சுவிஸ் நியோ-நாசிகள்! ; 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை தீவைத்து கொலைசெய்தார்களா?
.
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை, குடியிருப்பின் மீது தீவைத்து கொலை செய்தார்களா? சுவிஸ் நியோ-நாசிகள்!
Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!.
இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார்.
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்சியின் முடிவு இது ஒரு திட்டமிட்ட கொலை என்கிறது. இது கொலை என்ற கோணத்தில் இன்று வரை காவல்துறையினர் விசாரிக்க மறந்ததால் கொலைக்காரர்களும் இன்றுவரை பிடிபடவில்லை.
பாலமுரளியும் (9) பாலமுருகனும் (10) சகோதரர்கள். சுவிஸ் நாட்டவருக்கு உச்சரிப்பதற்கு இலகுவாக இருப்பதற்காகவே முரளி மற்றும் முகுந்தன் என்று பெயரை சுருக்கிக்கொண்டார்கள். இருவரில் மூத்தவர் முரளி. சிறுவயதிலேயே வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தார். ஒரு முறை அருகிலுள்ள தோட்டவேலை செய்யும் நிறுவனத்திடம் வேலைகேட்டிருக்கிறார், தன்னுடைய சம்பளம் பெற்றோர்களிற்கு உதவியாக இருக்கும் என்றெண்ணி!.
இளையவன் முகுந்தன் தன்னைவிட தன்னுடைய அக்காவை தான் பெற்றோர்களிற்கு பிடிக்கும் என்ற தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தான். ஆனால் பெற்றோர்கள் மூன்று பிள்ளைகளையும் உளமார நேசித்தார்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.
இந்த இரண்டு சிறுவர்களின் வாழ்வும் சிறுபராயத்துடனே ஒரு சோகமான இரவில் முடிவிற்கு வரப்போவதை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. 02.07.1989ஆம் திகதி கூர் நகரத்தில் ஒரு தீ விபத்தில் -பெரியவர்களாக முன்னரே- அவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த ஓர் இரவு அவர்களை வாழ்விலிருந்து தூக்கியெறிந்துவிட்டது.
இவர்களுடன் இந்த நாட்டிற்கு பாதுகாப்புத் தேடி வந்த 18 வயதான சக்திவேல் தம்பிராஜா என்ற இளைஞனும், 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி என்பவரும் அன்றைய இரவு கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள்.
மிரட்டப்பட்ட ஊடகவியலாளர்
முரளியினதும் முகுந்தனினதும் கொடூர கொலை மீதான கவனம் எங்களுக்கு தற்செயலாக கிடைத்த தகவல் தான். இந்த கொலைச் சம்பவம் 35 வருடங்களிற்கு முன்னர் நடந்தேறியது. எனவே தான் சுவிஸ் மக்களின் நினைவிலிருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தை நினைவூட்டும் எந்த நினைவுச்சின்னமும் அவ்விடத்தில் இல்லை. வரலாற்று ஆசிரியர் Damir Skenderovic உடனான நேர்காணலில் போது அவர் இந்த வழக்கு பற்றி ஒரு சிறிய தகவலை தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் பற்றி நாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஊடக செய்திகளின் ஆவணக் காப்பகத்தில் இதுபற்றி தேடிப் பார்த்தோம். குறைந்த எண்ணிக்கையிலான செய்திகளே கிடைத்தன. ஒரு சில பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் இது ஒரு நியோ-நாசிகளின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். உண்மையிலேயே இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம் எமக்குள் எழுந்தது. இது ஏன் ஒரு பேசுபொருளாகவில்லை? கொலைகாரர்களை ஏன் கைதுசெய்யவில்லை?
எனவே இது பற்றி ஆழமான ஒரு ஆராய்ச்சியினை மேற்கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம்.
நியோ-நாசிகளின் தாக்குதல்கள் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பெரும்பாலும் ஜேர்மன் நாட்டில் “சோளிங்கன்” என்ற இடத்தில் 1993ம் ஆண்டு இரண்டு முதியவர்களும், மூன்று சிறுவர்களும் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தான். இந்த சம்பவத்தை நினைவு கூரும் வண்ணம் அங்கே ஒரு நினைவுத்தூபி வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தத் தெருவுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மன் ஜனாதிபதி இந்த சம்பவத்தின் 30வது நினைவையொட்டி உரையாற்றியிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி புத்தகங்கள், பாடசாலை நூல்கள், பாடல்கள், காட்சிப் படங்கள் என்று நிறையவே இருக்கிறது.
