Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலின் கைதும் அதனால் உணரப்பட்ட உண்மைகளும்!

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டமை இந்நாட்டின் வரலாற்றில் முதற்பதிவு

ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதிப் பதவியிலிருந்த காலத்தில்  தனது வெளிநாட்டுப் பயணமொன்றின்போது அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அரச குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது பிணைமறுக்கப்பட்டு சிறைக்கனுப்பப்பட்டபோதும் சிறைச்சாலை வைத்தியசாலை, பின் கொழும்பு தேசிய வைத்திய சாலை என நோயாளிக்கட்டிலில் அமர்ந்தவாறே அதனைக் காரணம் காட்டி மூன்று நாட்களின் பின் பிணை பெற்றமை சென்ற வாரத்தில் இந்த நாட்டு மக்களை ஆக்கிரமித்த முக்கிய செய்தியாகும்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டமை இந்நாட்டின் வரலாற்றில் முதற்பதிவு என்பதற்கப்பால் எதிர்காலத்தில்  அது தற்போதைய அரசியற் காட்சிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.  அதேவேளை இந்தக் கைது நடவடிக்கையானது நாட்டின் அரசியல் களநிலைமை தொடர்பான பல்வேறு உண்மைகளை உணரவைத்துள்ளது.  இது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்குங்கூடப் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.  ஆளுந்தரப்பினரைப் பொறுத்தமட்டில் எதிர்பார்த்த விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை மட்டுமன்றி அவர்கள் எதிர்பாராத விடயங்கள் பலவும்கூட தற்போது உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 நாட்டில் மாற்றங்களை வேண்டிநின்ற மக்களின் விருப்பமும் அதனை ஏற்படுத்துவோம் என்ற தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளும் ஒரே புள்ளியில் இணைந்ததன் காரணமாக தேர்தலின் மூலம் தேசிய மக்கள் சக்தியினரால் பலமானதொரு ஆட்சியைப் பெற முடிந்தது. எனினும் அவர்கள் கூறிய,மக்கள் விரும்பிய மாற்றங்களை இந்நாட்டில் இலகுவில் ஏற்படுத்த முடியாதென்ற உண்மையை ஏலவே பல விடயங்களில் உணர்ந்துள்ளதைப் போல, ஊழல்முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னைய ஆட்சியாளர்களுக்குரிய நீதிமன்றத் தண்டனைகளை வழங்குவதும் இலகுவானதொன்றல்ல என்ற உண்மையை ரணிலின் கைதின் பி்னனரான நிலைமை அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.

மாற்றத்தை ஏற்படுத்தவதில் முக்கியமான மூன்று படிமுறைகள் உள்ளன. அதன் முதற்படி ஏலவே இருக்கும் கட்டமைப்பை அல்லது விடயத்தை அகற்றுதல். அடுத்தபடி அவ்விடத்தில் விரும்பிய புதிய மாற்றத்தை பதித்தல். இறுதிப்படி புகுத்திய மாற்றத்தை நிலைப்படுத்துதல்.
 இவையொன்றும் இலகுவான விடயங்களல்ல. அதுவும் நீண்டகாலம் நிலவி ஆழமாக வேரூன்றி விழுதுகள் விட்டுவிட்ட இந்நாட்டின் துருப்பிடித்த அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவது என்பது ஒரு வகையில் கல்லில் நாருரிப்பதற்கு ஒப்பானது.
 பல நாடுகளில் கட்டமைப்பு மாற்றங்கள் புரட்சிகளின் மூலமே சாத்தியமானது. அவ்வாறில்லாது நிலவும் ஜனநாயக வழிகளிலினூடாக ஏற்படுத்தப்பட்ட   தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்ததோ இல்லையோ ஆனால் நாட்டு மக்கள் கடந்த ஜனாதிபதி,பாராளுமன்றத் தேர்தல்களின் மூலம் மாற்றத்துக்காக மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியதிகாரத்தை அவர்களின் கைகளில் வழங்கிவிட்டனர்.

