புதிய ஜனாதிபதியை வரவேற்க சீனா தயார்: இணைந்து பணியாற்றவும் விருப்பம்
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் ஜனாதிபதியாக யார் தெரிவானாலும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் ஆலோசகர் ஸு யாங்வே (Zhu Yanwei) கருத்து வெளியிடுகையில்,
“எந்த நாட்டின் இறையாண்மையிலும் ஒருமைப்பாட்டிலும் நாங்கள் தலையிட மாட்டோம். இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் யார் ஆட்சிக்கு வந்தாலும், புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது” என்று ஸு யாங்வே கூறினார்.
இதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) ஒரே சீனக் கொள்கைக்கு இலங்கையின் நீண்டகால ஆதரவைப் பாராட்டினார்.
“ஒரே சீனா கொள்கையை இலங்கை கடைப்பிடிப்பது எப்போதும் பாராட்டுக்குரியது. இது உண்மையான நட்பின் உணர்வை பிரதிபலிக்கிறது.
நட்பு நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் சீனா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அதேபோன்று சீனாவின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த சில முயற்சிகள் உள்ளன, ஆனால் அத்தகைய நோக்கங்களை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.” என்றும் கூறினார்.