Breaking News
பூநகரியில் யாரும் அறிந்திராத ஈழ நிலத்தின் மற்றுமோர் ஆதாரம் !
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவின்கீழ் அமைந்திருக்கிறது ஈழவூர் என்னும் பழம் பெரும் கிராமம்.
பூநகரியில் யாரும் அறிந்திராத ஈழ நிலத்தின் மற்றுமோர் ஆதாரம் !
தொன்மங்களை சுமந்த நிலம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவின்கீழ் அமைந்திருக்கிறது ஈழவூர் என்னும் பழம் பெரும் கிராமம்.
பெயருக்கு என்றால் போல் ஆதி இரும்புக்கால எச்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற நிலமாக அடையாளப் படுத்தப்படுகின்ற ஈழவூரில் அமைந்துள்ள வெள்ளிப்பள்ளத்து வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் பின்னுள்ள பகுதிகளில் வெளிவந்த தொல்லியல் எச்சங்களும், கிராஞ்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கிணறும் வரலாற்றின் கதைகளை உறுதி செய்கின்றன. அத்தோடு சங்ககாலத்துப் புலவர் ஈழத்துப் பூதந்தேவனார் இங்கு வாழ்ந்ததாகவும் செவிவழிக்கதைகள் கூறுகின்றன. இவ்வாறு, தொன்மையின் சுவடுகளை சுமந்திருக்கின்ற ஈழவூர் யாழ்ப்பாண இராசதானி காலத்தில் வெளிநாடு என்றும் அழைக்கப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள்.
பெயர் மாற்றப்பட்ட ஈழவூரும் அயற்கிராமங்களும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வேரவில் என்று பெயர்மாற்றப்பட்ட ஈழவூரிற்கு அருகில் அமைந்துள்ள பொன்னாவெளி, பாலாவி, கிராஞ்சி உட்பட்ட கிராமங்கள் பண்டைய காலத்தில் நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கி இருக்கின்றன. இவ்வாறாக இப் பிரதேசங்களில் விளைந்த நெல் மற்றும் பாற்பொருள் உற்பத்தியின் காரணமாகவும், இப்பிரதேசத்தின் புவியியல்சார்ந்த இட அமைவின் காரணமாகவும் வரலாற்றுக் காலத்தில் இப்பிரதேங்கள் புகழ் பெற்று விளங்கியிருந்தன. வன்னிப் பிராந்தியத்தில், குறிப்பாக பூநகரியின் வரலாற்றில் ஈழவூர் செறிந்த மக்கள் தொகையினை பதிவு செய்திருக்கிறது. இவ்வாறாக பொருளாதார மற்றும் குடித்தொகை வளம் ஆகியவற்றில் முன்னிலை வகித்ததன் காரணத்தினால் இப்பிரதேசங்களை தமது ஆளுகையின்கீழ் உட்படுத்துவதற்கு போர்த்துக்கேயர்கள் பெருமுயற்சி செய்ததாக வரலாறு சொல்கிறது.
இந்நிலையில், ஈழவூருக்கு அருகில் உள்ள பொன்னாவெளிக் கிராமத்தில் இன்று இடிபாடுகளோடு காணப்படுகின்ற பாடசாலையும், சிதைந்து போன நிலையில் காணப்படுகின்ற கட்டங்களும் சொல்லி நிற்கின்ற கதைகளும் ஈழவூரிற்கு கூடுதல் வலுச்சேர்க்கின்றன. நிலம் மலர நெல்விளையும் காரணத்தினால் பொன்விளையும் பூமியென சிறப்புப் பெற்று அழைக்கப்பட்டது பொன்னாவெளிக் கிராமம். ஐரோப்பியர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணியாமல் இப்பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த சைவப் பெரியவர்கள் இங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கென்று பதினெட்டாம் நூற்றாண்டில் பாடசாலை ஒன்றை நிறுவி சுமாமி ஆறுமுக நாவலரின் கரங்களினால் அப் பாடசாலையை திறந்து வைத்து கல்விப்பணி ஆற்றினர். கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலில் அமைக்கப்பட்ட பாடசாலையும் அதுவேயாகும். அத்தோடு அங்குவாழ்ந்த உடையாரின் வீட்டுச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படத்தை ஒற்றியே பிற்காலத்தில் ஆறுமுக நாவலரின் புகைப்படம் தமிழ் உலகிற்குக் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இருள்சூழ்ந்த காலம்.
