நாட்டின் வறுமை நிலை தொடர்பாக சரியான மதிப்பீட்டை அரசாங்கம் நடத்த வேண்டும்!
புள்ளிவிவரங்கள் துல்லியமாக தெரியாமல் வறுமையை ஒழிக்க முடியாது.

சமூகப் பாதுகாப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல், கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு சார் குழுநிலை விவாதம் இடம்பெறும் இந்த சந்தர்ப்பத்தில், சமூக வலுவூட்டல் தொடர்பான சரியான தரவுகள் மற்றும் குறிகாட்டிகளைப் புரிந்து கொள்ளாமல், தற்போதைய அரசாங்கம் வறுமையை ஒழிப்பதாகப் பேசுவதானது மிகவும் வேடிக்கையான விடயமாகும். அரசாங்கம் முதலில் நாட்டின் வறுமைக் கோட்டை மிகச் சரியாகக் கணக்கிட வேண்டும். இவ்வாறு கணக்கிடாமை பிரச்சினையாக இருந்து வருகின்றது. இதன் மூலம் உண்மையான ஏழ்மையடைந்தோர் எண்ணிக்கையை தீர்மானித்துக் கொள்ள முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி கூட உலக வங்கி அறிக்கைகளையே பயன்படுத்துகிறார். ஆனால் வீட்டு அலகு ஒன்றின் வருமானம் மற்றும் செலவினம், உணவு மற்றும் உணவு அல்லாத செலவீனங்கள் தொடர்பில் முதலில் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதனையே அரசாங்கம் ஆரம்பமாக செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
* புள்ளிவிவரங்களை துல்லியமாக தெரியாமல் வறுமையை ஒழிக்க முடியாது.
ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் 8 ஆவது பக்கத்தில் வறுமை விகிதம் 25.9% என்று கூறப்படுகிறது. 2024 முன்னேற்ற அறிக்கையின்படி, 2025 முதல் 2029 வரையிலான 5 ஆண்டுகளில் பல் பரிமாண வறுமையை எதிர்நோக்கும் 2 மில்லியன் குடும்பங்களை வலுவூட்டுவோம் என்று கூறப்பட்டுள்ளது. 2 மில்லியன் குடும்பங்களை வலுவூட்டுவது சிறந்த விடயம்.
இது நாட்டின் மொத்த வறுமைச் சுட்டியின் பிரகாரம் அமையவில்லை. உலக வங்கி அறிக்கையின்படி 2023 இல் 56 இலட்சம் பேர் வறுமையில் வாடுகின்றனர். புள்ளி விபரங்கள் கூட துல்லியமாக தெரியாமல் வறுமையை ஒழிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
* வறுமையை எவ்வாறு ஒழிப்பது என்பதை ஜனசவிய மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்கள் ஊடாக அறிந்து கொள்ளுங்கள்.
அஸ்வெசும உதவித் தொகையை மட்டும் வழங்குவதன் மூலம் இந்த வறுமையை ஒழிக்க முடியாது. இதற்கு சேமிப்பு, முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி, நுகர்வு என்பன நடக்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களில் இங்கு பணம் வழங்கப்பட்டு நுகர்வு மட்டுமே நடக்கிறது. இவ்வாறு வறுமையை ஒழிக்க முடியாது. வறுமையை ஒழிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் இந்த அரசாங்கத்திடம் இல்லை. ஜனசவிய மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டங்களில் இருந்து பாடம் கற்று, முறையான வறுமை ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
* வரவு செலவுத்திட்டத்தில் கூட வறுமை குறித்த சரியான தகவல்கள் இல்லை.
இந்நாட்டில் வறுமை தொடர்பான தரவுகளோ சரியான புள்ளிவிபரங்களோ இல்லாமல் அஸ்வெசும கொடுப்பணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தகுதியான சிலருக்கு இந்த நிவாரணம் கிடைக்காமல் இருப்பதும், தகுதி உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதும் நடந்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வறுமை ஒழிப்பு தொடர்பான தரவுகளைத் துல்லியமாக தெரியாமலயே தனது வரவு செலவுத் திட்ட உரையினை நிகழ்ந்தினார் என்பதை நான் பொறுப்புடன் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
LIRNE asia கணக்கெடுப்பின்படி, இந்நாட்டில் ஏழ்மையடைந்தோர் 30 இலட்சம் முதல் 70 இலட்சம் வரை காணப்படுகின்றனர் என சுட்டிக்காட்டுகின்றது. மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 40 இலட்சம் பேரளவில் ஏழ்மையடைந்தோர் தரப்பில் அதிகரித்துள்ளனர். இவ்வாறான முரண்பட்ட தரவுகளுடன் வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது. தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களத்திடம் கூட இந்த விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
* கிராம அலுவலர் மட்டத்தில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடுங்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணம் அதிகளவு பங்களிப்பை வழங்கி வந்த போதிலும், ஏனைய மாகாணங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பங்களிப்பையே வழங்கியுள்ளன. எனவே, மாகாணத்திற்கு மட்டுப்படுத்தாமல், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை பிரதேச செயலாளர் மட்டத்தில் இருந்து கணிக்க வேண்டும். முடிந்தால் கிராம உத்தியோகத்தர் மட்டத்தில் இருந்து இந்தக் கணப்பீடுகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
* பட்டதாரிகளுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த வேலைவாய்ப்புகள் எங்கே?
40,000 பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்த அரசாங்கமானது, இன்று வேலை வழங்காமையினால் அந்த 40,000 பேரும் வறுமையின் பக்கம் தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். இந்த பட்டதாரிகளுக்கு எப்போது வேலை வழங்கப்படும் ? இதற்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி ஆளுந்தரப்பில் இருந்தால் அவர்களுக்கும் தீர்வுகளை வழங்கி இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
* வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எங்கே?
மீனவ மக்களுக்கு வழங்குவோம் என வாக்குறுதியளித்த எரிபொருள் மானியம் எப்போது வழங்கப்படும்? வரி விதிக்கப்பட்டு, திறைசேரி இந்த வரிகளை சுரண்டிக் கொண்டு, கமிசன் பெறுகிறது. இவை நீக்கப்பட்டால் எரிபொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என்று ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தார். ஆனால் இன்று இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. எரிபொருள் மானியம் வழங்கப்படும் போது, அதற்கு உரித்துடைய தரப்புக்கு, பிரிவுகளுக்கு அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது எரிபொருள் மானியம் கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் இன்று அந்த மானியங்கள் வழங்கப்படவில்லை. எல்லா விடயங்களிலும் ஏமாற்றமே நடந்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
* விவசாயிகளின் ஓய்வூதியமும் குறைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மற்றும் மீனவர்களின் ஓய்வூதியத் திட்டம் இன்று சீர்குலைந்துபோயுள்ளன. புதிய காப்புறுதித் திட்டமொன்று கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டும், அது நடக்கவில்லை. எனவே இதற்கு முறையான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டால் எதிர்க்கட்சியும் தமது ஆதரவை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
* நீலப் பொருளாதாரத்தை நிலைபேறானதாக கட்டியெழுப்பவும்.
நாட்டைச் சூழவுள்ள 200 கடல் மைல் தூரம் எமது நாட்டுக்கு சொந்தமானது. சர்வதேச சட்டத்தின் மூலம் இது எமக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே நீலப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். இதன் ஊடாக நிலைபேறான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.