ஆனால் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியவர்களால்தான் நினைத்தவாறு மாற்றத்தை ஏற்படுத்த முடியாமல் உள்ளது. விலைகளைக் குறைப்போம், வரிகளைக் குறைப்போம்,சம்பளத்தைக் கூட்டுவோம், வேலைவாய்ப்பைப் பெருக்குவோம், ஊழியருக்கு சலுகைகளை வழங்குவோம், தனியார் மயமாக்கலைத் தடுப்போம், சர்வதேச நாணய நிதியத்தை ஓட ஓட விரட்டுவோம் என்று வீறாப்பு பேசியவர்கள் அவை இலகுவானவையல்ல என்ற யதார்த்தை இப்போது புரிந்து கொண்டஉள்ளனர்.  அவற்றைப் போலவே முன்னைய ஊழல் பெருச்சாளிகளைப் பொறிவைத்துப் பிடிப்பதும் எவ்வளவு கடினமானது என்பதை ரணிலின் கைதும் அதன் பின்னரான களநிலைமைகளும் உணரவைத்துள்ளது.

 அதாவது மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய முதல் தேவையான ஏலவே இருக்கின்ற கட்டமைப்பை உடைப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை ஒவ்வொரு முன்னெடுப்பின்போதும் தேசிய மக்கள் சக்தி உணர்ந்து வருகிறது.  மீகாமன் எவ்வளவு திறமையானவனாக இருந்தாலும் அவனது கப்பலும் பணியாளர்களும் அவனுக்கு இசைந்ததாக இருக்கவேண்டியது மட்டுமன்றி அவனது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட வானிலையும் அவனுக்குச் சாதகமாக இருந்தால் மட்டுமே அவனால் தான் நினைத்தவாறு கரையைத்தொட முடியும்.

அதுபோலவே அனுரவும் தோழர்களும் எவ்வளவு முற்போக்குடையவர்களாக இருந்தாலும்கூட  நாட்டில் நன்கு வேரூன்றிவிட்ட அரசியல், பொருளாதார,நிர்வாக, நீதிக்கட்டமைப்புகளும் வெளியுலக அரசியல், பொருளாதார அழுத்தங்களும் மாறாதவரை மாற்றம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருக்கப் போவதில்லை. 

 தேசிய மக்கள் சக்தி இன்று எதிர்கொள்ளுகின்ற சவால்கள் இவைதான். தனது வெளிநாட்டுப் பயணத்தின்போது தனிப்பட்ட பயணமொன்றுக்காக ரணில் ஒருகோடி அறுபது இலட்சம் வரையிலான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் மற்றும் தொடர்புடைய இருபதுக்கு மேற்பட்டோரின் வாக்குமூலங்கள் மட்டுமன்றி குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் என்பவற்றின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.  நீதிமன்றமும் அக்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சட்டங்களின் அடிப்படையில் தகுந்த காரணங்களின்றி பிணை வழங்க முடியாத நிலையில் அவரை தடுப்புக்காவலில் வைத்திருக்க உத்தரவிட்டது.

ஆனால் இவ்வழக்கில் அரச தரப்பில் தோன்றிய பிரதி வழக்குரைஞர் திலீபா பீரிஸ் கூறியதுபோல ரணில் ஒரு வினாடிகூட சிறையில் இருக்கவில்லை என்பதே யதார்த்தம். அதற்குமேலாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரணில்  இருந்தபோது அவரது உடல்நிலை பற்றிய விபரங்களை ஊடகங்களுக்கு வழங்கிய பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் றுக்‌ஷான் வல்லன என்பவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பானவரல்லர் என்பதுடன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பதற்கான அதிகாரமும் கொண்டவரல்லர். அதற்கு மேலாக அவர் ரணிலிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வலய அமைப்பாளர் பதவி பெற்ற ஒருவர்.  அப்பேற்பட்ட ஒருவர் தனது ஊடக அறிக்கைகள் மூலம் ரணிலின் உடல்நிலை தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட சித்தரிப்பு ஒன்றை உருவாக்கியதையும் காணமுடிந்தது.

