லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைத் தாக்க முயன்ற காலிஸ்தான் தீவிரவாதிகள்
சத்தம் ஹவுஸில் நடந்த கலந்துரையாடல்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார். அப்போது அவரின் மீது காலிஸ்தானி தீவிரவாதிகள் குழு தாக்குதல் நடத்த முயற்சித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக சாத்தம் ஹவுஸ் வெளியே ஜெய்சங்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த காலிஸ்தானி குழு கூடியது.
கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்த அவர்கள், கலந்துரையாடலுக்குப் பிறகு ஜெய்சங்கர் சாத்தம் ஹவுஸ் இடத்திலிருந்து வெளியேறும்போது, அந்த கூட்டத்திலிருந்து ஒரு நபர் அவரது காரை நோக்கி ஓடி வந்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழித்தார். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
கலந்துரையாடல் விவரங்கள்.
முன்னதாக, ஜெய்சங்கர் செவனிங் ஹவுஸில் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் லாமியுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். அதில் மூலோபாய ஒருங்கிணைப்பு, அரசியல் ஒத்துழைப்பு, வர்த்தக பேச்சுவார்த்தைகள், கல்வி, தொழில்நுட்பம், இயக்கம் மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.
சத்தம் ஹவுஸில் நடந்த கலந்துரையாடலின் போது, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதிக்காக முன்மொழிந்த யோசனையை பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க பிரதமர் நரேந்திர மோடியால் பயன்படுத்த முடியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியாவின் தற்போதைய அணுகுமுறையை உறுதியாகப் பாதுகாத்தார். அதோடு இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பு தலையீட்டிற்கான எந்தவொரு தேவையும் இல்லை என்றார். 370வது பிரிவை ரத்து செய்தல், பிராந்தியத்தில் பொருளாதார மேம்பாடு மற்றும் அதிக வாக்குப்பதிவு உள்ள தேர்தல்கள் உள்ளிட்ட நிலைமையை நிவர்த்தி செய்ய இந்தியா ஏற்கனவே தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இருப்பினும், இந்தப் பிரச்சினையின் தீர்க்கப்படாத பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.