அனுரவுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிரமங்கள் உண்டு: சஜித்திடம் விட்டுக்கொடுப்பாரா ரணில்?
.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொஞ்சம் விலகி ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாசவினுடைய ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து மலையகத் தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து ஒரு பாரிய அரசியல் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டால் 113 ஆசனங்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியும் என பத்திரிகையாளர் அ.நிக்ஸன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Oneindia Arasiyal ஊடகத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” நாடாளுமன்றத் தேர்தலில் ஆகக் குறைந்தது 113 ஆசனங்களை ஒரு கட்சி பெற வேண்டும்.
ஆகவே ரணில் கொஞ்சம் விலகி ஐக்கிய தேசியக் கட்சியும் சஜித் பிரேமதாசவினுடைய ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து மலையகத் தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் சேர்ந்து ஒரு பாரிய அரசியல் கூட்டணியை அமைத்துப் போட்டியிட்டால் 113 ஆசனங்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியும்.
ஆனால் பழையவர்களை விட ஊழல் மோசடி அற்ற புதியவர்களையே போட்டியிட அனுமதிக்க வேண்டும்.
அப்படியானால் சஜித் பிரேமதாச பிரதமராகவும் முடியும்.
இப்படி ஒரு அரசியல் நிலை ஏற்படுமானால் அனுரகுமார திஸாநாயக்க நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக இருப்பதில் முரண்பாடுகள் எழும்.
2001இல் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது ஏற்பட்ட ஆபத்தான நிலைமைதான்.
அப்படி இல்லையேல் ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி மலையகத் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் போன்ற சிறிய பாரம்பரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் மாத்திரமே 113 என்ற ஆசனங்களைப் பெற முடியும்.
ஜே.வி.பியாகத் தனித்துப் போட்டியிட்டால் 113 சாதாரண பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தை அமைப்பதில் சிரமங்கள் ஏற்படும்.
மலையகத் தமிழர்கள் – முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் சார்பில் ஜேவிபி தமது உறுப்பினர்களை போட்டியிட அனுமதித்தாலும் அவர்கள் வெற்றி பெறுவது கடினம்.
ஆகவே அனுரகுமார திஸாநாயக்க எதிர்கொள்ளவுள்ள பல சவால்களில் இது முக்கியமானது.
ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகம் புரிந்த அரசியல் கட்சிகள் மற்றும் நபர்களை இணைக்கவே கூடாது என்ற நல்ல சிந்தனையோடு இருக்கும் ஜேவிபிக்கு இப் பின்னணியில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் சிரமங்கள் உண்டு.
நாடாளுமன்றத்தில் தோ்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைக்கும் உத்தியில் கட்சிக் கொள்கையில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்யக்கூடிய மன நிலை அனுரவுக்கு உடனடியாக வரக்கூடிய சாத்தியம் இருக்காது.
குறிப்பாக மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், ஜீவன் தொண்டமான் போன்ற தலைவர்களை உடனடியாக உள்வாங்கும் எண்ணம் அனுரகுமாரவுக்கு இருக்கும் என்று சொல்லவும் முடியாது.
அதேநேரம் டக்ளஸ், சிவநேசத்துரை சந்திரகாந்தன், கருணா ஆகியோரை வேறு வகையாகக் கையாளும் உத்திகளும் வகுக்கப்படலாம். அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படலாம்.
ஏனெனில் வடக்குக் கிழக்குத் தமிழர்களை இலங்கை ஒற்றையாட்சி முறைமைக்குள் கரைத்துவிட வேண்டும் என்பது தென்பகுதி அரசியலின் ஒரு பகுதி.” என கருத்து வெளியிட்டுள்ளார்.