இத்தகைய பெருமைகளைக் கொண்டிருக்கக் கூடிய பொன்னாவெளிக் கிராமத்தின் வயல் நிலங்கள் 1964 ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட சூறாவளித் தாக்கத்தின் காரணமாக கடல்நீர் உட்புகுந்து உவர் அடையத் தொடங்கியதோடு, தரைக்கீழ் நீர்வளமும் பாதிப்படையத் தொடங்கியது. பொன் விளையும் பூமியாக இருந்த பொன்னாவெளி மெல்ல மெல்லத் தன்னிலை இழக்கத் தொடங்க அங்கிருந்த குடிகளும் ஊரிலிருந்து வெளியேறி தற்போது ஈழவூரில் உறவுகளோடு வாழ்ந்து வருகின்றனர். குடிகளை இழந்த பொன்னாவெளிக்கு ஆலய வழிபாடு மற்றும், பெரும்போக பயிர்ச்செய்கையின் நிமிர்த்தமாக இன்றும் மக்கள் சென்று வருவது வழக்கத்தில் இருந்து வருகின்றது.
அழிவுக்கு வழிகோலும் அபிவிருத்தி.
இந்நிலையில் அபிவிருத்தி அரசியலின் பின்புலத்தில் தற்போது வேரவில் என்று அழைப்படுகின்ற ஈழவூரில் சீமெந்துத் தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கான திட்ட வரைபுகள் முன்மொழியப்பட்டு ஈ.ஐ.ஏ என்கின்ற சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு ஆரம்பகட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழவூரில் அமைக்கப்படவுள்ள இச் சீமெந்துத் தொழிற்சாலைக்கான மூலப் பொருளாகிய சுண்ணக்கல்லினை பொன்னாவெளியில் இருந்து அகழ்ந்து எடுப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உரிய நிலத்தின் சுண்ணக்கல்லின் தரத்தினை பரிசோதிக்கும் முயற்சியில் இலங்கை புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக பொன்னாவெளியில் உள்ள தனியார் வயல் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு ஆராட்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பரிசோதனைக்கென தோண்டப்படுகின்ற கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படுகின்ற உவர்நீர் பொறுப்பற்ற முறையில் வயல் நிலங்களிற்குள் பாய்ச்சப்படுகின்றது.
முறையற்ற இச் செயற்பாட்டின் காரணமாக ஏற்கனவே பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்ற விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கின்றனர். அத்தோடு இவை தொடர்பாக உரிய திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்ட போதிலும் எவ்வித முயற்சியும் பயனளிக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நிலைபேண் அபிவிருத்தியின் அவசியம்.
அபிவிருத்தி செயற்பாடுகளின் மூலமாக கிட்டுகின்ற நன்மைகள் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அழிக்கின்ற வகையில் நிகழக்கூடாது. அவ்வகையில் நிகழ்கின்ற அபிவிருத்தி செயற்திட்டங்கள் நிலைபேண் அபிவிருத்தியாகவும் கொள்ளப்பட முடியாதவை. ஆக, ஈழவூரில் அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள சீமெந்துத் தொழிற்சாலை அங்கு அமைக்கப்படுமாக இருந்தால் அப்பிரதேச மக்களுக்குக் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்பினைவிட ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் அதிகமாகும். தொழிற்சாலையில் இருந்து வெளிவிடப்படுகின்ற தூசுக்களின் காரணமாக வளி மாசுபட்டு சுவாசம் சார்ந்த அனர்த்தங்களை சுற்றுவட்டத்தில் வாழ்கின்ற கிராம மக்கள் எதிர்கொள்ள நேரிடும். அத்தோடு, பொன்னாவெளியில் அகழப்படப் போகின்ற சுண்ணக் கல்லின் காரணமாக அக் கிராம மக்கள் தமது பூர்வீக வயல் நிலங்களை இழக்க நேரிடும். அதுமட்டுமன்றி குறித்த பிரதேசம் கடலிற்கு அண்மையில் அமைந்திருப்பதன் காரணமாக கடல் நீர் உட்புகுந்து தரைக்கீழ் நீரோடு கலப்பதற்கான வாய்ப்புக்களும் மிக மிக அதிகமாக காணப்படுகின்றன.