இவற்றிலிருந்து தற்போதுள்ள அரச கட்டமைப்புகள் எவ்வாறு குற்றவாளிகளுக்குச் சார்பாக செயற்படும் அல்லது குற்றவாளிகள் எவ்வாறு அவற்றைத் தமக்குச் சார்பானவையாக மாற்றிக் கொள்வர் என்ற  உண்மையை மீண்டுமொருமுறை உணரவைத்துள்ளது.   மறுபுறத்தில் ரணில் போன்ற ஒருவரினது கைதானது முன்னைய ஆட்சியாளர்களையும் அவர்களின் பங்காளிகளையும் எவ்வாறு எதிர்வினையாற்றச் செய்யும் என்ற உண்மையை ஆட்சியாளர்களை மட்டுமல்ல நாட்டுமக்களையும் உணரவைத்துள்ளது.  முன்னைய காலங்களில் நாட்டைப்பாதிக்கும் எத்தனையோ விடயங்கள் இடம்பெற்றபோது நாட்டுக்காகவோ அல்லது மக்களுக்காகவோ ஒன்றுகூடாத தலைவர்கள் அனைவரும் ரணில் இவ்விடயத்தில் தவறு புரிந்துள்ளார்,அது சட்டப்படி குற்றம் என அறிந்திருந்தும் அவரைக் காப்பாற்றுவதற்காக ஒன்று கூடியது என்பது  உண்மையில் ரணிலுக்காக அல்ல அடுத்து தம்மை நோக்கி வரவுள்ள அதுபோன்ற ஆபத்துக்களைத் தடுப்பதற்கான ஒரு முன்னாயத்தமே.

அதுமட்டுமல்ல இதனை மூலதனமாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதன்மூலம் இழந்தவிட்ட தமது அதிகாரங்களையும் வசதிகளையும் மீண்டும் பெறுவதற்கான ஒரு நப்பாசையும்கூட. இதன்போது அத்தலைவர்கள் உதிர்த்த வார்த்தைகளோ போலியானவை மட்டுமன்றி நகைச்சுவையானவையும்கூட.
தாம் ஆட்சியதிகாரத்தில் இருந்தபோது அரசியலமைப்பை மதிக்காதவர்கள் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கென்றும், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்தவர்கள் ஜனநாயகத்தைப் மீட்டெடுப்பதற்கென்றும்,மனித உரிமைகளை மதிக்காதவர்கள் மனித உரிமையைப் பாதுகாப்பதற்கென்றும் தாம் ஒன்றுகூடுவதாக அவர்கள்  சொன்னதை நாட்டு மக்கள் நம்பியதாகத் தெரியவில்லை. 

இதில் தமிழ்த் தலைவர்களும் விதிவிலக்கில்லை. ஏனெனில் வர்க்க நலனைப் பேணுவதற்கு மொழி ஒருபோதும் தடையாக இருக்காது. நாட்டுக்கு நன்மை செய்த தலைவர்களைக் கைது செய்யக்கூடாது எனச்சிலரும், பெரிய குற்றமொன்றுக்கு கைது செய்திருந்தால் கதைக்கமாட்டோம் எனச்சிலரும், நீதிமன்றுக்குக் கொண்டு சென்றிருக்க் கூடாது எனச்சிலரும், வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கக்கூடாது, அவ்வாறு செய்தாலும் பிணை வழங்கியிருக்க வேண்டும் எனச் சிலரும் முன்னுக்குப் பின் முரணாகத் தமது ஆதங்கத்தையும் வர்க்க விசுவாசத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதற்கு ஒருபடி மேலே, 26 ஆம் திகதி நீதிமன்றத்தின் முன்கூடியவர்களில்  தமிழ்த் தலைவர் ஒருவரிடம்,இவர் முன்னாள் அமைச்சரும்கூட ஊடகவியலாளர் ஒருவர் எதற்காக இங்கு ஒன்றுகூடியுள்ளீர்கள் என்று கேட்க “ என்ன கூறுவது, இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்று அத்தனை முன்னாள் அரசியல்வாதிகளின் உண்மையான நோக்கத்தைப் போட்டுடைத்தார். ரணிலுக்கு பிணை வழங்கப்படும் என்று சாதாரண மக்களுக்கே தெரிந்திருந்திருந்த ஒரு நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னூறுக்கு மேற்பட்ட அரசியல் சட்டத்தரணிகள் தமது கறுப்பு மேலங்கிகளைத் தூசிதட்டி மாட்டிக்கொண்டு நீதிமன்றத்தில் ஒன்றுகூடியதை கோமாளித்தனமாகவே மக்களால் நோக்கப்பட்டது. 