ஆனால் கூரில் நடந்த சம்பவம் பற்றி ஒன்றுமே இல்லை. எங்களுடைய ஆராய்ச்சியின் பின்னர் இது ஏதோ தற்செயலாக மறைக்கப்பட்ட ஒன்று இல்லை என்பதை உறுதியாக கூறமுடிகிறது
இந்த ஆராய்ச்சியின் ஆரம்பம் இறந்துபோனவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். அவர்களின் இருப்பை அப்பொழுது கண்டுபிடிக்கவும் முடியவில்லை. எனவே இதன் தொடக்கம், இப்பொழுது 78 வயதான Reto Padrutt என்ற பத்திரிகையாளரிடமிருந்து ஆரம்பித்தது. Padrutt இப்பொழுது சூரிச்சில் வசித்துவருகிறார். அவருடைய இருப்பிடம் பற்றி மேலதிகமாக எழுதுவது அவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கிறோம். அதுபற்றி எழுதவேண்டாம் என்பது அவரின் கோரிக்கையும் கூட.
Padrutt 15.01.1992 அன்று சுவிஸ் தொலைக்காட்சியின் Rundschau என்ற நிகழ்ச்சிக்கு இந்த சம்பவம் பற்றிய ஒரு சிறிய ஆவணப்படத்தினை Andreas Hoessli என்பவருடன் சேர்ந்து இயக்கியிருந்தார். (காணொளி-1)
அதுமட்டுமின்றி Padrutt நியோ-நாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் செலவிட்ட ஒருவர். அன்றைய காலகட்டத்தில் அவர் வசித்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கதவு பழுதடைந்திருந்ததால் யாரும் உள்ளே வரலாம் போகலாம் என்ற நிலை இருந்தது. அவருக்கு நியோ-நாசிகளிடமிருந்து ஒரு கடிதம் அனுப்பட்டிருந்தது. அதில் நுழைவாயில் எப்பொழுதுமே திறந்திருப்பது தங்களுக்கு தெரியும் என்றும், எந்நேரமும் அவரின் வீட்டிற்கு தீ வைக்க முடியும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இப்பொழுது Padrutt தன்னுடைய குடோனிலிருந்து தூசிதட்டி எடுத்துகொண்டுவந்த ஆவணங்களை மேசையின் மேல் பரப்பி வைத்திருந்தார். கூரில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய அவரின் குறிப்புகள் அடங்கிய ஆவணங்கள் அவை. கூர் சம்பவத்திற்கும் நியோநாசிகளிற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவை.
இடைப்பட்ட இந்த காலத்தில் கூர் நகரசபைக்கு இந்த சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் அடங்கிய தொகுப்புக்களை பார்வையிடுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். அன்று சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று விசாரணையை விரிவுபடுத்தினோம்.
இறுதியாக கொல்லப்பட்ட சிறுவர்களின் அக்காவையும் பெற்றோரையும் St.Gallen இல் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களை கண்டுபிடிப்பதற்கு சிக்கலாக அமைந்தது, அரசதரப்பின் மெத்தனப்போக்கு!. Kandiah என்ற பெயரை ஆவணங்களில் Kandian என்று பிழையாக அச்சிட்டிருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட சிறுவர்களின் பெயரை எழுத்துப் பிழைகளுடன் எழுதியிருந்தார்கள். இந்த விசாரணை எப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
மரண இரவு
01.07.1989 ஒரு மழைக்கால சனிக்கிழமை. St.Gallen மாநிலத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் வசந்திக்கும், சிவா கந்தையாவிற்கும் வழமைபோல வேலை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் அனைவரும் செய்த உணவத்தின் துப்பரவு பணியே அவர்கள் இருவரும் செய்தார்கள். இருவரின் பிள்ளைகளான இரண்டு ஆண்களும், ஆறு வயதான மேனாவிற்கும், வீட்டில் தனியாக இருப்பது சலிப்பாக இருந்தது. எனவே ஒரு குடும்ப விழாவிற்கு கூர் நகரத்திற்கு போவதற்கு பெற்றோர்கள் அனுமதித்தார்கள். இதற்குள் மூன்று பிள்ளைகளிற்குள்ளும் சண்டை வந்துவிடவே, மூவருக்கும் கொண்டாட்டத்திற்கு போவதற்கு தடைவிதித்தார்கள். பெற்றோர்கள் இருவரும் எரிச்சலைடைந்தவர்களாக வேலைக்குச் சென்றுவிட்டார்கள். இதுவே அவர்கள் தங்களின் இரண்டு மகன்களையும் பார்த்த இறுதித் தருணம்.