அகழப்படுகின்ற சுண்ணக்கற்கள் போக, எஞ்சிய நிலத்தில் பாரிய இராட்சதக் குழிகள் ஏற்பட்டு, அப்பிரதேசமே தன்நிலை இழந்து, முற்றாக அழிந்துபோவது மட்டுமன்றி பொன்னாவெளிக்கு அருகிலுள்ள ஈழவூரின் தரைக்கீழ் நீர்வளத்திலும் மாற்றங்களை நிகழ்த்தக்கூடும். பொதுவாக, இவ்வாறான தொழிற்சாலைகளை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அறிக்கைகள் சமர்ப்பிக்கப் படுகிறபோது மக்கள் கருத்திற்காக குறிப்பிட்ட காலம் சுற்றுச் சூழல் திணைக்களத்தின் இணையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அக்காலத்தில் குறித்த யாரேனும் தமது கருத்துக்களை உரிய முறையில் பரிசீலனைக்காக தெரிவிக்க முடியும். ஆனால், இவை தொடர்பாக இக் கிராம மக்களிடம் உரிய விழிப்புணர்வு அற்ற நிலையில் ஏழை எளிய மக்களின் நலனினை புறம் தள்ளிய இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக குறித்த பிரதேசத்திற்குரிய மக்கள் பிரதிநிதிகள் கவனமெடுத்து இத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பது மக்கள் நலனிற்கான வேண்டுகோளாகும்.
ஈழத்தமிழர்களது இருப்பின் அடையாளங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறான அகழ்வுகள் குறித்த பிரதேசத்தின் தொல்லியல் இருப்பினை சிதைத்து அழிப்பது மட்டுமன்றி அர்த்தமற்றதாக்கிவிடும்.
வரலாற்றின் பக்கங்களில் பாதுகாத்து வைக்கப்படவேண்டிய அடையாளக் கிராமங்களாகிய ஈழவூரையும் பொன்னாவெளியையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும். இவ் அடிப்படையில் அவர் செய்வார் இவர் செய்வார் என்று காத்திருக்காமல் நமது நிலங்களில் இருக்கின்ற வரலாற்று மற்றும் தொல்லியல் அடையாளங்களை நாமே பாதுகாப்பதற்குரிய முயற்சிகளில் இறங்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் நம் இருப்பின் கதைகளை பேசுவதற்கு ஏதுவானதாகவும் அமையும்.
ஈழவூரின் தற்போதைய தேவை என்ன?
வரலாற்றின் எச்சங்களாக ஈழவூரில் வசித்து வருகிற மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை ஆற்ற விரும்பினால் காலம் காலமாக பழுதடைந்த, குன்றும் குழியுமான வீதிகளில் சிரமங்களோடு பயணிக்கிற மக்களுக்காக மக்களுடைய நலனை கருத்தில் கொள்ளுகிற திணைக்களங்கள் குறிப்பாக பிரதேச சபை, மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் அத்தோடு மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து பல்லவராயன் கட்டிலிருந்து உட்செல்லுகிற சுமார் 10 கிலோமீற்றர்கள் நீளமான பிரதான வீதியை புனரமைத்துக் கொடுங்கள். அதுவே அவர்களுக்கான சேவையும் தேவையுமாகும்.
முன்னர் ஒரு காலத்தில் ஏ32 பிரதான வீதியில் இருந்து ஈழவூரிற்கு செல்லுகிற “பன்னிரெண்டாம் கட்டை” என்று அழைக்கப்படுகிற வீதியூடாக செல்லுகிற பேருந்துகள் ஈழவூரை அடைந்து மீள இன்று பாவனையில் உள்ள பிரதான வீதியூடாக சம்புவெளியை கடந்து பல்லவராயன்கட்டு சந்தியை அடைந்து ஏ32 வில் ஏறி பயணப்பட்டன. ஆனால் இன்றைக்கு ஒரு பாதையை கூட முறையாக பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமாக காணப்படுகின்றது.
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் உட்கட்டமைப்பு வசதிகள் பிரதானமானவை என்பதை கருத்திற்கொண்டு சுயலாப அரசியல் நோக்கமற்ற செயல்களில் ஈடுபடுங்கள் என்பதே இன்றைய அரசியல் தலைவர்களிடம் முன்வைக்கக்கூடிய உழைக்கும் மக்களின் கோரிக்கையாகும்.
கீழுள்ள இந்தக் கட்டுரை 2021 இல் நான் எழுதி உதயன் பத்திரிகையிலும் இன்னும் சில தளங்களிலும் வெளிவந்திருந்தது, இன்னும் சில விடயங்களோடு தற்போது மீளவும் பகிரப்படுகிறது.