நம் முன்னோர்கள் நோயை தவிர்க்க ஆண்டினை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்துள்ளனர்.
தமிழரின் உணவுமுறையில் மருத்துவம் சம்பந்தமான பல உண்மைகள் அடங்கியிருப்பதில் வியப்பில்லை. இவ்வுலகில் உள்ள எல்லா மனிதர்களும் விரும்புவது நோயில்லாமல் நலமாக வாழ வேண்டும் என்பதே ஆகும். நாம் தேடித்தேடி எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் உடல் நலமாக இல்லை எனில் எல்லாமே வீண்தான், ஆனால் இன்றைய காலத்தில் உடல்நலச் சிந்தனை மனிதர்களிடம் குறைந்து வருவதே நோய்ச்சூழலுக்கான முக்கிய காரணமாகும். நோயென்றால் மருத்துவர்களை நாடுவோம். ஆனால் இன்று உடல் நலத்திற்கே கூட மருத்துவர்களை நாடும் கலாசாரம் வந்துவிட்டது.
நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து” என்ற தாரக மந்திரத்தினைக் கடைபிடித்து வாழ்ந்ததால்தான் அவர்களால் நோய் நொடியின்றி நலத்துடன் இன்பமாய் வாழ முடிந்திருக்கின்றது. இதனைத் திருக்குறள், தொல்காப்பியம், சீவகசிந்தாமணி முதற்கொண்ட பல நூல்களும், சொல் வழக்குகளில் உள்ள பல பழமொழிகளும் நமக்குத் தெளிவாய் இன்றளவும் உணர்த்துகின்றன.
உணவின் அவசியம் குறித்து உணர்ந்த நம் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் நல்லதொரு உணவுக் கலாசாரத்தினை நமக்கு உருவாக்கித் தந்துள்ளனர். அதனை உணர்ந்து கடைபிடித்து வாழ்ந்தால் நாம் நீண்ட ஆயுளைப் பெறமுடியும்.
உணவே மருந்து:
‘உடம்பார் அழியின் உயிரார்அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே”
என்று திருமூலர் கூறியுள்ளார்.
உடல் இயக்கத்திற்கு உணவு தேவையானது. நல்ல உணவானது உடம்பிற்கு எந்தவித ஊறும் விளைவிக்காது. நாவிற்காக உண்ணாமல் உடம்பினைப் பேணிக்காக்கவே நாம் உண்ண வேண்டும். அதற்கு நமக்கு உணவினைப் பற்றிய தெளிவும் காலத்திற்கேற்ற வகையில் உணவினை உண்ணும் அறிவும் அவசியமாகும். இதனை உணர்த்தவே ‘உணவே மருந்து, மருந்தே உணவு” என்று நம் முன்னோர்கள் சொல் வழக்காக்கி உள்ளனர்.
நம் உடம்பின் நோய்க்கான காரணமாய் அமைகின்ற வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று காரணிகளைச் சம நிலையோடு வைத்திருக்கும்படியான உணவினை நாம் உண்டால் நோயின்றி வாழலாம். நலமான உடம்பே மேலான செல்வம் ஆகும்.
காலங்களுக்கு உகந்த உணவு:
நம் முன்னோர்கள் ஆண்டினை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். ஒரு பருவத்திற்கு இரண்டு மாதங்கள் வீதம் அதன் தன்மையினைக் கருதி இளவேனிற்காலம், முதுவேனிற்காலம், கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் என வகைப்படுத்தி உள்ளனர். பூமியின் தட்ப வெப்ப நிலைக்கு உட்பட்டு நம் உடலில் ஏற்படும் மாறுதல்களைச் சமப்படுத்தி வாழ்வதற்கேற்ற வகையில்தான் அந்தந்த காலங்களில் சில காய்களும், கனிகளும், தானியங்களும் சிறப்பாக மிகுந்து கிடைக்கின்றன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மசாலா உணவுகளையும், மாமிச உணவுகளையும், துரித உணவுகளையும் மற்றும் உலர் உணவு களையும் அதிகம் விரும்பிச் சாப்பிடுவதால் நோய்ச் சூழல் மிகுந்து காணப்படுகின்றன.
