இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு.
படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்பு.

தேசப்படத்தில் மட்டும் இந்திய - இலங்கை கடல் எல்லை.
பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கிறார்.
மேலும் மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி, தென்பகுதி ஆழ்கடல் பன்னாட் கல மீன்பிடி மீனவர்களின் பயன்பாட்டுக்குரிய ஒன்றாகவும் வடக்கு மீனவர்கள் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்கே பரந்த ஆழ்கடல் இருந்தும் அதனைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டுமான வசதிகள் முக்கியமாக பலநாட் கலங்களுக்கான முதலீட்டு வசதியின்மை, துறைமுகம், பயிற்சி, மற்றும் உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளமை குறித்தும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
வடகரையோரத்தில் அடுக்கடுக்காக படைமுகாம்களை வைத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் ஊடுருவலையோ போதைவஸ்து கடத்தலையோ அவர்களால் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பது குறித்தும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் திணறிப்போயிருந்த அரசு சார்பிலே கடற்றொழில் அமைச்சர் வடக்கு மீனவர்களின் நம்பிக்கையை காப்போம் எனவும் வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் எனவும் ஒப்பாரி வைத்திருக்கிறார்.
தவிர அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, இந்தியாவை நோக்கி வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பின் எல்லை தாண்டி மேற்கொள்ளும் சட்டபூர்வமற்ற மீன்பிடியினை தடுக்க உதவ வேண்டுமெனவும் மன்றாடியிருக்கின்றார். வடக்கு என்.பி.பி. தமிழ் உறுப்பனர்களோ, வன்னி உறுப்பினர்களோ வாய் பிளந்து கொட்டாவி விடும் நிலைதான். மீனவர் துன்பம் குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு கிடையாது. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவினுடைய நிலைப்பாடு புரியாத ஒன்றல்ல, அவர்களை நம்பமுடியாது.
எமது கோரிக்கை
நாம் சிறிலங்கா அரசிடம் கோருவது என்னவெனில், அரசு வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் முதலில் உள்ளூர் இழுவைமடித் தொழில் தடையினை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதுதான். 2017 ல் இழுவைமடி உள்ளூரில் தடையென சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் இதுவரை அது அமுற்படுத்தப்படவில்லை. முதலில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பல தடவைகள் இது குறித்து பேசியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே நிலைமை உள்ளது.
மேலும் கண்டல் கிளைகளையும் மரக்குற்றிகளையும் வெட்டி கடற்பகுதிகளில் அதனை அமிழ்த்தி மீனை ஒருங்குசேர விட்டு வெடிகளை அதன் மீதும் பவளப்பாறைத் தொடர்கள் மீதும் வீசி எறிந்து மீன்களை வேட்டையாடுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையில் படையினர் பார்த்திருக்க டைனமெட் வெடி வைத்து மீன்களைக் கொல்லும் நாசகார செயற்பாடுகளையும், கடலில் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கிலான கம்பிப்பொறி வலைகளை அகற்றி சிற்றளவு மீன்பிடியாளர்களின் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின்போது பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் சொந்த இடம் திரும்பி தமது மீன்பிடிச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்து வரும் தென்பகுதி மீனவர்களை படையினரின் உதவியுடன் நிரந்தர குடியிருப்புக்களை அமைப்பது, அவ்விடங்களில் பிக்குகளை கொண்டு விகாரைகளை அமைப்பது போன்ற இழிவான, அருவருப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது வெறுக்கத்தக்கது.ஏற்றுக் கொள்ளவும் முடியாதது.
மேலும், கரையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படை முகாம்களால் மீனவர்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்பதை உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம். தேசிய பாதுகாப்புக்கென பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்து படையினரை நிலைகொள்ள வைப்பதைத் தவிர தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கஞ்சாக் கடத்தலைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லையே?
மனித புதைகுழிகளும் பெளத்தர்களே இல்லாத இடங்களிலும் படைமுகாம்களிலும் துப்பாக்கி முனையிலே விகாரைகளை கட்டி அருவருப்பை ஊட்டியதும் தவிர, காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் எவற்றையும் வடக்கில் காணோம்.
தேசப்படத்தில் மட்டுமே சர்வதேச கடல் எல்லை
வடக்கிலே பாக்கு நீரிணை, பாக்கு குடா, மன்னார் குடா ஆகிய பாரம்பரிய கடல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் வசமே உள்ளன. இதை ஊடறுத்தே 1974, 76 களில் இந்திய – இலங்கை எல்லைக்கோடு வரையப்பட்டது. கச்சதீவு அன்றைய பாரதப் பிரதமரின்( இந்திரா காந்தி) ஆலோசனையின் பிரகாரம் இலங்கை பிரதமரின் ( சிறிமாவோ) விருப்பிற்கிணங்க இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆயினும் ஐம்பது வருடங்களாக கச்சதீவில் வடக்கு தமிழர் அடைந்த நன்மை எவையுமே இல்லை. இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன. எல்லாமே ஒன்றுதான். கச்சதீவும் ஐந்து மைல் சுற்றாடல் பரப்பு கடல் பகுதியும் மீனவர்களுக்காக குத்தகைக்குத் தேவையென ஓர் கோரிக்கை இந்திய தரப்பில் (பேராசிரியர் சூரியநாராயன்) ஓர் கருத்து முன்னர் முன்வைக்கப்பட்டது. பாக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பது வடக்கு கடலில் சவப்பெட்டிகளை மிதக்க விடுவதற்குச் சமம்.
புதுக்கோட்டை, நாகபட்டின மீனவர்களின் தளமாக பாக்கு நீரிணை மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதியும், இராமேஸ்வர மீனவர்களின் பகுதிகளாக பாக்கு குடா கடலும், தூத்துக்குடி மீனவர்களுக்கான பகுதியாக மன்னார் குடாக்களும் பறிபோயுள்ளன. ஏறத்தாழ வடக்கு கடல் முழுவதும் பறிபோயுள்ளது. இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லைக்கோடு தேசப்படத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் அந்த எல்லைக் கோடானது வடக்கு கரையோரமாக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. சர்வதேச கடற் சட்டம் இங்கு செல்லுபடியாகாத ஓர் விடயமாகவே உள்ளது. இந்திய மீனவர்களுக்கு கச்சதீவு அமைவிடம் எது, எல்லைக்கோடு எது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் தெரியாது என்பதே இந்தியாவின் நிலை.