அன்றிரவே பெற்றோர்களின் அனுமதியின்றி மூன்று பிள்ளைகளும் தங்களின் மாமாவுடன் கூர் நோக்கிய பயணத்தை தொடங்கியிருந்தார்கள். அன்று இரவு கொண்டாட்ட இடத்திலிருந்து பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்தார்கள். நாளை மூவரையும் வந்து அழைத்துச் செல்வதாக அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
அந்த இரவு கொண்டாட்டம் நிறைந்த ஒரு அமைதியான இரவாக இருக்கவேண்டியது. வேறு வேறு மாநிலங்களிலிருந்து வந்த 15 தமிழர்கள் அந்த நான்கரை அறைகொண்ட மேல்மாடி வீட்டிற்குள் இருந்தார்கள். இலங்கையில் எல்லோரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். வீட்டின் ஏனைய பகுதிகள் யாருமற்று இருந்தது.
இரவுச் சாப்பாடு இரவு ஒன்பதரை மணிக்கு பரிமாறப்பட்டது. மூன்று சிறுவர்களின் தாத்தாவின் நினைவாக காலியான நாற்காலியில் ஒரு கோப்பையில் படையல் வைத்தார்கள். மதுவோ, சிகிரெட்டோ யாரும் பாவிக்கவில்லை. இரவு பன்னிரெண்டே கால் மணிக்கு முழித்திருந்த கடைசியானவரும் தூங்கப் போய்விட்டார். இரண்டு மணிநேரத்தின் பின்னர், 2:14 மணிக்கு, கூர் காவல்துறைக்கு தொலைபேசியில் Alexanderstrasse 38 இல் அமைந்துள்ள வீட்டில் தீப்பிடித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. திசைதெரியாத அளவிற்கு புகை அறைகளை நிரப்பியது. அதுவரை அந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த விளக்குகள் அணைந்துபோயின.
மாடிப்படியில் தீப்பிடித்ததால் யாராலும் கீழே இறங்கி வர முடியவில்லை. யன்னல் வழியாக 5 மீட்டர் கீழே குதிக்கமுடிந்தவர்கள் குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டார்கள். பெரும்பாலானவர்கள் இதன் போது காயமுற்றார்கள். சுயநினைவுற்றிருந்த மேனாவை யாரோ ஒருவர் யன்னலுக்கே வெளியே வீசினார். கீழேயிருந்த இன்னொருவர் அவரை ஏந்திக்கொண்டார்.
இரு ஆண்கள் இறுதிவரை கீழே குதிக்க மறுத்துவிட்டார்கள். 18 வயதான சக்திவேல் தம்பிராஜா மற்றும் 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி. அவர்களின் உடல் அடையாளம் காணமுடியதளவிற்கு தீயில் கருகிப்போனது. சிறுவர்கள் முரளியும் முகுந்தனும் தூக்கத்தில் இருக்கும் போதே மூச்சுத்திணறி இறந்துபோயிருக்க வேண்டும்.
வாழ்த்திய அயலவர்கள்
Margarethe Sauter இரண்டு சிறுவர்களின் எரிந்துபோன உடல்களின் மிச்சத்தினை காவலர்கள் வெளியில் கொண்டு வரும் போது நேரில் பார்த்தவர். எரியூட்டப்பட்ட வீட்டின் முன் தான் அவரின் வீடும் உள்ளது.
Alexanderstrasse 38 இல் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த தடயமும் இப்பொழுது அங்கே இல்லை. ஆப்பிள் மரங்கள் சூழ ஒரு அடுக்குமாடி கட்டிடம் அதே இடத்தில் எழுந்துநிற்கிறது.
Margareth Sauter இன் வீட்டிற்கு முன்னால் காத்திருந்த வேளையில் அவர் சைக்கிளில் வந்தார். அவரிடம் இங்கே நடந்தது பற்றி தெரியுமா என்று கேட்டோம். அப்பொழுது இருபது வயதின் ஆரம்பத்திலிருந்த Margarethe படப்பிடிப்பாளராக Bündner Tagblatt என்ற பத்திரிகையில் பணியிலிருந்தார்.
அலறல் சத்தம் தூக்கத்திலிருந்த அவரை எழுப்பியது. யன்னலை திறந்து பார்த்தவர் உடனே காவல்துறைக்கு தொலைபேசி எடுத்து தகவல் சொல்லிவிட்டு, தன்னுடைய போர்வையை எடுத்துக்கொண்டு கீழே ஓடினார். சிறிய தீக் காயங்களுடன் தப்பி வந்த ஒருவர் மீது போர்த்திவிட்டார்.
