ரூ. 150-க்காக கடைக்காரரை எரித்து கொன்ற நபர்கள்: நாகர்கோவிலில் பகீர் சம்பவம்!
தலையில் பாலிதீன் கவர் கொண்டு மூடி, அருகில் கிடந்த கல்லை எடுத்து வேலுவின் தலையில் போட்டுத் தாக்கினோம்.

நாகர்கோவிலில் பலசரக்கு கடை வியாபாரியை 150 ரூபாய்க்காக எரித்து கொலை செய்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் பலசரக்கு கடை வியாபாரியை ரூ.150-காக இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஒருவரை கைது செய்துள்ள தனிப்படை காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மற்றொரு இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு (45). இவர் பாரதி நகரில் பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், இவர் தினமும் காலையில் கடைக்கு வந்துவிட்டு, இரவு அவரது இருசக்கர வாகனத்தில் இந்து கல்லூரி பின்புறம் உள்ள கவிமணி நகர் வழியாக வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், மார்ச் 7ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற வேலு, வீடு சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் பாண்டியன் வீதி பகுதியில் உள்ள குறுக்குப் பாதையில் வேலு எரிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார்.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கோட்டார் காவல்துறையினர், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
மேலும், வேலுவின் சகோதரர் குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளைப் பிடிக்க நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து கவிமணி நகர், பாரதி நகர், பாண்டியன் வீதி, பெரிய விளை, பீச் ரோடு, செட்டிகுளம், இந்து கல்லூரி போன்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சம்பவம் நடந்த இடத்தின் அருகே உள்ள பகுதிகளிலும் இரண்டு வாலிபர்கள் சுற்றித்திரிந்த காட்சிப் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில், அவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், ஆரல்வாய்மொழி திருமாலபுரத்தைச் சேர்ந்த சுதன் (26) என்பவருக்கு வேலுவின் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், சுதனை நேற்று கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த இளைஞர் வேலுவை கொலை செய்ததையும், அதில் அவரது நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் விசாரணையில், "கடந்த 7ஆம் தேதி இரவு வேலு கடையை பூட்டி விட்டு அவரது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது நானும், எனது நண்பனும் அவரது இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி மது குடிக்க பணம் தருமாறு கேட்டோம்.
ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அவரது பாக்கெட்டை சோதனை செய்த போது ரூபாய் 150 மட்டும் இருந்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டோம். பின்னர் அவரை உயிரோடு விட்டால் நம்மை காட்டிக் கொடுத்து விடுவார் என்பதால் அவர் தலையில் பாலிதீன் கவர் கொண்டு மூடி, அருகில் கிடந்த கல்லை எடுத்து வேலுவின் தலையில் போட்டுத் தாக்கினோம். அதில் வேலு நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.
மேலும், அந்த இடம் ஆள் நடமாட்டம் மிகுந்த சாலை என்பதால், அப்படியே போட்டுவிட்டு சென்றால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் அருகே இருந்த குறுக்கு சாலைக்கு வேலுவையும், அவரது இருசக்கர வாகனத்தையும் கொண்டு சென்றோம். பின்னர், வேலுவை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரிடம் இருந்து எடுத்த பணத்தில் 50 ரூபாய்க்குப் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் வாங்கி வந்து, அவர் மீது ஊற்றித் தீயிட்டுக் கொளுத்தி விட்டு, தப்பிச் சென்றோம்" என வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
தற்போது, இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சுதனின் நண்பரை பிடிக்கத் தனிப்படை காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுதனின் நண்பரும் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் குமரி மாவட்டத்தில் வேறு எங்காவது பதுங்கியுள்ளாரா எனத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.