நீதிக்கான பெருங்குரல்: நம் சகோதரன் 'குட்டி'யின் இழப்பிற்கு நீதி கேட்போம்!
இழந்த உயிரை நம்மால் மீட்டுத் தர முடியாது. ஆனால், அந்த உயிருக்கான நீதியைச் சட்டத்தின் முன் நம்மால் பெற்றுத் தர முடியும்.
நீதிக்கான பெருங்குரல்: நம் சகோதரன் 'குட்டி'யின் இழப்பிற்கு நீதி கேட்போம்!
அதிகாரத்தின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நம் தொப்புள்கொடி உறவான திரு. வைத்திலிங்கம் புவனேஸ்வரன் (என்கிற) குட்டி பலியாகியிருப்பது நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு காவல் துறையின் இந்த ஈவிரக்கமற்ற செயலுக்குப் பின்னால் உறைந்துபோயிருக்கிறது ஒரு குடும்பத்தின் கண்ணீரும், நம் சமூகத்தின் ஆற்றாமையும். இது ஒரு தனிமனிதனுக்கான இழப்பு மட்டுமல்ல; நம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அநீதி.
இழந்த உயிரை நம்மால் மீட்டுத் தர முடியாது. ஆனால், அந்த உயிருக்கான நீதியைச் சட்டத்தின் முன் நம்மால் பெற்றுத் தர முடியும். அதிகாரத்தின் அத்துமீறலுக்கு எதிராக நாம் மௌனம் காத்தால், நாளை அந்த மௌனமே நம்மைக் கூறுபோட்டுவிடும். எனவே, நெஞ்சில் ஈரமும் தார்மீகக் கோபமும் கொண்ட ஒவ்வொருவரையும் நீதிகேட்டு வீதிக்கு வர உரிமையோடு அழைக்கிறோம்.
நம் சகோதரனின் மரணத்திற்கான நியாயம் கிடைக்கும் வரை நம் குரல் ஓயாது என்பதை இந்தப் பேரணியின் மூலம் பிரெஞ்சு தேசத்திற்கு உணர்த்துவோம்.
கண்டன அமைதிப் பேரணி விவரங்கள்: நாள்: 14 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை), நேரம்: மதியம் 13:00 மணி, ஒன்றுகூடும் இடம்: பொபினி நகரசபை (Bobigny Mairie) முன்பாக, பேரணி சென்றடையும் இடம்: பொபினி காவல் நிலையம் (Bobigny Police Station)
உடைக்கட்டுப்பாடு: பேரணியில் கலந்துகொள்ளும் அனைவரும் நமது துக்கத்தையும், அமைதியான வழியிலான அறப்போராட்டத்தையும் வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை நிற உடை அணிந்து வருமாறு விநயமாகக் கேட்டுக்கொள்கிறோம். கண்ணீரைத் துடைத்துவிட்டு, நீதிக்காகக் கைகோர்ப்போம். வாருங்கள், அறத்தின் வழியில் ஒன்றிணைவோம்!
- ஏற்பாட்டாளர்கள்


