பேரனர்த்தத்திற்காக தயாரிக்கப்பட்ட சட்டம் 20 ஆண்டுகளாக 'உறக்கத்தில்'!
“2004 சுனாமி பேரழிவுக்குப் பின்னர், 2005 ஆம் ஆண்டில் 13 ஆம் இலக்க இலங்கை பேரழிவு செயலாட்சி சட்டம் கொண்டுவரப்பட்டது.
பேரனர்த்தத்திற்காக தயாரிக்கப்பட்ட சட்டம் 20 ஆண்டுகளாக 'உறக்கத்தில்'
நாட்டின் மனித உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் 21 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் கடந்த இரு தசாப்தங்களாக மிக மந்தகதியிலேயே செயற்படுத்தப்பட்ட விதம் தொடர்பில் தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2005ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின்படி, அனர்த்த முகாமைத்துவத்துக்கான தேசிய சபை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை கூட்டப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், 2018 ஆம் ஆண்டு வரையிலான 13 வருடங்களில் அந்த சபை வெறும் 12 முறை மாத்திரமே கூடியுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் கடந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
“2004 சுனாமி பேரழிவுக்குப் பின்னர், 2005 ஆம் ஆண்டில் 13 ஆம் இலக்க இலங்கை பேரழிவு செயலாட்சி சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, நிறுவப்பட்ட இந்த அனர்த்த முகாமைத்துவத்துக்கான தேசிய சபை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை கூட்டப்பட வேண்டும். ஆனால், இதுவரை சுமார் 80 தடவைகள் கூடியிருக்க வேண்டும். ஆனால் இந்தச் சபை, 2018 வரையிலான சுமார் 13 ஆண்டுகளில் வெறும் 12 தடவைகள் மட்டுமே கூட்டப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கூடியிருக்கிறது.”
புதிய அரசாங்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் முதன்முறையாக இந்த சபையை கூட்டும் வரை, கடந்த ஏழு ஆண்டுகளாக அது ஒருமுறை கூடக் கூட்டப்பட்டிருக்கவில்லை என்பதையும் பத்மநாதன் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் 15 அன்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அனர்த்த முகாமைத்துவத்துக்கான தேசிய சபையின் 16ஆவது கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அன்றைய தினம் முற்பகல் வேளையில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த முகாமைத்துவத்துக்கான ஒருங்கிணைந்த பொறிமுறையைத் தயாரித்தல் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் ஆகிய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றதாக குறித்த ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.
“அனர்த்த முகாமைத்துவத்துவத்துக்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஓகஸ்ட் 07 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடியதுடன், அவசர அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு நவம்பர் 27 ஆம் திகதி இரவு மீண்டும் கூடியது. ‘டித்வா’ புயலுக்குப் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்காகவும், நிறுவன வழிகாட்டல்களை வழங்குவதற்காகவும் இன்று ஜனாதிபதி தலைமையில் மீண்டும் கூடியது" என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு ஒரு அனர்த்த நிலைமையை எதிர்கொண்டாலும் இல்லாவிட்டாலும், அதற்காகத் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் டிசம்பர் 18ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
“சட்டத்தின்படி இது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும். அப்படியானால் அனர்த்தம் ஏற்பட்டாலும் இல்லாவிட்டாலும், பதிதொனொறவாவது (நவம்பர் 2025) மாதமாகும் போது இந்தச் சபை கூடியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. நான் கூற வருவது என்னவென்றால், அனர்த்தம் இருக்கிறதா இல்லையா என்பது பிரச்சினையல்ல. பாதிப்பைக் குறைத்தல், தயார்நிலை, துரித பதில் நடவடிக்கை மற்றும் மறுசீரமைப்பு ஆகிய விடயங்களில் நாம் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறோம் என்பதே முக்கியம்.”
இதுவரை அனர்த்த அபாயத்தைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
“இந்த அனர்த்த நேரத்திலாவது அபாயத்தைக் குறைக்கும் வேலைத்திட்டத்தை நாம் செய்துள்ளோமா? இல்லை. மலையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மண்சரிவுகள் ஏற்படுகின்றன, வெள்ளம் வருகிறது. வெள்ளம் வற்றி, நிலம் காய்ந்த பிறகு மீண்டும் மக்களை அதே இடங்களிலேயே குடியேற்றுகிறார்கள். இன்று அதன் விளைவாக எமது உறவினர்கள், மக்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?”
அனர்த்த முகாமைத்துவத்துக்காக அரச அதிகாரிகள் முறையான நியமிக்கப்படாமை குறித்தும் அவர் பின்வருமாறு நாடாளுமன்றத்தை தெளிவுபடுத்தினார்:
“இந்தத் தடவை ஏற்பட்ட அழிவின் போதும் தயார்நிலை என்பது உண்மையில் இருக்கவில்லை. அல்லது மிகக் குறைந்த மட்டத்திலேயே இருந்தது. இந்த அனர்த்த முகாமைத்துவ பிரிவைப் பாருங்கள். அவர்களுக்கு வேலை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. பாரிய ஊழியர் தட்டுப்பாடு நிலவுகிறது. வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ‘பிரதிப் பணிப்பாளர் அனர்த்த முகாமைத்துவம்’ என்ற பெயரில் ஒரு அதிகாரி இருக்க வேண்டும். ஆனால் எந்த மாகாணத்தில் அவர் இருக்கிறார்? இல்லை. ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் ஒரு அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் இருக்க வேண்டும். ஆனால் இல்லை. முழு மாவட்டத்துக்கும் ஒரேயொரு உத்தியோகத்தரே இருக்கிறார்.”
- சண்.பார்தீபன்