ஏனெனில் நீதிமன்றம் ஒருபோதும் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பிலான சட்டத்தரணிகளின் எண்ணிக்கையை வைத்துத் தீர்ப்பு வழங்குவதில்லை. இவர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடினாலும் இவர்களின் பின் பொதுமக்கள் இப்போது ஒன்றுகூடத் தயாராகவில்லை என்ற உண்மையையும் இதன்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். அது மட்டுமன்றி இதுபோன்ற விடயங்களுக்கு வழமையாக குரல்கொடுக்கும் பௌத்த துறவிகள் அமைதியாக இருந்தமை அவர்களுக்கு ஏமாற்றம் என்றாலும் நாட்டுக்கு அது வரப்பிரசாதம் எனலாம். இவர்கள் எல்லோராலும் தப்பாமல் பாடப்பட்ட ஹோரஸ் பாடல் என்னவெனில் ரணிலின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்பது.

இதில் என்ன அரசியல் பழிவாங்கல் உள்ளது?  ஒன்று குற்றச்சாட்டு பொய்யானதன்று. இரண்டாவது தேசிய மக்கள் சக்திக்கு ரணில் எந்தவகையிலும் போட்டியாக இருக்கப் போவதில்லை. மூன்றாவது பட்டலந்தை உட்பட ஜே.வி.பி க்குச் செய்தவைக்கு எதிரான செயற்பாடு என்று கருதினாலும்கூட அது அரசியல் பழிவாங்கலல்ல.  உண்மையில் அது பாரிய குற்றம்.  உண்மையில் இந்த எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் எந்தக் கருத்தையும் அவர்களின் அரசியல் ஆதரவாளர்கள் தவிர எவரும் கருத்திலெடுத்தத்தாகத் தெரியவில்லை. இவைகளினூடாக மக்களுக்கு உணர்த்தப்பட்ட உண்மை என்னவெனில் எதிரெதிர் அரசியல் முகாம்களில் இருந்து இவர்கள் ஒருவரையொருவர் வைதுகொண்டிருந்தது எல்லாம் வெறும் நடிப்பு என்றும் தமது அரசியல் இருப்புக்கு ஆபத்து வரும்போது இவர்கள்  அனைவரும் ஒரே வர்க்கம் என்பது மட்டுமன்றி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்பதாகும்.

அது மட்டுமன்றி தம்மிடையே அரசியல் சார்பற்ற முற்போக்குவாதிகளாக இதுவரை வேஷம போட்டிருந்து  பலரது உண்மையான முகம் எப்படியானது என்பதையும் இதன்மூலம் மக்கள்அறிந்து கொள்ள முடிந்தது.  ரணிலின் கைதுமூலம் எதிரணியினருக்கு குறிப்பாக ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களுக்குச் உணர்த்தப்பட்ட உண்மைகள் மற்ற எல்லோரைவிட முக்கியமானவை. ஏனெனில் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்களின் கைகள் கறைபடிந்தவை என்பது பகிரங்க இரகசியம்.

