யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பலமுறை நான் இங்கு வந்திருக்கின்றேன்.
எம்மைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு நன்றி கூறுகிறேன்
அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும்; யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை.
மே தினத்தன்று (1) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எரிக் சொல்ஹெய்ம் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
அதேவேளை இவ்விஜயம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் எரிக் சொல்ஹெய்ம், அதில் மேலும் கூறியிருப்பதாவது:
சுமார் இருபது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருப்பதானது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச்செய்திருக்கின்றது. இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பலமுறை நான் இங்கு வந்திருக்கின்றேன். தமிழர்களில் எனது நெருங்கிய நண்பர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தின் பின்னர் இப்போதுதான் நான் முதன்முறையாக யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்திருக்கின்றேன். என்னுடைய நண்பர்களான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹிமன்ஷு குலாட்டி மற்றும் கவின்குமார் கந்தசாமி ஆகியோருடன் இங்கு சென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
அதேபோன்று இலங்கையின் சிரேஷ்ட தமிழ் தலைவரான எஸ்.சிறிதரனுடன் அண்மையகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், தற்போது ஆன்மிக நிலையமொன்றை நடாத்திவருபவரும், சமாதானப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்தில் எனது பழைய நண்பருமான ஜே.மகேஸ்வரனையும் சந்தித்தேன். அத்தோடு எம்மைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு நன்றி கூறுகிறேன்.
தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதுடன், அது மிகச்சிறந்த விடயமாகும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை.
இருப்பினும் தமிழர்களின் பல அபிலாஷைகள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. குறிப்பாக யுத்தத்தின்போது காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்திருக்கின்றன. கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இன்னமும் முழுமையாக அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதவழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆலயங்களை அடிப்படையாகக்கொண்டு நிலவும் குழப்பங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும். வட இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுபீட்சம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும்.
தமிழர் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும். இருப்பினும் அது வன்முறையற்ற விதத்தில் தொடரும் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.