மழைக்காலங்களில் வயிறு, குடல் போன்ற உறுப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அக்காலங்களில் அதிகமாய் கிடைக்கும் நாவல் பழம், மாதுளம் பழம் முதலியவற்றை உண்ணலாம்.
குளிர்காலத்தில் சூரியனின் வெப்பம் குறைவாக இருப்பதால் காற்று அழுத்த மாறுபாடு காரணமாய் சுவாச உறுப்புகள் பாதிக்கப்படும். இந்தக் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் முதலியவற்றை உண்டால் சுவாச உறுப்புகள் சுகமடையும்.
கோடைக் காலத்தில் கல்லீரலுக்கு உகந்த மாங்காய், வேப்பம் பூ, விளாம்பழம் முதலியவற்றை உண்ணலாம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் கீரைகளான அகத்தி, முருங்கை மணித்தக்காளி முதலியவற்றை உண்பதால் நோயின்றி நலமாக வாழ இயலும்.
காலை வேளையில்:
பாசிப் பயறு, கடலை, துவரை, உளுந்து, மொச்சை போன்ற பயறு வகைகளும், சுக்கு, இஞ்சி, மிளகு, கடுகு, பெருங்காயம் போன்றவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மதிய வேளையில்:
பகற்காலத்தில் கிழங்கு, பழவகைகள், கீரைகள், தயிர், மோர் போன்ற உணவு பதார்த்தங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு வேளையில்:
இரவுக் காலங்களில் எளிதில் செரிக்கக்கூடிய அவரைப் பிஞ்சு, துவரம் பருப்பு, பால் போன்றவை பயன்படுத்த வேண்டும். இவ்விதம் காலத்திற்கேற்ற உணவுப் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தானால் தான் அவர்களால் நோயின்றி நீண்ட காலம் வாழ முடிந்தது. மேலும் வீரம், கலை, இலக்கியம் போன்றவற்றில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடிந்தது.
இத்தகைய நியதிகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று தான் சமயச் சடங்குகளையும், பண்டிகை காலங்களில் முக்கிய உணவாகவும் மாற்றி நல்லதொரு உணவுக் கலாசாரத்தினை ஏற்படுத்தினர்.
அளவுக்கு மிஞ்சினால்:
நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகமாகவும், மலிவாகவும், கிடைப்பதால் நாம் அளவுக்கு அதிகமாகவும், அடிக்கடியும் உண்ண நேரிடலாம். அப்படி நாம் அளவுக்கு மீறி உண்பதால் சில உடல் கோளாறுகள் ஏற்படலாம். அதற்கு நாம் எளிய முறையில் வீட்டிலேயே தீர்வு காணலாம். அதற்காக மருத்துவரை நாட வேண்டிய தேவை இருக்காது. அவற்றில் சில உணவுப்பொருள்
1. கத்திரிக்காய் அதிகம் சாப்பிட்டு உடல் அரிப்பு உண்டானால் – ஒரு தேக்கரண்டி நெய் சாப்பிடவும்,
2. கொய்யா பழம் சாப்பிட்டு வயிற்றுச் சிக்கலானால் – பெருஞ்சீரகப் பொடியை மோரில் சாப்பிடவும்,
3. தர்பூசணி அதிகம் சாப்பிட்டு குளிர்ச்சி உண்டானால் – கடுக்காய் பொடி ஒரு தேக்கரண்டி சாப்பிடவும்,
4. வாழைப்பழம் சாப்பிட்டு சீத பேதியானால் – ஒரு தேக்கரண்டி குல்கந்து சாப்பிடவும்,
5. மாம்பழம் சாப்பிட்டு வயிற்றுவலி, பேதியானால் – மாம்பருப்பு (அல்லது)ஏலப்பொடி சாப்பிடவும்,
6. தயிர் சாதம் அதிகம் சாப்பிட்டு தூக்கம், சோம்பல் உண்டானால் – பெருங்காயம் பொரித்துச் சாப்பிடவும்,
7. கோதுமை உணவு சாப்பிட்டு உடம்பு சூடாகி மலக்கட்டானால் -பாதாம் பருப்பு இரண்டு சாப்பிடவும்,
8. வாழை, கொத்தவரை சாப்பிட்டு வயிறு மந்தமாகாமல் இருக்க மிளகு, சீரகம் சேர்த்துச் சமைக்கவும்,
9. பரங்கிக்காய் சாப்பிட்டு வயிறு ஊதினால் – சீனா கற்கண்டு (அ) சர்க்கரை சாப்பிடவும்,
10. பூசணிக்காய் கூட்டு, அல்வா அதிகம் சாப்பிட்டு வயிறு உப்பினால் – சீரகம் ஒரு தேக்கரண்டி + சுக்கு ஒரு துண்டு கலந்து கஷாயமிட்டுச் சாப்பிடவும்
11. பனை நுங்கு சாப்பிட்டால் ஏற்படும் பேதி, வயிற்று வலிக்கு பெருங்காயம் பொரித்த மோரில் சாப்பிடவும்.
