வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக தமிழ் அரசியற் கூட்டுகள்! .மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?
தமிழ்த்தேசிய அரசியலை தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை.

உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியற் கூட்டுகள் சில புதிதாக உருவாகியுள்ளன. இந்தக் கூட்டுகளின் பிரதான நோக்கம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை அல்லது பிராந்திய அரசியலை (சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics) மற்றும் புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) மேலும் தொடர்வது. பிராந்திய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை.
இதற்காக அவை தமது கொள்கை (அப்படி ஏதேனும் இருந்தால்) கோட்பாடு, உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கூட்டு வைத்துள்ளன; அணி சேர்ந்துள்ளன.
1. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அதிதீவிர நிலைப்பாட்டையுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி ‘தமிழ்த்தேசியப் பேரவை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸோடு ஸ்ரீகாந்தா – சிவாஜிலிங்கம் இரட்டையர்களின் தமிழ்த்தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர் தவராஜாவின் ஜனநாயகத் தமிழசுக் கட்சி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் சாவகச்சேரி அருந்தவபாலன், புங்குடுதீவு நாவலன் எனச் சில உதிரியாட்களின் அணி என இணைந்துள்ளன.
2. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதில் ஏற்கனவே உள்ள ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடு புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவையும் இந்தக் கூட்டில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை தனித்தே நிற்கும்படியாகி விட்டது.
3. கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு. இதில் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சதாசிவம் வியாழேந்திரனின் தமிழர் முற்போக்குக் கழகம் ஆகியவை 15. 03. 2025 இல் ஒரு உடன்படிக்கையைச் செய்து இணைந்திருந்தன. பின்னர் 22.03.2025 அன்று கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இந்தக் கூட்டில் இணைந்துள்ளது. ஆனாலும் இந்தக் கூட்டுக்கு முன்னோடியாக இருந்தது, கிழக்குத் தமிழர் ஒன்றியமாகும். 2018 இல் செங்கதிரோன் என்றழைக்கப்படும் த. கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த. சிவநாதன் ஆகியோர் இணைந்து கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினை உருவாக்கினர். இதனுடைய அரசியற் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இணைந்து கொள்ளுமாறு அப்போது சம்மந்தப்பட்ட தரப்பினரால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் கருணா அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பைப் புறக்கணித்தவர்கள் இப்பொழுது அதே பெயரில் ஒரு கூட்டமைப்பை பிரகடனப்படுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.
இப்படி ஒவ்வொரு கூட்டுக்கு உள்ளும் புறமுமாகப் பல சங்கதிகள் உண்டு. எப்படியோ வழமையைப்போல தேர்தற்காலத் திருவிழாவின் ஓரம்சமாகத் தமிழ்க் கட்சிகளின் அரசியற் கூட்டுகள் இந்தத் தடவையும் நிகழ்ந்திருக்கின்றன. இதொன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனாலும் ஆச்சரியமாக இருப்பது, இந்தக் கூட்டுகளின் பின்னாலுள்ள சில விடயங்கள்.
1. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதுவரையிலும் வேறு எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தன்னைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தது. அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றையும் முன்னணி துரோகிப் பட்டியலில் தள்ளி விட்டுத் தான் மட்டுமே சுத்தமான தங்கம் என்று தன்னைப் புனிதப்படுத்தி முயற்சித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது இதிலிருந்து படியிறங்கி தான் ஒதுக்கி வைத்த தரப்புகளோடு அரசியற் கூட்டொன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு தமிழ்த்தேசியப் பேரவை என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், தேசிய மக்கள் சக்தி வடக்குக் கிழக்கில் வெற்றியடைவதைத் தடுப்பதும் ஏனைய தமிழ்த்தரப்புகளை விட, தமிழ்க் காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதுமாகும். பாராளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் கட்சியாக (தரப்பாக) தமிழ்க் காங்கிரஸ் இருப்பதால், அரசியல் அரங்கில் முதன்மையிடத்தைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் கஜேந்திரகுமார். இதற்காகவே அவர் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தரப்புகளை ஒருங்கிணைத்து, அதற்குத் தலைமை தாங்குவதற்கு முயற்சித்தார். அதற்காகவே சிறிதரனின் வீடு தேடிச் சென்றதும் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்துடன் பேச்சுகளை கஜேந்திரகுமார் நடத்தியதுமாகும். ஆனாலும் கஜேந்திரகுமாரின் கனவுத்திட்டம் உருப்படாமல் சுமந்திரனால் சமயோசிதமாகத் தடுக்கப்பட்டு விட்டது. இதையும் நிரப்பி, தன்னை எப்படியாவது முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக விலக்கி வைத்த கனிகளையே புசிக்கத் தொடங்கியிருக்கிறார் கஜேந்திகுமார்.
இதுவரையிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தன்னைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்றே அடையாளப்படுத்தி வந்தது. ஆனாலும் முன்னணியைப் பதிவு செய்யாமல் காங்கிரஸையே தேர்தலுக்குப் பயன்படுத்தி வந்தார் கஜேந்திரகுமார். காரணம், காங்கிரசுக்கு நீண்டகால அரசியற் பாரம்பரியம் உண்டு என்பதோடு கஜேந்திரகுமாரின் பேரன் ஜீ.ஜீ.பொன்னலம்பலம் உருவாக்கிய கட்சி. அதற்குப் பிறகு கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் தலைவராக இருந்தார் என்று ஒரு குடும்பப் பாரம்பரியமும் அதற்குண்டு என்பதேயாகும். ஆகவேதான் முன்னணி என்ற பெயரைத் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக் கொண்டே காங்கிரஸில் கட்சியின் நடவடிக்கைகளை வலுவாக மேற்கொண்டு வந்தார் கஜேந்திரகுமார். அதாவது குடும்பத்தின் அரசியல் அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்காமல் பேணுவதே முதன்மை நோக்கமாக இருந்தது.
இப்பொழுது இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன், அருந்தவபாலன், தவராஜா எல்லோரும் ஒருங்கிணைந்து உதவுகிறார்கள்.
இவர்கள் காங்கிரஸை நெருங்கக் காரணம், தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்காகவோ நலனுக்காகவோ தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்காகவோ அல்ல. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை – அதனுடைய வெற்றியைத் தடுப்பதற்காகவேயாகும்.
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது, தமிழ்த்தேசியக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளையெல்லாம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் தவிர்க்க முடியாமல் முடிந்தளவுக்கு விட்டுக் கொடுப்புகளோடு, இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அரசியற் கூட்டுகளை உருவாக்க வேண்டிய நிலை இந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வகையிற்தான் முன்னணியின் அரசியற் கூட்டும் அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு கஜேந்திரகுமார் கொடுக்கும் விளக்கம்தான் சிரிப்பூட்டுகிறது. கொள்கை வழியில் விட்டுக் கொடுப்புகளற்ற அணியாகத் தம்முடைய தமிழ்த்தேசியப் பேரவையே உள்ளதால், கொள்கையை ஆதரிக்கும் மக்கள் தமக்கே – தமது கூட்டுக்கே ஆதரவழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒன்றும் புதியதோ ஆச்சரியமானதோ அல்ல. அது ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்வார்களே. அதுதான். அதாவது ஏட்டுச்சுரைக்காயில் கறியை வைக்க முடியாது. ஆகவே நடைமுறைக்குப் பொருந்தாத கற்பனாவாதக் கருத்தியலில் தன்னைக் கட்டி வைத்திருக்கும் தமிழ்க் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் அணி, இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்கு முரணாகச் சிந்திக்கும் அரசியற் கட்சிகளில் ஒன்றாகும். அதிதீவிரவாத நிலைப்பாடே இதனுடைய அடிப்படையாகும். இதைப்போன்ற சிங்களக் கட்சிகளும் உண்டு. உதாரணமாக விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய போன்றவை. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப்போராட்டத்துக்கும் தீர்வுக்கும் எந்த வகையிலும் பொருத்தமற்ற – நடைமுறைச் சாத்தியங்களற்ற அரசியல் நிலைப்பாட்டைத் தன்னுடைய தலையில் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்க் காங்கிரஸோடு, ஏனைய கட்சிகளும் அணிகளும் அரசியற் கூட்டுக்கு இணங்கியிருப்பது ஒரு வகையில் ஆச்சரியமானதே. முன்னணி படியிறங்கியதற்குக் காரணம், தன்னுடைய அரசியலை எந்த வகையிலாவது பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயேயாகும்.