அக்கம் பக்கத்திலிருந்த ஒருவரிடமும் முதலாவது மாடிக்கு எட்டும் அளவிற்கு ஏணி இருக்கவில்லை. சில நிமிடங்களின் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்துவிட்டன. அதன் பின்னர் தான் புகைப்படக் கருவியை எடுத்து தன்னுடைய கடமையை செய்தார். சம்பவத்தை ஆவணமாக்கினார். யாருமற்ற கீழ்த்தளத்தில் தீ வைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக வெளிநாட்டவர்கள் மீது சமூகத்தில் வெறுப்புணர்வு நிலவியது. இந்த சம்பவத்திற்கு மூன்று வாரங்கள் முன்னர் காவல்துறைக்கு “சுத்தமான சுவிஸ் நோக்கி” என்ற வாசகத்துடன் ATO (Anti Tamil Organisation) என்ற அமைப்பின் துண்டுப்பிரசுரம் கிடைத்திருந்தது. இந்த காரணங்களை வைத்தே Margareth Sauter இது ஒரு கொலை என்று அக்கணமே முடிவுசெய்துவிட்டார்.
நாம் முன்னர் சந்தித்த பத்திரிகையாளர் Reto Padrutt இடம் அந்த துண்டுப்பிரசுரத்தின் நகல் ஒன்று இருந்தது. இதை யார் அச்சிட்டு பொதுவெளிக்கு கொண்டுவந்தார்கள் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் கூர் நகரத்தில் நாஜி ஸ்வஸ்திகா குறியீடு ஒரு வீட்டில் பதியப்பட்டிருந்ததை அவர் நினைவு கூர்கிறார். அந்த வீடு நாஜிகள் சந்திக்கும் இடமாக இருந்திருக்கவேண்டும்.
கூர் நகரசபையிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்களில் ஒரு அதிர்ச்சியளிக்கும் கடிதம் கிடைத்தது. அந்த தீ வைத்ததற்கு உரிமைகொண்டாடி, நகரசபை உறுப்பினரான Luzi Bärtsch என்பவருக்கு முகவரியிட்டு ஒரு அநாமதேய கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில்: தீ வைக்கப்பட்டதா? ஆம்! மூன்றாவதும் இறுதியுமான எச்சரிக்கை. அகதிகளை எங்களுடைய கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் ஒருவர்கூட மிச்சமிருக்காதபடி அனைத்து முகாம்களிற்கும் தீ வைக்கப்படும். -“Rütlischwur ஒப்பந்தம் 1291” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது.
தமிழ் நாணயக் குற்றி
போர் மற்றும் உள்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் சுவிஸ் நாட்டிற்கு நியாமான காரணத்துடன் தமிழர்கள் வந்திருந்தபோதும், சுவிஸ் நாட்டவர்களிற்கு அவர்களின் வருகை அச்சத்தையும் அதேநேரம் வெறுப்பையும் உண்டுபண்ணியது. அவர்களின் புலம்பெயர் உண்மைத்தன்மையை ஏற்க மறுத்தனர். தமிழர்கள் ஒருபோதும் இந் நாட்டின் குடிமக்கள் ஆகமாட்டார்கள் என்ற கருத்து பாராளுமன்றம் வரை நிலவியது.
தமிழர்கள் மீதான பாகுபாட்டினை Thun நகரத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. ஏனைய அகதிகளிற்கு வழங்கப்பட்ட சுவிஸ் பிராங் உதவித்தொகை போன்று தமிழர்களிற்கு வழங்கப்படவில்லை. தமிழர்களிற்கென்று “தமிழ் நாணய குற்றி” ஒன்றை வழங்கினார்கள். இது ஒரு விளையாட்டுப்பொருள் போன்ற நாணய வடிவம் கொண்டது. இதனை தமிழர்கள் உள்ளூர் கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். (காணொளி-2)
1995ஆம் ஆண்டு இனவாதத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் வரை தேசிய கட்சிகள் வெளிப்படையாகவே தமிழர்களிற்கு எதிரான இனவெறியினை அவர்களின் கட்சி நிகழ்ச்சி நிரலிலேயே ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஊடகங்களும் தம் பங்கிற்கு அறமற்று செயற்பட்டன. Blick பத்திரிகை தமிழர்களை “லெதர் ஜாக்கெட் ஆண்கள்” என்று வகைப்படுத்தி, சுவிஸ் நாட்டில் போதைப்பொருள் ‘ஹெராயின் தமிழர்களின்’ கட்டுப்பாட்டில் என்று எழுதியது.
ஆனாலும் புள்ளிவிபரங்கள் இதற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தின. தமிழர்களின் குற்றச்செயலும் சுவிஸ் நாட்டவர்களின் குற்றச்செயலும் ஒரே அளவில் இருந்தது. Tagesanzeiger பத்திரிகை தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று தவறான கருத்தை எழுதித்தள்ளியது.
