பால் போல வெந்நிறத்தில் சிலரது சிறுநீர் இருப்பது ஏன்? சிறுநீரின் 6 நிறங்களும் காரணங்களும்
சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
நமது உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சிறுநீரின் நிறம், தன்மையை வைத்தே பல சமயங்களில் மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள். குறிப்பாக, சிறுநீரின் நிறம், பல்வேறு உடல்நல பிரச்னைகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
நமது உடலில் உள்ள கழிவுகளை உடலில் இருந்து அகற்றி சிறுநீரை வெளியேற்றுவதுதான் சிறுநீரகங்களின் வேலை. சிறுநீரில் நீர், யூரியா, உப்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. அதன் நிறம் பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பது ஆரோக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி அல்லாமல் சிவப்பு உள்ளிட்ட வழக்கத்திற்கு மாறான நிறங்களில் இருப்பது ஆபத்தின் அறிகுறி என்கிறார், சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆண்டன் யூரேஷ் குமார்.
தீவிர பிரச்னைகளை சிறுநீரின் நிறம் உணர்த்தினாலும், நாம் சாப்பிடும் உணவுகள் மற்றும் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை பொருத்தும் அதன் நிறம் சில சமயங்களில் அசாதாரணமானதாக இருக்கிறது. குறிப்பாக, நாம் அருந்தும் தண்ணீரை பொருத்தும் அதன் நிறம் மாறுபடும்.
உங்களின் சிறுநீர் எந்தெந்த நிறங்களில் வெளியேறுவது ஆபத்தின் அறிகுறி? அவை உங்கள் உடல் நலன் குறித்து உணர்த்துவது என்ன? இதுகுறித்து மருத்துவர் ஆண்டன் யூரேஷ் குமார் வழங்கிய தகவல்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
1. சிவப்பு நிறம்
சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுவது என்பது பெரும்பாலும் ஆபத்தின் அறிகுறியாகத்தான் இருக்கும். சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுகிறது என்றால் அது ரத்தத்தைத் தான் பெரும்பாலும் குறிக்கும். சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுவது, சிறுநீரக புற்றுநோய், சிறுநீரகக் கல் ஆகியவற்றின் அறிகுறியாகும்.
எனவே, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறினால் அதனை அவசர அழைப்பாகக் கருதி உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சிவப்பு நிறத்தில் வரும்போது, தண்ணீர் குடித்த பின்னர் சாதாரணமாக சிறுநீர் வருகிறதென நினைத்து அப்படியே விட்டுவிடக் கூடாது.
எனினும், பீட்ரூட், பிளாக் பெர்ரி போன்றவற்றை உட்கொண்டாலும் சில சமயங்களில் சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது உண்டு. அதேபோன்று, விபத்துகளில் சிக்கியவர்களுக்கும் சில சமயங்களில் சிவப்பு நிற சிறுநீர் வெளியேறலாம்.
2. அடர் மஞ்சள் நிறம் மற்றும் ஆரஞ்சு நிறம்
வெவ்வேறு அடர்த்தியில் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது பல நேரங்களில் சாதாரணமானதுதான். என்றாலும், அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது அதிகப்படியான நீரிழப்பை குறிக்கும்.
நீரிழப்பை (dehydration) கண்டுகொள்ளாமல் இருந்தால், சிறுநீர் எரிச்சலுடன் வெளியேறும். உடற்பயிற்சி, அதிகப்படியான வேலை, வெப்பமான பகுதியில் வாழ்தல் போன்ற காரணங்களால் அதிகமான நீரிழப்பு ஏற்படும்.
நீரிழப்பை கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே சிறுநீரக கற்கள் தோன்றும்.
மேலும், பைரிடியம், ஃபெனாசெட்டின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போதும் சில சமயங்களில் ஆரஞ்சு மற்றும் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
காசநோய்க்கு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கும் ஆரஞ்சு நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம். உடலுக்குத் தேவையான நீரை எடுத்துக்கொள்ளும் போது மீண்டும் வெளிரிய மஞ்சள் நிறத்துடன் சாதாரணமாக சிறுநீர் வெளியேறும். இதன்மூலம் நீரிழப்பைத் தடுக்கலாம்.
தேனின் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, நீங்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்பதை உணர்த்துவதாக, அமெரிக்கன் யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது.
3. பால் போன்ற வெண்மை நிறம்
அதிகப்படியான கொழுப்புடன் கூடிய பால் போன்ற வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது, யானைக்கால் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அப்படி வெளியேறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
அதேபோன்று, துர்நாற்றத்துடன், தெளிவற்ற பால் போன்ற வெண்மை நிறத்தில் சிறுநீர் வெளியேறும். அப்படி வெளியேறினால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
அதேபோன்று, துர்நாற்றத்துடன், தெளிவற்ற வெள்ளை நிறத்துடன் சிறுநீர் வெளியேறினால், ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இ-கோலி பாக்டீரியா, பூஞ்சை அல்லது வைரஸ் தொற்றை இது குறிக்கிறது. குறிப்பாக, அது சிறுநீர்ப்பாதை தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
4. காபி நிறம் மற்றும் கருப்பு நிறம்
காபி நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அது, யூரோபிலினோஜென் எனப்படும் மருத்துவ நிலையை குறிக்கும். இது, கல்லீரல் சம்பந்தமான நோய்களின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஃபாவா பீன்ஸ் எனப்படும் ஒருவகை பீன்ஸ்-ஐ அதிகப்படியாக உண்டாலும் இப்படி காபி நிறத்தில் சிறுநீர் வெளியேற வாய்ப்புண்டு.
மலேரியாவுக்கு எடுத்துக்கொள்ளப்படும் குளோரோகுயின், பிரைமாகுயின் போன்ற மாத்திரைகளாலும் சில ஆண்டிபயாடிக் மருந்துகளாலும் காபி நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
காபி நிறம் கலந்த கருப்பு நிறமாக சிறுநீர் வெளியேறுவது, மூலநோய் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
இவைதவிர, மிக அரிதாக, அசாதாரண வண்ணங்களிலும் சிறுநீர் வெளியேறுவதுண்டு. அவை மிக அரிதானது எனக்கூறும் மருத்துவர் ஆண்டன் யூரேஷ் குமார், அவை அதிக ஆபத்தும் நிறைந்ததல்ல என்கிறார். அவற்றில் சில:
5. இளஞ்சிவப்பு நிறம்
ரத்தம் நீர்த்துபோனால் இத்தகைய இளஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறும். பீட்ரூட் உள்ளிட்ட உணவுகளை உட்கொள்வதாலும் சில சமயங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம்.
6. பச்சை நிறம் – நீல நிறம்
பச்சை மற்றும் நீல நிறம் சார்ந்த உணவுப்பொருட்களை உண்ணும்போது இம்மாதிரி பச்சை, நீல நிறங்களில் சிறுநீர் வெளியேறுவது அரிதாக நிகழ்கிறது. அந்த உணவுப்பொருட்களை அதிகளவில் உட்கொள்ளும்போது அவ்வாறு வெளியேறலாம். பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேறலாம் என அமெரிக்க யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது.
இவை தவிர அதிகப்படியான செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும்போது, சிறுநீர் பச்சை அல்லது நீல நிறத்தில் வெளியேறலாம் என, அமெரிக்கன் யூரோலாஜிக்கல் அசோசியேஷன் கூறுகிறது. எனினும் இது அரிதாகவே நிகழ்கிறது.