரமோஷன் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளேன். இறுதியாக படம் வெளியாகும் போது தமிழ்நாடு வந்து விடுவேன்” என்றார்.
தக் லைஃப் இசை வெளியீட்டு விழா சர்ச்சை:
மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன் மற்றும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ’தக் லைஃப்’ திரைப்படம், ஜூன் 5-ஆம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.
முன்னதாக ’தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் ’தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்’ என்று கூறிய கருத்து, கர்நாடக மாநிலத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் ’தக் லைஃப்’ படம் வெளியிடக்கூடாது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.