ஒன்றிணைந்து செயற்படுவதற்கான எதிரணிக் கட்சிகளின் முயற்சிகள்!
.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலம் இருக்கின்ற போதிலும், ஆட்சிமுறையில் அகங்காரம் இல்லாத ஆரோக்கியமான ஒரு போக்கைக் காணக் கூடியதாக இருக்கிறது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் கொண்டிருந்த முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் ஆட்சிமுறையின் எதிர்மறையான அனுபவங்கள் எமது நாட்டு மக்களுக்கு இருக்கிறது.
முன்னைய போக்குகளில் இருந்து வேறுபட்ட முறையில் தங்களது ஆட்சிமுறை இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் அரசாங்கத்தின் மற்றைய தலைவர்களும் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற போதிலும், மக்கள் கொண்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முறையில் செயற்படுவதில் அரசாங்கம் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறது என்பது வெளிப்படையானது.
எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை, தெற்கில் உள்ள பழைய கட்சிகளாக இருந்தாலென்ன, வடக்கில் உள்ள தமிழ்க்கட்சிகளாக இருந்தாலென்ன இரு தேசிய தேர்தல்களுக்கு பின்னரான புதிய அரசியல் சூழ்நிலையில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. தற்போது அவை இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.
இந்த முயற்சிகளினால் தற்போதைய அரசியல் நிலக்காட்சியில் எந்த உருப்படியான மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வலுவான சந்தேகம் எழுகிறது. அதற்கு காரணம் எதிரணி கட்சிகளின் மக்கள் செல்வாக்கு தொடர்பான நிலைவரமேயாகும்.
நீண்டகாலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு (ஜே.வி.பி.) இருந்த மக்கள் ஆதரவைக்கூட தற்போது கொண்டிருக்கவில்லை. அதற்கு அதன் தலைவர்களின் கொள்கைகளும் செயற்பாடுகளுமே பிரதான காரணம். அத்துடன் இரு கட்சிகளும் தொடர்ச்சியாக பிளவுகளுக்கு உள்ளாகின.
ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வேகத்தில் மக்கள் மத்தியில் அமோக செல்வாக்கைப் பெற்று அதிகாரத்துக்கு வந்ததோ அதே வேகத்தில் அதிகாரத்தையும் ஆதரவையும் இழந்து விட்டது. தங்களிடமிருந்து விலகிப்போனவர்களை மீண்டும் வந்து இணையுமாறு ராஜபக்சாக்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், எவரும் திரும்பிவந்ததாக இல்லை. அவர்களிடம் திரும்பிவருவதற்கான காரணமும் இல்லை.
ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவை எதிர்நோக்கும் நெருக்கடிகள் காரணமாக மாத்திரமே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குறைந்தளவு மக்கள் ஆதரவுடன் என்றாலும் இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அண்மைக்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இரு தேசிய தேர்தல்களிலும் அடைந்த படுமோசமான தோல்விகளுக்கு பிறகு தங்களது பரிதாபமான நிலையை உணர்ந்து கொண்ட இரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் மீண்டும் இணைந்து செயற்பட்டால் எதிர்காலத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு சவாலை தோற்றுவிக்க முடியும் என்று நம்புவதாக தெரிகிறது.
இணைந்து செயற்படுவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் காட்டியிருக்கும் சாதகமான சமிக்ஞைக்கு உடனடிக் காரணம் விரைவில் நடைபெறவிருப்பதாக நம்பப்படும் உள்ளூராட்சி தேர்தல்களேயாகும். இரு தலைவர்களுக்கும் இடையிலான தலைமைப் போட்டியையும் தன்னகம்பாவத்தையும் தவிர, இரு கட்சிகளும் தனித்தனியாக இயங்குவதற்கு எந்த அரசியல் அடிப்படையும் கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க மூன்று தசாப்த காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். அந்த கட்சியின் முன்னைய எந்த தலைவரும் விக்கிரமசிங்கவை போன்று மிகவும் நீண்டகாலமாக தலைமைத்துவத்தை வகித்ததில்லை. தேர்தல்களில் தொடர்ச்சியான தோல்விகள் மற்றும் கட்சியின் கட்டமைப்புகளின் சீர்குலைவுக்கு பின்னரும் கூட கட்சியின் தலைவர் பதவியை விட்டுச் செல்வதற்கு விக்கிரமசிங்க தயாராயில்லை. அதேவேளை, அவரைத் தவிர, வேறு உருப்படியான தலைவரைக் கண்டுபிடிக்கவும் முடியாத பரிதாப நிலையில் அந்த கட்சி இருக்கிறது.
தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்திய விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராக கட்சிக்குள் கிளர்ச்சி செய்து களைத்துப்போன பின்னரே சஜித் பிரேமதாச 2020 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக புதிய கட்சியை அமைத்தார். விக்கிரமசிங்கவுடன் இருந்தால் தேர்தல்களில் வெற்றிபெறமுடியாது என்ற ஒரே காரணத்துக்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பாலான அரசியல்வாதிகள் பிரேமதாசவுடன் இணைந்தார்கள்.
தேர்தல் தோல்விகளை காரணம் காட்டி விக்கிரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தனக்கு தரவேண்டும் என்று கேட்ட பிரேமதாசவும் இப்போது இரு ஜனாதிபதி தேர்தல்களில் தோல்வியைக் கண்டு விட்டார். இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் மிகவும் கூடுதலான காலம் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த விசித்திரமான பெருமைக்குரியவர் விக்கிரமசிங்க. இப்போது பிரேமதாசவும் இரண்டாவது தடவையாக எதி்க்கட்சி தலைவராக இருக்கிறார். அவரது அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது அவரும் தனது முன்னாள் தலைவரை போன்று நீண்டகாலம் எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
விக்கிரமசிங்கவின் தலைமைத்துவ பாங்கில் அடையாளம் காணப்பட்ட அதே குறைபாடுகளுக்காக தற்போது பிரேமதாச மீதும் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி ஓரளவுக்கேனும் பலமானதாக இருந்தால் பிரேமதாசவை கைவிட்டு பெரும்பாலான அரசியல்வாதிகள் எப்போதோ விக்கிரமசிங்க பக்கத்துக்கு வந்திருப்பார்கள். மாற்று வழியில்லாத காரணத்தினாலேயே அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் சேர்ந்த அரசியல்வாதிகள் இணைந்து செயற்படுவதற்கு விரும்பினாலும் கூட, விக்கிரமசிங்கவுக்கும் பிரேமதாசவுக்கும் இடையிலான தன்னகங்கபாவ போட்டி அந்த முயற்சிகளுக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து அவர்களில் ஒருவர் போட்டியிட்டிருந்தால் அநுரா குமார திசாநாயக்க நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கமாட்டார். மக்கள் செல்வாக்கை இழப்பதற்கான சகல அம்சங்களும் தன்னகம்பாவத்தில் இருக்கிறது என்பதற்கு அரசியலில் விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் பிரகாசமான உதாரணங்கள்.
அதேவேளை, அவர்கள் இருவரின் தலைமையிலும் அமையக்கூடிய எந்தவொரு கூட்டணியும் மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய சாத்தியம் பெரும்பாலும் தற்போதைய சூழ்நியைில் இல்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் பாரிய எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த மக்கள் பொருளாதார இடர்பாடுகளில் தணிவைக் காணமுடியாத நிலையில் அரசாங்கத்தின் மீது ஓரளவு அதிருப்தியடைகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், பொருளாதார நெருக்கடி உட்பட இன்றைய சகல பிரச்சினைகளுக்கும் காரணமான தவறான ஆட்சிமுறைக்கு பொறுப்பான பழைய கட்சிகள் எந்த புதிய கோலத்தில் வந்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்று கூறமுடியாது.