ஆனால், இலங்கைத்தீவின் யதார்த்தமோ அதிதீவிர நிலைப்பாட்டையும் இனவாதத்தையும் விட்டு விலகும் தன்மையைப் கொண்டுள்ளது என்பதால்தான் வடக்குக் கிழக்கு, மலையகம் உள்பட நாடுமுழுவதிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. அதாவது சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றின் தேவையை அல்லது அதனுடைய போக்கை மக்கள் விட்டு விலகிச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர் எனலாம். இந்த இரண்டு வகையான அரசியலினாலும் குறித்த தமிழ், முஸ்லிம்,மலையகச் சமூகங்கள் பெற்றுக் கொண்டதை விட இழந்தது அதிகம் என்பதால்,அவை வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அதற்காக இந்தச் சமூகங்களின் அக – புற அரசியல் பிரச்சினைகளை தேசிய மக்கள் சக்தியோ அல்லது தற்போதையை அரசாங்கமோ முழுமையாகத் தீர்த்து வைக்கும் என்றுமில்லை. எனிலும் மக்கள் வேறு வழியின்றி வேறு வகையான தெரிவுகளுக்கே முயற்சிக்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து, மறுபடியும் சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றிற்குள் திணித்து விடுவதற்கே கஜேந்திரகுமார் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். இதில் அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, நாவலன், அருந்தவபாலன், ஐங்கரநேசன், கஜேந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் எப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களேயாகும். ஆனால், இது வடக்கிற்குள்தான். வடக்கிற்கு வெளியே இப்படித் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றால், அது அரியநேத்திரன் மட்டும்தான். இந்த அணியில் இன்னொருவர் மட்டும் இதுவரையில் சேராமல் இருக்கிறார். அது சிவஞானம் சிறிதரன். தமிழரசுக் கட்சியிலிருந்து சிறிதரன் வெளியேறும் நிலை வந்தால் நிச்சயமாக அவர் இந்தக் கூட்டில்தான் சேருவார். காரணம், அவரும் ஒரு கற்பனாவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றவர்.
ஆக இப்பொழுது அதிதீவிர தேசியவாதிகளின் அணி தமிழ்த்தேசியப் பேரவை என்ற கூட்டில் இணைந்துள்ளது. இதனை மக்கள் எப்படி நோக்கப்போகிறார்கள்? எவ்வாறான ஆதரவு இந்தக் கூட்டுக்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தமிழ் அரசியலின் எதிர்காலமும் இலங்கைத்தீவின் எதிர்காலமும் இருக்கப்போகிறது. இப்போது இந்தக் கூட்டுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒரு உறுப்பினரை மட்டும் கொண்டுள்ளது. அது காங்கிரஸைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமாகும்.
2. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியற் கூட்டாகும். ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடும் புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். இவை அனைத்தும் கடந்த கால ஆயுதப்போராட்ட அரசியலோடு ஒரு வகையில் சம்மந்தப்பட்டவை அல்லது அந்தப் பின்னணியைக் கொண்டவையாகும். முன்னணியின் தலைமையிலான கூட்டு, அதிதீவிரநிலைப்பாடும் முழுமையான மிதவாதப் பின்னணியைக் கொண்டது என்றால், இது ஆயுதப்போராட்ட அரசியலை வரலாறாகக் கொண்டது. ஆனால், ஒரு சிறிய வேறுபாடு இந்தக் கூட்டிற்கு உண்டு. அது என்னவென்றால், இது யதார்தத்த்தை – நடைமுறையைக் கவனத்திற் கொண்ட கூட்டாகும். அதாவது ஆயுதப்போராட்ட அரசியல் அனுபவத்தின் வழியாகவும் மிதவாத அரசியற் போராட்டத்தின் அனுபத்திற்கூடாகவும் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட தரப்பாகக் காணப்படுகிறது. ஆனால், இந்த அணிக்குப் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்புரிமையே உண்டு. ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதன் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கான இந்தக் கூட்டின் வேட்புமனுக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கூட்டின் அரசியல் சிக்கலுக் குள்ளாகியுள்ளது. இந்தக் கூட்டின் தலைக்குள்ளும் இருப்பது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சிந்தனையே. கூடவே தமிழ்த் தேசியப் பேரவையுடனும் இது மோதக் கூடிய அடிப்படைகளையும் இயல்பையும் கொண்டுள்ளது.
கூட்டுகளுக்கு எதிராகத் தனித்த நிற்கும் தரப்பு. இலங்கைத் தமிழரசுக் கட்சியே இதுவாகும். தேசிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியப் பேரவை என்ற கஜேந்திரகுமார் அணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தன்னை நிறுத்தியிருக்கும் தனித் தரப்பாக இதை நோக்கலாம். வடக்குக் கிழக்கில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிராந்தியக் கட்சியும் இப்போது இதுதான். ஆகவே உள்ளுராட்சித் தேர்தலில் இதனுடைய செல்வாக்கு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அது எந்தளவுக்கு இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அதனை அந்தக் கட்சியின் பேச்சாளரும் பதிற் செயலாளருமான திரு. ஆபிரகாம் சுமந்திரன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அதாவது NPP அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக.
ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.
ஆக, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தியோடு தமிழ்க் கட்சிகள் மோதப்போகின்றன. அதைப்போலத் தமிழ்க்கட்சிகளோடு தேசிய மக்கள் சக்தி மோதப்போகிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியோடும் ஏனைய தமிழ்த் தரப்புகள் ஒவ்வொன்றும் மோதவுள்ளன. ஆக கடுமையான ஒரு போட்டிக்களமாகவே இருக்கப்போகிறது வடக்குக் கிழக்கின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தற்களம்.
மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?