ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் 54 பேர் விடுதலை - மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!
வழக்குப்பதிவு செய்யப்பட்ட 64 பேரில் 4 பேர் காலமானார்கள். மேலும், 6 பேர் மீதான வழக்கு தனியே நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் 54 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
இந்த சூழலில் 2017-ல் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் அலங்காநல்லூர் வாடிவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் மாணவர்கள் இளைஞர்கள் என 64 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மெரினா, சேலம், கோயம்புத்தூர், மதுரை என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது மத்திய அரசு, 'ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்' என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 21.01.2017 அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது. ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம்; நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன. பின்னர் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அலங்காநல்லூர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 64 பேர் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு ‘ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்பு மாநாடு’ மதுரையில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்' என்று அறிவித்தார்.
ஆனால், மதுரை மாவட்டத்தில் சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 64 பேரில் 4 பேர் காலமானார்கள். மேலும், 6 பேர் மீதான வழக்கு தனியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எஞ்சிய 54 பேர் மீதான வழக்கில் மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் இன்று தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து அவர் தீர்ப்பு வழங்கினார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சரவணன், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கடந்த 9 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்து சென்றனர். இவர்களது போராட்டத்தால் தான் தற்போது ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
இந்நிலையில், அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பல மாவட்டங்களில் இது போன்ற வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அவற்றை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கை சந்தித்த அனைவருக்கும் பாராட்டு விழா நடத்த வேண்டியது தமிழக அரசின் கடமை” என்று கேட்டுக் கொண்டார்.


