ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில் இலங்கையை வந்தடைந்த அமெரிக்க கப்பல்: சீனா கழுகு பார்வை
இலங்கையின் கடற்பரப்பிற்குள் எவ்வித சர்வதேச ஆய்வு கப்பல்களும் அனுமதிக்கப்படாதென அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவொன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது.
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஒகேன் (USS O’kane) என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று புதன்கிழமை (21.08.2024) வருகை தந்த யு.எஸ்.எஸ் ஒகேன் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பை அளித்தனர்.
இந்த கப்பல் 154 மீட்டர் நீளமுடையது. அத்துடன், கப்பலில் 328 பணியாளர்கள் கடமையாற்றுகின்றனர்.
அமெரிக்காவின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான ரிச்சர்ட் ரேயின் (Richard Ray) தலைமையில் இந்தக் கப்பல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பலின் வந்தமைக்கான நோக்கம் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், அமெரிக்காவின் கப்பலொன்று வருகை தந்துள்ளமையால் பல்வேறு தரப்பினரதும் அவதானம் இதனை நோக்கி நகர்ந்துள்ளன.
இலங்கையின் கடற்பரப்பிற்குள் எவ்வித சர்வதேச ஆய்வு கப்பல்களும் அனுமதிக்கப்படாதென அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவொன்றை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன் பின்னர் ஆய்வு கப்பல்களின் வருகை குறைந்தது.
அடிக்கடி சீனாவின் கடல்சார் ஆய்வு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்தமையால் இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை அரசாங்கத்திடம் வெளிப்படுத்தியதன் பின்னரே சர்வதேச ஆய்வு கப்பல்களின் வருகைக்கான தற்காலிக தடையை இலங்கை விதித்தது.
இலங்கையின் தடை குறித்து சீனா தமது அதிருப்தியை வெளியிப்படுத்தியிருந்தது. இதன் பின்னர் இலங்கையில் கப்பல்களின் வருகை தொடர்பிலான சர்ச்சை சற்று ஓய்ந்திருந்தது.
என்றாலும், அவ்வபோது அமெரிக்காவின் சில கப்பல்கள் வந்து செல்கின்றன. இவை ஆய்வு கப்பல்களாக இல்லாத போதிலும் அது தொடர்பில் சீனா கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிந்த பகுதியில் navy coast guard station (கடற்படை கடலோர பாதுகாப்பு நிலையம்) அமெரிக்காவின் நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சீனா தமது அவதானத்தை செலுத்தியுள்ளதுடன், இலங்கையில் சீனாவின் நக்ரவை கட்டுப்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக navy coast guard station களை அமைக்கும் பணியை கருதலாம் என சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கம் இந்தத் தேர்தலில் அதிகமாக உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் நகர்வு அதிகமாக இருப்பதாக கூறப்படுத் பின்புலத்தில் இந்த கப்பலின் வருகை தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.