Margarethe Sauter ற்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருந்த பிரச்சாரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆனால் தமிழர்களை வேண்டா விருந்தாளிகளாக சுவிஸ் மாக்கள் ஒரு பொதுப்பார்வையில் பார்த்தார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தீ வைக்கப்பட்ட அந்த இரவில் இதனை நேரிலும் கண்டார். அயலவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நீர், போர்வை என்று தந்து உதவினார்கள். ஏனையவர்கள் அவர்களின் வீட்டு வேலியை தாண்டி வர மறுத்துவிட்டார்கள். “இவர்களிற்கு இப்படி நடப்பது சரி தான். இவர்கள் இங்கே வந்திருக்கக்கூடாது” என்று முரளியினதும் முகுந்தனினதும் எரிந்த உடல்களை தீ அணைப்புத்துறை வெளியில் கொண்டுவரும் போது காதுபட பேசிக்கொண்டார்கள்.
Margarethe Sauter எடுத்த புகைப்படங்கள் அடுத்த நாள் காலையில் Bündner Tagblatt என்ற உள்ளூர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை தன்னுடன் சுமந்துகொண்டிருப்பது அவருக்கு மனபாரமாக இருந்ததால் புகைப்படங்களின் நகலை சிலவடங்களிற்கு முன்னர் துண்டுதுண்டாக வெட்டி எறிந்திருக்கிறார்.
இன்று வரை அவருக்கு புரியாத புதிராக ஒரு விடயம் இருக்கிறது. எத்தனையோ விபத்துக்களை புகைப்படம் எடுத்திருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அடுத்த நாள் வழக்கறிஞர்கள் இவரிடம் அந்த புகைப்படங்களை விசாரணைக்காக எடுத்துச்சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை தான் புகைப்படம் எடுத்தது தெரிந்தும் இதுவரை தன்னிடம் இருந்து எந்த புகைப்படமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எல்லா புகைப்படங்களுமே ஆதாரங்கள். அதற்காக அவர்கள் ஒரு முறைகூட தன்னை தொடர்புகொள்ளவில்லை என்று முடித்தார்.
அக்கா
தீயிடப்பட்ட அந்த இரவில் மழைபெய்யத்தொடங்கியதும் மேனாவிற்கு நினைவு வந்தது. ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் வந்து அவரின் சகோதரர்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள் என்று விசாரித்தார். “முரளி ஒரு பச்சை-நீல காற்சட்டையும், முகுந்தன் சிகப்பு நிற காற்சட்டையும்” என்றார்.
இப்பொழுது மேனா 41 வயது பெண். St Gallen மாநிலத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளிற்கு அம்மா. திருமணத்தின் பின்னர் அவரின் பெயர் மேனா கந்தையா அல்ல, மேனா நிரோசன். அவர் ஏன் எங்களை தொலைபேசியில் தொடர்புகொள்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை என்றும், என்னுடைய பெற்றோர்களுடன் கூட நான் இந்தச் சம்பவம் பற்றி பேசுவதிலை என்றும் சொன்னார். இறுதியாக அவர் எங்களை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டார். St.Gallen இல் உள்ள ஒரு கஃபேயில் சந்தித்தோம். மேனா மனிதவளத் துறையில் பணிபுரிகிறார். பணியிடத்திலிருந்து நேரடியாக எங்களை சந்திப்பதற்கு வந்திருந்தார்.
அந்தச் சம்பவம் பற்றி பேசாமல் மௌனமாகவே இதுவரை காலமும் கடந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய சகோதரர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிவித்திருக்காத போதும், காலப்போக்கில் அவரே அதனை புரிந்துகொண்டார். அந்த சம்பவத்தின் பின்னர் நேரடியாக மருத்துவமனையிலிருந்து மூவரும் St.Gallen இல் உள்ள அவர்களின் வீட்டிற்கே சென்றுவிட்டார்கள். வீட்டிற்குள் வந்ததும் பெற்றோர்கள் வீட்டில் தொங்கிய எல்லா கடவுள் படங்களையும் கிழித்தெறிந்தார்கள். மேனா பெற்றோர்களுடனே அவர்களின் அறையில் தூங்கி எழுந்தார்.
பயம். இது இன்றுவரை அவரை பின்தொடர்கிறது. தான் ஒரு தங்கக் கூண்டிற்குள் வளர்ந்தவர் என்றார். இவரையும் இழந்துவிடக்கூடாது என்ற பயத்தினால் பெற்றோர்கள் இவரை மிகவும் கவனமாக வளர்த்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் மேனா பெற்றோர்களை விட்டு பிரிய விரும்பவில்லை. அவரின் கணவர் அவர்களுடன் சேர்ந்து இங்கேயே இருக்கிறார். இருவருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தவன் முரளி போல் மெலிந்தும் கருப்பாகவும், இளையவன் முகுந்தன் போல பருத்த உடலுடன் இருப்பது தன்னுடைய சகோதரர்கள் தன்னுடனே இருப்பது போன்ற ஆறுதலை தனக்கு தருகிறது என்றார்.
