திரியாய் வளத்தாமலை பகுதியில் ஆவணம் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ள அரசாங்க அதிபர் அனுமதி
.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட திரியாய் வளத்தாமலை பகுதியில் ஆவணங்கள் இருக்கின்ற காணிகளில் பொதுமக்களை விவசாயம் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் பௌத்த மதகுருமாருடன் நேற்று முன்தினம் (7) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
திரியாய் விவசாய சம்மேளனத்திற்குட்பட்ட வளத்தாமலை பகுதியில் திரியாய் மக்களுடைய உறுதிக் காணிகளை பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் மேற்கொள்வதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (07) மாலை இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ஸ நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள விவசாயிகள் உட்பட 30ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் பௌத்த மதகுருமாருடனும், பின்னர் விவசாயிகளுடனும் தனித்தனியாக கலந்துரையாடிய அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் விவசாயிகளினுடைய காணி ஆவணங்களை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் பின்னர் காணிக்குரிய ஆவணங்களை வைத்திருப்பவர்கள் தங்களுடைய காணிகளில் விவசாயம் மேற்கொள்ளுமாறு விவசாயிகளை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
1985ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆத்திக்காட்டுவெளி வளத்தாமலைப் பகுதியில் உள்ள காணிகளில் திரியாய் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக திரியாய் மக்கள் தமது கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர்.
2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தகப்பட்ட நிலையில் தங்கள் காணிகளில் விவசாயம் மேற்கொள்வதற்கு வனவள பாதுகாப்பு திணைக்களம் உட்பட அரச திணைக்களிடம் அனுமதி கோரியிருந்தபோதும் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் 2020ஆம் ஆண்டு முதல் பௌத்த பிக்கு ஒருவர் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் 82 ஏக்கரை தனது பெயரிலும், ஏனையோருடைய பெயரிலும் காணிகளை பதிவு செய்து அடாவடியான முறையில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையிலேயே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தமது சொந்த காணியில் விவசாயம் மேற்கொள்ளும் வாய்ப்பு திரியாய் விவசாயிகளுக்கு தற்போது கிடைத்துள்ளது.