12. ஆட்டிறைச்சியினால் வயிற்றுவலி உண்டானால் – கொத்துமல்லி இலை ஒரு பிடி, இலவங்கப்பட்டை ஒரு துண்டு கஷாயமிட்டுச் சாப்பிடவும்,கோழிக்கறி சாப்பிட்டு தலைவலி, வயிறு வலி உண்டானால் – எலுமிச்சை பழச் சாறினைச் சாப்பிடவும்,
14. கோழிமுட்டை சாப்பிட்டு ஏப்பம், செரியாமை ஏற்பட்டால் – முள்ளங்கியை வேகவைத்துச் சாப்பிடவும்
"இயற்கை மருத்துவர் நந்தினி,
நோயை வெல்லும் உணவு:
நாவின் சுவைக்கும், வயிற்றுப் பசிக்கும், உடல் வன்மைக்கு மட்டுமல்லாமல் நோயுற்ற உடல் விரைவில் நோய் நீங்க மருந்துகளுக்கு உறுதுணையாகவும், ஊக்குவிப்பாகவும் விளங்கும் உணவுகளைத்தான் உன்னத உணவு எனலாம்.
தமிழரின் பாரம்பரிய உணவு வகைகளில் பெரும்பாலானவை உன்னத உணவுகளாகும். ‘உணவு” என்பது இயற்கையான நிலவியல் பரப்பில் கிடைக்கின்ற உயிர் வேதியில் பொருளாகும். ‘சரியான உணவு உண்டால் எந்த மருந்தும் தேவைப்படாது, சரியான உணவு உட்கொள்ளாவிடில் எந்த மருந்தும் பயன்படாது” என்ற பழமொழிக்கு ஏற்றாற் போலத்தான் இன்றைய உணவும் இருக்கிறது.
நமது நாட்டில் வாழ்ந்த மக்கள் தேச, காலநிலைகளை அனுசரித்துத் தகுந்த உணவு முறைகளைப் பின்பற்றி நலமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்நியர் வருகையால் ஏற்பட்ட கலாசார ஊடுருவல் நமது மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழரின் உணவுமுறையில் மருத்துவம் சம்பந்தமான பல உண்மைகள் அடங்கியிருப்பதில் வியப்பில்லை.
இன்றைய காலகட்டத்தில் மனிதனைப் பல நோய்கள் ஆட்டிப்படைக்கின்றன. அவை மதுமேகம், புற்று நோய், உடல் பருமன், சுவாசத் தொடர்பு நோய்கள், குடல் புண், மூலம், மாதவிடாய்க் கோளாறுகள், மூட்டுத் தேய்வு நோய்கள், ரத்தச் சோகை என பலவற்றைக் கூறலாம். இதில் பெரும்பாலானவை சத்து குறைவினாலும், தவறான உணவுப் பழக்க வழக்கத்தாலும் ஏற்படுவது, இவற்றைச் சரிசெய்தால் நாம் பல நோய்களை வெல்லலாம்.