இடைப்பட்ட இந்தக் காலத்தில் இதுபற்றி அவர் பெரிதாக யாருடனும் பேசியதில்லை. ஆனால் ஆழ்மனதில் வடு அப்படியே தான் புதைந்திருக்கிறது. 6 வருடங்களிற்கு முன்னர் ஜேர்மன் வேகவிதியில் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்திருக்கிறார். அந்தக் கணமே அதே இடத்தில் காரை நிறுத்திவிட்டார். அதிஷ்டவசமாக விபரிதம் எதுவும் நடக்கவில்லை. வேக வீதியின் நடுவில் நின்ற காரை கணவர் ஓரத்தில் நிறுத்தினர்.
எங்களிடம் இருக்கும் ஆவணங்கள் பற்றியும் நாங்கள் கண்டுபிடித்தவை பற்றியும் அவரிடம் கூறினோம்.
சிறிது மௌனமாக இருந்துவிட்டு இது தனக்கு வேதனையளிக்கிறது என்றார். கேள்விகள் எதுவும் கேட்காமலே தொடர்ந்து “இதுவரை சுவிஸ் நாட்டை ஒரு இனவெறி பிடித்த நாடாக தான் உணரவில்லை. ஒருமுறை கூட தன்னை யாரும் பாகுபாட்டுடன் நடத்தவில்லை. ஆனால் இப்பொழுது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை என்னவென்று சொல்வது” என்றார்.
இறுதியாக இதுவரை அது ஒரு விபத்து என்று நம்பியிருந்ததாகவும், இந்த நாட்டில் தானும் தன்னுடைய குடும்பமும் சம அந்தஸ்து பெற்றிருக்கிறோம் என்ற நம்பிக்கையை கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
நாஜிக்கள்
ஏற்கனவே கூறியது போல் இந்த தீ வைத்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. 80களின் ஆரம்பமும் 90களின் தொடக்கமும் பாசிச சக்திகளிற்கு பொற்காலமாக விளங்கியது. இந்த காலகட்டத்தை வரலாற்றாசிரியர்கள் பாசிசவாதிகளின் “வசந்தகாலம்” என்கின்றனர். 1930களில் துளிர்விட்டிருந்த பாசிசம் பின்னர் படிப்படியாக இனவாதிகளின் கட்டுக்குள் வெவ்வேறு பெயர்களில் வந்தது. இங்கிலாந்திலிருந்து இங்கே வந்த இந்த இனவாதம் இளைய தலைமுறையினரின் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பள்ளியிலும் ஒருவரையாவது நியோ நாஜிகளின் அடையாளமான மொட்டைத் தலையுடனும், லெதர் ஜாக்கெட்ருடனும் காணக்கூடியதாக இருந்தது.
சுவிஸ் பொதுச்சமூகத்திற்கு இவர்கள் புதிதாக இருந்தார்கள். குறும்புக்கார இளைஞர்களாக பார்த்தார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உட்கார வைக்கப்பட்டார்கள். சுவிஸ் ஜனாதிபதிக்கு ஈடான புகழினை சில நாஜிகள் அடையமுடிந்தது. குறிப்பிட்டு கூறுவதென்றால் Marcel Strebel என்பவரை கூறலாம். “Zischtigslub” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர் அங்கே வேலை செய்த ஒருகறுப்பு நிறப் பெண்ணை “கறுப்புப் பரத்தை” என்று பேசி, அந்த பெண்ணின் மீது துப்பியும் இருக்கிறார். இதெல்லாம் நடந்த பின்னரும் அவரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரவேற்று நிகழ்ச்சியினை நடத்தியிருக்கிறார்.
இது போன்ற சம்பவங்கள் பற்றி அந்தக் காலத்தில் பத்திரிகையாளராக இருந்த Jürg Frischknecht உடன் பேச முயற்சித்தோம். இனவாதிகள் பற்றி இவரை தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. துரதிஷ்டவசமாக அவர் சிலவருடங்களிற்கு முன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே எங்களிற்காக காத்திருந்தது. ஆனால் அவர் எழுதிய இனவாதிகள் பற்றிய “Die neuen Fröntler und Rassisten” என்ற புத்தகத்தை அனைவருக்கும் விட்டுச்சென்றுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூர் நகரில் நடந்த சம்பவம் பற்றி இப்படி எழுதியுள்ளார்: முரளியும் முகுந்தனும் இறந்துபோன அதே ஆண்டு, பிரிபெர்க் நகரில் Mustafa Yildirim என்ற 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒரு இனவாத மாணவனால் கொல்லப்பட்டார்.
