வளமான நாட்டையும் அழகான வாழ்வையும் மக்களுக்கு உரித்தாக்குவதற்கான சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார்
.
இந்த தேர்தலுக்கப் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான சவாலையும், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான சவாலையும், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுப்பதற்கான சவாலையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார்.
எனவே, இன்று இட்ட இந்தக் கையொப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான கையொப்பமிடலாக அமையும் என்பது நிச்சயம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ம.வி.மு. தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்ட சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும் நெருக்கடிக்குள் இருந்த ஆளும் குழுவினால் எமது நாடு அழுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து எமது நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான சவாலை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று நாங்கள் இட்ட இந்த கையொப்பம் நிச்சயமாக வெற்றிக்கான கையொப்பமிடலாக அமையும்.
ஏனென்றால், இப்பொழுது ஏனைய பாசறைகள் ஒவ்வொரு குழுவாகப் பிரிந்து, சிதைந்து அழுக்குகளை சேகரிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியாகிய நாம் ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே எமது பயணத்தை சரியாக ஆரம்பித்தோம். நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையிலும் ஒழுங்கமைந்த வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி இற்றைவரை இந்தப் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கின்றோம்.
இன்னும் எங்களுக்கு ஒரு மாதத்தை விட சற்று அதிகமான நாட்கள்தான் இருக்கின்றன. இந்தக் கொஞ்ச நாட்களில் நாங்கள் மிகவும் பலம்பொருந்திய வகையில் எமது தேர்தல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
கிராமங்களில் மிகவும் வலிமைமிக்க ஒரு ஒழுங்கமைப்பும் அதைப்போலவே, தேசிய மக்கள் சக்திக்கு சொந்தமான பலம்பொருந்திய குழுக்களும் இருக்கின்றன. எனவே, இந்த தேர்தலை நிச்சயமாக எங்களால் வெற்றிகொள்ள முடியும்.
இந்த தேர்தலுக்கப் பின்னர் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான சவாலையும், எமது நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான சவாலையும், மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உரித்தாக்கிக் கொடுப்பதற்கான சவாலையும் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொள்ளத் தயார். எனவே, இன்று இட்ட இந்தக் கையொப்பம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகரமான கையொப்பமிடலாக அமையும் என்பது நிச்சயம் என்றார்.