முன்னைய காலத்தைப் போன்று தற்போது மக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே நெடுகவும் விசுவாசமாக இருப்பதாக கூறமுடியாது. மக்களிடம் இன்று நிரந்தரமான அரசியல் விசுவாசங்கள் இல்லை. அதன் காரணத்தினால் தான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் மூன்று சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 43 சதவீதமான வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. விக்கிரமசிங்கவும் பிரேமதாசவும் ஜனாதிபதி தேர்தல்களில் பெற்ற வாக்குகளை அவர்களின் தலைமையிலான கூட்டணிகளினால் பாராளுமன்ற தேர்தலில் பெறமுடியவில்லை.
இதுகாலவரை மற்றைய கட்சிகள் பெற்ற வாக்குகளே பெருமளவில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த இரு தேர்தல்களிலும் கிடைத்தது. அதனால், இலங்கை பாராளுமன்ற அரசியல் காணாத பெரும்பான்மைப் பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய மக்கள் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதில் காண்பிக்கும் நேர்மையையும் அக்கறையையும் பொறுத்தே அதற்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவார்கள் என்பதை ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் உணர்ந்துகொள்வது அவசியம். மாறிவரும் அரசியல் சூழலில் நிரந்தரமான கட்சி விசுவாசம் என்பது மக்கள் மத்தியில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
தமிழ் தேசிய கட்சிகளின் நிலை
=================
இது இவ்வாறிருக்க, பாராளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த தமிழ் தேசிய கட்சிகளும் ஐக்கியமாகச் செயற்படுவதற்கான முயற்சிகளில் அக்கறை காட்டுகின்றன. இந்த முயற்சிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே முன்னரங்கத்தில் நின்று முன்னெடுக்கிறார். அவர் முதலில் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனைகளை தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதை நோக்கமாகக் கொண்டே இந்த முயற்சிகளில் இறங்கியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அத்துடன் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் சில தமிழ் கட்சிகளும் சிவில் சமூக அயைப்புக்களும் சேர்ந்து அமைத்து செயலிழந்துபோன தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அரசியல் தீர்வுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் நோக்குடனேயே அவர்களின் இந்த ஐக்கிய முயற்சிகள் அமைந்திருக்கின்றன.
சிறீதரன் இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்கின்ற போதிலும், இலங்கை தமிழரசு கட்சி உத்தியோகபூர்வமாக சம்பந்தப்படவில்லை. தமிழரசு கட்சியின் தலைவர்களில் சிறீதரன் கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவதில் அண்மைக்காலமாக ஆர்வம் காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவர் என்ற வகையில் சீறீதரன் தனியாக இந்த ஐக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்குடன் கட்சியின் மத்திய செயற்குழு தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனைள் தொடர்பில் மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு ஏழு பேரைக்கொண்ட குழுவை கடந்தவாரம் நியமித்தது. கஜேந்திர குமாருடனான பேச்சுவார்த்தைகளில் தமிழரசு கட்சி கலந்து கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆனால் மத்திய செயற்குழுவின் தீர்மானம் சிறீதரன் பேச்சுவார்த்தைகளில் தனியாக பங்கேற்பதற்கு தடையாக இருக்கிறது. முன்னைய சில சந்தர்ப்பங்களில் கட்சியின் உத்தியோகபூர்வமான தீர்மானங்களுக்கு புறம்பாக செயற்பட்ட அவர் இது விடயத்திலும் அவ்வாறு செயற்படுவாரா என்பதும் தெரியவில்லை.
அரசியல் தீர்வு தொடர்பில் கட்சியின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே மற்றைய தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவேண்டும் என்பதே தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவின் நிலைப்பாடாக இருக்கிறது. அதனால், தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளின் அடிப்படையில் தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு கஜேந்திரகுமார் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தமிழரசு கட்சி ஒத்துழைக்கக்கூடிய சாத்தியம் குறித்து சந்தேகம் எழுகிறது.
மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்கள் தங்களை முன்னரைப் போன்று அமோகமாக ஆதரிப்பார்கள் என்று தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நினைக்கிறார்கள் போன்று தெரிகிறது.
ஆனால், உள்நாட்டுப் போருக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக நடைமுறைச் சாத்தியமான அரசியல் அணுகுமுறைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே வடக்கு தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள மறுப்பது துரதிர்ஷ்டவசமானது.
— வீரகத்தி தனபாலசிங்கம் —