Regensdorf நகரில் முன்னாள் சுவிஸ் பாக்ஸிங் சம்பியனான Walter E. தமிழரான சாந்தகுமார் சிவகுரு என்பவரை முகத்தில் ஒரே ஒரு குத்தின் மூலம் கொன்றார். சாந்தகுமார் வேலை செய்த உணவகத்தின் முதலாளி அவரை நினைவுகூரும் போது “ஒவ்வொரு முறையும் சாந்தகுமார் சமையல் கூடத்திற்குள் வரும் பொழுதும் சூரிய ஒளி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அவன் முகம்” என்றார்.
1988 தொடக்கம் 1993 வரை இனவாதிகளால் சுவிசில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளை விடவும், ஏன் ஜெர்மனை விடவும் அதிகம். கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக அவர்களின் பெயர்கள் எந்த தெருவுக்கும் வைக்கப்படவில்லை. எந்த ஜனாதிபதியும், வரலாற்றாசிரியரும் இவர்களை நினைவுகூர்ந்து பேசவில்லை.
Frischknecht தனது புத்தகத்தில் இன்னொன்றையும் பதிவுசெய்திருந்தார். இனவாதிகள் முக்கியமாக தமிழர்களை தங்களுடைய எதிரிகளாக பார்த்தார்கள். உதாரணமாக ‘சுக்’ (Zug) நகரில் நடந்த தமிழர்கள் மீதான வேட்டை. 25 ஆண்களும் பெண்களும் 20.05 .1989 அன்று நகரின் முக்கிய பகுதியில் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களின் நோக்கம் -இரும்பு கம்பிகளாலும் சைக்கிள் சங்கிலியாலும்- தமிழர்களை தாக்குவதாகும். வேலைவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவர்களை தாக்கினார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
அந்த ஆண்டு மட்டும் சுவிசில் எத்தனை அகதிகள் தங்குமுகாம் தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பதை ஆராய்ந்தோம். மொத்தம் 13 ஆகும். கூர் நகரை ஒட்டிய பகுதிகளில் மட்டும் நான்கு முறை. எனவே தான் Alexanderstrasse இல் நடந்த சம்பவம் தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வர வேண்டியுள்ளது.
தடயம்
கூர் சம்பவத்தின் விசாரணை ஆவணங்களை பார்வையிடுவதற்காக அரச அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஆண்டு நடந்த நான்கு தீ வைப்பு சம்பவங்களையும் ஆராய்ந்தோம்.
29.11.1988 ‘க்ளோஸ்ட்டர்’ இல் நடந்தது
ஆறு நபர்கள் தங்கியிருந்த முகாமிற்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. உயிர் சேதம் ஏதும் இல்லை. காவல்துறையினருக்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில் “நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று கூறியிருக்கிறார்கள். “அடுத்தது உங்களுடைய வீடாக கூட இருக்கலாம்” என்று அகதிகளிற்கு உதவியவர்களின் வீடுகளிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
02.07.1989
முரளி, முகுந்தன் மற்றும் இருவர் கொல்லப்பட்ட சம்பவம்
02.08.1989
கூரில் Loestrasse என்ற இடத்தில 100 பேர் வசித்து வந்த முகாமிற்கு இரவு தீ வைக்கபட்டது. விழித்திருந்த ஒருவர் தீ பிடித்ததை கண்டு அணைத்துள்ளார்.
07.08.1989
அதே Loestrasseஇல் மீண்டும் தீ வைக்கப்பட்டது. சுற்றியிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டது.
மேலே கூறிய சம்பவங்களில் தீ வைக்கப்பட்ட முறை நான்கு சம்பவத்திலும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. இரவு நேரம், தீ வேகமாக பருவுவதற்காக கையாண்ட யுக்தி, நித்திரையில் இருப்பவர்கள் தப்பித்து போக முடியாத படி வாசலில் தீ வைத்தது என்று எல்லா சம்பவத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது.
இந்த ஒற்றுமைகளை அன்று காவல்துறை கவனத்திற் கொள்ள முயற்சி செய்திருக்கவில்லை. இத்தனைக்கும் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெற்றிருக்கிறது. சம்பவத்தில் உயிர்பிழைத்த பத்து தமிழர்கள், காவல்துறைக்கு தீ பிடித்ததை அறிவித்த இருவர், வீட்டு மின்சார வேலைக்கு பொறுப்பான ஒருவர், வீட்டின் அடித்தளத்தில் கார் திருத்தும் நிறுவனர் மற்றும் ஒரு சந்தேகப்படும்படியான நபர் என்று அவர்களின் விசாரணையை முடித்துக்கொண்டார்கள். சுருக்கமாக சொல்வதானால், காவல்துறை விசாரணைக்காக தொடர்பு கொண்ட நபர்களை விட, இந்த செய்திக்காக நாங்கள் தொடர்புகொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகம்.