இதனையே ரணிலின் கைதை அடுத்து ஒன்றுகூடிய அரசியல் தலைவர்களில் 90 % ஆனவர்களின்மீது நீதிமன்றில் வழக்குகள் உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுள்ளும் ராஜபக்‌ஷ சகோதரர்களின் மீதே அதிகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஏலவே அக்குடும்பத்தின் வாரிசுகளான நாமல், யோஜித,சஷீந்திர போன்றவர்கள் விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். எனவே ரணிலின் கைதின்பின் தங்கள் மீது எந்தவேளையிலும் விலங்குகள் மாட்டுப்படலாம் என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது.
 உண்மையில் ரணிலின் கைது ஏனையவர்களைக் கைது செய்வதற்கான ஒரு ஒத்திகை என்பது பல அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக உள்ளது.

அது மட்டுமன்றி இவ்வாறான கைதுகள் பாரிய குற்றங்களுக்கான நடவடிக்கை தொடர்பான ஒத்திகையாகவும் இருக்கக் கூடும். ரணிலின் கைதானது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளை மறைப்பதற்காக என்றும், தமது ஆட்சிமீது மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை குறைப்பதற்காக என்றும்,அடுத்த ஆண்டில் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலை மையமாகக் கொண்டது என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும்கூட அவற்றில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் ரணிலின் கைதுக்கு முன்னதாகவே முன்னைய அரசியல்வாதிகள் மற்றும் உயர்நிலை அரச அதிகாரிகள்மீது ஊழல் தொடர்பான வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பது மட்டுமன்றி அவ்வாறான வழக்குகளின் மூலம் சிலர் நீண்டகாலச் சிறைத்தண்டனையையும் பெற்றுள்ளனர்.

எனவே கைதுகள் புதியவையல்ல. இந்தத் தொடரில் இப்போது முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது மட்டுமே புதியது. இது தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் காலத்தில நாட்டைக் கொள்ளையடித்தவரகளைக் கூண்டில் நிறுத்துவோம் என்று கூறியதை ஏன் இன்னும் செய்யவில்லை என்ற ஆதங்கம் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது.  பெரிய முதலைகளை விட்டுவிட்டு சிறிய மீன்குஞ்சுகளையே அரசாங்கம் குறிவைக்கிறது என்ற ஆதங்கமும் உண்டு.  அதுமட்டுமன்றி நாட்டில் நிர்வாக அதிகாரிகள் மட்டங்களிலும் அவ்விடயத்தில் பெரிய மாற்றங்கள்  ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்ற எண்ணமும் அம்மக்களிடம் உண்டு.

ஆனால் அது எவ்வளவு கடினமானது என்பதை ரணிலின் கைது மூலம் ஆட்சியாளர் மட்டுமன்றி பொதுமக்களும் இப்போது நன்கு புரிந்து கொண்டிருப்பர்.  அதுமட்டுமன்றி கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்களும் நிகழ்காலத்தில் அதைத் தொடரவிரும்புவர்களுக்கும்கூட எதிர்காலத் தில் நிலைமை எப்படிய்யிருக்கும் என்ற உண்மையை உணர்ந்திருப்பர்.  எத்தகைய தடைகள் வந்தாலும் நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் விரும்பம் மட்டுமன்றி அதனை தற்போதைய அரசு செய்யும் என்ற நம்பிக்கையுமாகும்.
சட்டத்துக்கு மேலாக எவருமில்லை. குற்றம்புரிந்த அனைவரும் தராதரம் பாராது தண்டிக்கப்டுவர் என்று ரணிலின் கைதின் பின் மீண்டும் அனுர உறுதிப்படுத்தியதை மக்கள் நம்புகிறார்கள்.

 அது முன்னைய ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது மட்டுமன்றி தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரிகள்மீதும் இருக்கவேண்டுமென்பதே இந்நாட்டை நேசிப்போரின் விருப்பமாகும்.