”...பேசிய போது சிரிக்கத் தானே செய்தீர்கள்”... மிஷ்கினுக்கு ஆதரவாக வந்த சமுத்திரக்கனி
,
‘பாட்டல் ராதா’ திரைப்பட நிகழ்வில் மிஷ்கினின் பேச்சு அநாகரிகமாக இருந்தாலும், தவறான உள்நோக்கத்துடன் அவர் பேசவில்லை என சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.
‘பாட்டல் ராதா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் தனது பேச்சில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியது மற்றும் இளையராஜாவை ஒருமையில் பேசியது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாடலாசிரியர் தாமரை, இயக்குநர் லெனின் பாரதி, நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதன் பிறகு வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ’பேட் கேர்ள்’ (Bad Girl) படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின், தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருந்தார். இந்த நிலையில், மிஷ்கின் பேசிய வார்த்தைகள் அநாகரிகமாக இருந்தாலும், தவறான உள்நோக்கத்துடன் அவர் பேசவில்லை என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த 'திரு.மாணிக்கம்' படத்தின் வெற்றி விழாவில் மிஷ்கின் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, "அந்த பிரச்சனைதான் முடிந்து விட்டது. மிஷ்கின் எல்லோருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். அது போதவில்லையா? அதற்கான விளக்கமும் சொல்லிவிட்டார். அவர் உணர்ச்சிவயமான மனிதர்.
மிஷ்கின் என்னைப் பார்க்கும் போது கூட ஒரு கெட்டவார்த்தை கூறி அதன்பிறகு என் முதுகில் அடித்து மீண்டும் கெட்ட வார்த்தை சொல்லி தான் பாசமாக தான் நலம் விசாரிப்பார். அவர் அன்பின் உச்சத்தில் தான் இதையெல்லாம் வெளிப்படுத்துகிறார். அதை நான் தவறாக பார்க்கவில்லை. அது அவருடைய இயல்பான குணம். அன்பின் உச்சத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கும்.
நம்ம கிராமத்திற்கு சென்றால் கெட்ட வார்த்தைதான் அன்பை வெளிப்ப்படுத்தும் வார்த்தைகள். அதை தவறாக பார்க்கமாட்டோம். நாங்கள் இயல்பாக அப்படித் தான் பேசுவோம். அதே மாதிரி மேடையிலும் மிஷ்கின் பேசிவிட்டார் அவ்வளவுதான். மிஷ்கின் அன்பின் உச்சத்தில் பேசி விட்டார். மிஷ்கின் செய்தது தவறே இல்லை. எல்லோரும் விமர்சித்ததற்கு அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அதையும் மீறி என்ன செய்ய வேண்டும். இரு கரம் கூப்பி உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமா?
அவரைப் பற்றி புரிந்தவர்களுக்கு தெரியும். புரியாதவர்களுக்குதான் இந்த மன்னிப்பு. என்னுடைய அண்ணனுக்காக நானும் கூட உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.
மேலும், மிஷ்கின் பேசும்போது நீங்களும் சிரித்துக் கொண்டுதானே இருந்தீர்கள். அதற்கும் கைதட்டல் கொடுத்தீர்கள். அப்போதெல்லாம் கேள்வி கேட்காமல் இப்ப ஏன் கேட்கிறீர்கள்? என பத்திரிகையாளர்களையும் விமர்சித்து பேசினார் சமுத்திரக்கனி.
முன்னதாக நிகழ்வில் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளியீட்டில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து பேசிய சமுத்திரக்கனி, “நிறைய சின்ன பட்ஜெட் நல்ல படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. மற்ற படங்களுக்கு ஆளே வரவில்லையென்றாலும் அதற்கான காட்சிகள் தொடர்ந்து கிடைக்கின்றன. என்னுடைய ஊரான விருதுநகர் மாவட்டத்திலேயே திரு.மாணிக்கம் படத்திற்கு காட்சிகள் கிடைக்கவில்லை. இதற்கான தீர்வை யாரிடம் போய் கேட்பது என தெரியவில்லை.
இந்த படத்திற்கு மட்டுமில்ல என்னுடைய முந்தைய படங்களான அப்பா, சாட்டை உட்பட பல சின்ன பட்ஜெட் படங்களுக்கும் இதுதான் நடக்கிறது. ஒரு படம் வெளியான நான்கு நாட்களிலேயே மக்களை சென்றடைய வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான். நாம் வியாபாரம் இல்லை. அதனால் இந்த விசயங்களெல்லாம் தெரியவில்லை. அதனால் தான் நான் சொந்தமாக படம் தயாரிப்பதை விட்டுவிட்டேன்.
ஓடிடியால்தான் திரு.மாணிக்கம் திரைப்படம் மக்களைச் சென்றடைந்திருக்கிறது. ஓடிடிதான் திரு.மாணிக்கம் போன்ற படங்களை காப்பாற்றுகிறது” என பேசினார். மேலும் திரு.மாணிக்கம் திரைப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.