மே 1 தொழிலாளர் தினத்தன்று பிரான்சில் வேலை செய்ய யாருக்கு அனுமதி?
பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின்படி, மே 1 என்பது சம்பளத்துடன் கூடிய கட்டாய அரசு விடுமுறை நாளாகும்
மே 1 தொழிலாளர் தினத்தன்று பிரான்சில் வேலை செய்ய யாருக்கு அனுமதி? சட்டம் சொல்வது என்ன?
மே 1-ஆம் திகதியன்று (தொழிலாளர் தினம்) வேலை செய்வது தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டுவருவது குறித்துப் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சமீபத்திய வாரங்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. 1948-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சட்டம் இதுகுறித்து என்ன சொல்கிறது? எதிர்காலத்தில் வரவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன? என்பது தொடர்பான பார்வை!
பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின்படி, மே 1 என்பது சம்பளத்துடன் கூடிய கட்டாய அரசு விடுமுறை நாளாகும் (férié et chômé). இந்த நாளில் வேலை செய்யாவிட்டாலும், ஊழியர்களுக்கு அன்றைய தினத்துக்கான முழுச் சம்பளத்தையும் நிறுவனங்கள் வழங்க வேண்டும். "கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பு மக்களும் முழுமையாக விடுமுறை எடுக்கும் ஒரே நாள் இதுதான்"
தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இயங்க வேண்டிய, ஒருநாள்கூடச் சேவையை நிறுத்த முடியாத துறைகளுக்கு மட்டுமே இந்த விடுமுறையிலிருந்து சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விதிவிலக்கு பெற்றவை: மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் (Hotels) மற்றும் சில அத்தியாவசியத் தொழிற்சாலைகள் இதில் அடங்கும். சட்டப்பிரிவு L3133-6 இன் படி, இவ்வாறு மே 1 அன்று கட்டாயமாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு, அவர்களின் அன்றைய வழக்கமான சம்பளத்துடன் கூடுதலாக அதே அளவிலான தொகையை (அதாவது இரட்டிப்புச் சம்பளம்) நிறுவனங்கள் வழங்க வேண்டும். இந்த விதிகள் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். சொந்தமாகத் தொழில் செய்யும் ஒரு கடை உரிமையாளர், தனது ஊழியர்களை வேலைக்கு அழைக்காமல், தானே தனித்துத் தனது கடையைத் திறந்து வியாபாரம் செய்யச் சட்டம் அனுமதிக்கிறது.
1986-ஆம் ஆண்டில், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதி உள்ள வெதுப்பகங்கள் போன்ற கடைகள் மே 1 அன்றும் இயங்கலாம் என ஒரு விதிமுறை இருந்தது. ஆனால், 2006-ல் பிரான்ஸ் உச்ச நீதிமன்றம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. "தங்கள் சேவையை ஒருநாள் கூட நிறுத்த முடியாது என்பதை நிரூபிக்கும் நிறுவனங்கள் மட்டுமே மே 1 அன்று செயல்பட முடியும்; எந்தவொரு துறைக்கும் தானாகவே சிறப்பு விலக்குக் கிடையாது" என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது.
பூக்கடைக்காரர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் மே 1 அன்று கடைகளைத் திறக்க அனுமதிப்பது குறித்துக் கடும் விவாதங்கள் எழுந்தன. இதன் விளைவாக, தற்போதைய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தலைமையிலான அரசு ஒரு புதிய சட்ட மசோதாவை அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளது.
இதன்படி, இனிவரும் காலங்களில் பூக்கடைகள் மற்றும் பேக்கரிகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மே 1 அன்று வேலை செய்யலாம். அப்படி வேலை செய்பவர்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கப்படும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் 2027-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவா சின்னப்பொடி


