தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை; யாழ். மதத் தலைவர்கள் ஆதங்கம்
.
ஈழத் தமிழ் மக்களுக்காகச் செயற்படுகின்ற தமிழ்த் தேசியக் கட்சிகளிடத்தே ஒற்றுமை இல்லை என்று ஆதங்கம் வெளியிட்டுள்ள மதத் தலைவர்கள், தெற்கு போன்று வடக்கு, கிழக்கிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை யாழில் மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மதத் தலைவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணண் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் யாழ். ஆயர் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாத்த்தை பெற்றுக்கொண்டோம். அவர்களுடைய ஆசீர்வாதத்துடன் நாம் எமது பிரச்சாரப் பணிகளை முன்னெடுக்கவுள்ளோம்.
குறிப்பாக யாழ். ஆயருடனான சந்திப்பின்போது எங்களுடைய அரசியலிலே முற்று முழுதான மாற்றம் வர வேண்டும் என்று ஆயர் குறிப்பிட்டார். அதேபோன்று தமிழ் மக்களும் முற்றுமுழுதான மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று நாங்களும் எதிர்பார்க்கின்றோம்.
இதேபோன்று நல்லை ஆதீனத்தை நாங்கள் சந்தித்தபோது மத்திய அரசின் செயற்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளது எனக் கூறினார்.
குறிப்பாக இப்போது ஆட்சிக்கு வந்துள்ள அநுரகுமார தலைமையிலான ஆளும் கட்சியினர் ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு அதை, இதை செய்யப் போவதாக கூறியிருந்தாலும் இப்போது அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்ற அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதேவேளை, தமிழர் தரப்பிலுள்ள கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும் என்றும், நல்லதொரு மாற்றம் வர வேண்டும் என்றும், புதிய தலைமுறை தோற்றம் பெற வேண்டும் என்றும் இரண்டு சமயத் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.” – என்றார்.