விசாரணைக்குழுவின் போக்கு இந்த சம்பவம் விபத்தா அல்லது அகதிகளே தீ வைத்தார்களா என்ற கோணத்தில் இருந்தது. இரண்டிற்குமான ஒரு ஆதாரம்கூட இருக்கவில்லை.
காவல்துறையினரின் விசாரணைக் கேள்விகள் சில தமிழர்களிற்குள் குழு மோதல்கள் சம்பந்தமாகவும், லிபிய அல்லது சிரியா நாட்டு அகதிகளுடன் தமிழர்களுக்கு முரண் இருக்கிறதா என்ற திசையில் இருந்தது.
துண்டுப் பிரசுரங்கள், மொட்டைக் கடிதங்கள், ஏற்கனவே நடைபெற்ற தீ வைப்பு சம்பவங்கள் என்று ஆதாரங்கள் போதிய அளவு இருந்தும் எந்த கேள்வியும் “இனவாதிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம்” என்ற கோணத்தில் கேட்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக இந்த விசாரணையில் அரச தரப்பு இனவாத கோணத்தில் விசாரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்தற்கான ஆர்வமே அவர்களிடம் காணக் கிடைக்கவில்லை.
அல்லது எங்களுடைய கண்களிற்கு புலப்படாமல் ஏதாவதை தவறவிட்டுவிட்டோமா?
ஓய்வுபெற்ற காவலதிகாரி
ஓய்வுபெற்ற காவலதிகாரியான Hannes Tarnutzer (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 35 வருடங்களிற்கு முன்னர் இந்த சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர். Landquart இல் அமைந்துள்ள ஒரு கஃபேயில் அவரை சந்தித்தோம். விசாரணை சம்மந்தமான ஆவணங்களை அவரிடம் காட்டினோம். முழுமையான விசாரணை ஆவணங்களை அவரும் இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கின்றார்.
35 வருடங்கள் சென்றிருந்தாலும் அவர் இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரின் பணிக்காலத்தில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்தில் இந்த கூர் சம்பவத்தில் மட்டுமே உயிர்கள் பலியாகியிருந்தன. எரிந்த உடல்களின் நாற்றம் இப்பொழுதும் அவருக்கு நினைவிலிருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற வசதிகள் அப்பொழுது இருந்திருந்தால் கண்டிப்பாக கொலைகாரர்களை பிடித்திருக்கமுடியும் என்றார்.
எங்களிடமிருந்த அரச ஆவண கோப்புகளை கொடுத்ததும் “இவ்வளவு தானா” என்று வியந்தார். ஒரு திருட்டு சம்பவத்திற்கே 15 கிலோ ஆவணக் கோப்புகள் சேர்ந்த சம்பவம் ஒன்று தனக்கு தெரியும் என்றார். இது வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான கோப்புகள்.
சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் சம்பவ இடத்தின் அருகிலிருப்பவர் தன்னுடைய காரில் இருந்து யாரோ பெட்ரோல் திருடிவிட்டார்கள் என்ற தகவலை ஆவணத்தில் வாசித்தார். திருடியவர்கள் ஒரு துணியை வைத்து மீண்டும் அடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். பெட்ரோல் டேங்கின் மூடி கண்டுபிடிக்கப்படவில்லை. கைரேகை ஏன் எடுக்கப்படவில்லை என்று Tarnutzer கேட்டார். துண்டுப்பிரசுரம், மொட்டைக் கடதாசி, கைரேகை என்று எதுபற்றியும் விசாரிக்கப்படவில்லை என்று வியந்து போனார். அயலவர்களிடம்கூட விசாரணை நடைபெறவில்லை என்பது அவருக்கு இன்னும் வியப்பை கொடுத்தது.
சம்பவம் நடைபெற்ற மாநிலத்தில் இப்படியான சம்பவங்களை விசாரணை செய்வதற்கு வல்லுநர்கள் பற்றாக்குறை இருந்ததனால், சூரிச் மாநிலத்திலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள். சூரிச் தடயவியலாளர்கள் சம்பவம் நடந்த இடத்தின் நுழைவாயில் காவல்துறையினர் வரும் போது திறந்திருந்ததாகவும், ஆனால் உள்ளே இரு