இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் பிரித்தானியா கொண்டுள்ள நம்பிக்கை: சுயாதீன விசாரணைக்கு அழைப்பு
.
இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எனினும், இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், யுத்த கால மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறல் எதுவும் இல்லை என ஜெனீவாவில் உள்ள பிரித்தானிய தூதரகம் கூறியுள்ளது.
“இலங்கையில் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை, இது அவர்களின் குடும்பங்களுக்கு தொடர்ந்து வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆதரவைக் கொண்ட ஒரு விரிவான நிலைமாறுகால நீதி செயல்முறை முன்னெப்பதையும் விட மிகவும் அழுத்தமானது” என்று தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கடத்தல்கள், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் பற்றிய அனைத்து அறிக்கைகள் உட்பட, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) அறிக்கையில் முன்னிலைப்படுத்தப்பட்ட மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
“அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மதிக்கப்பட வேண்டும். சிவில் சமூகம், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் துன்புறுத்தல்களால் நாங்கள் கவலையடைகிறோம்.
இது தேசிய நல்லிணக்கம் மற்றும் எதிர்காலத்தில் அமைதியான சமூகத்தை கட்டியெழுப்புவதில் அவர்களின் முக்கிய பங்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது,” என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து, நம்பிக்கையை கட்டியெழுப்புவது மற்றும் நிலைமாறுகால நீதி செயல்முறைகள் உள்ளிட்ட மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
“இவை பக்கச்சார்பற்ற, சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் அர்த்தமுள்ள பொறுப்புணர்வை வழங்க வேண்டும்” என்று பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் பிரித்தானியா மேலும் கூறியுள்ளது.