பலதும் பத்தும் ‘Govpay’ திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது.
,

* நாட்டில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரிப்பு! : நாடளாவிய ரீதியில் சிக்குன்குனியா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மழையுடன் கூடிய காலநிலையினால் நுளம்புகள் பெருகியதன் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோயின் அறிகுறிகளாக ஆரம்ப நாட்களில் கடுமையாகக் காய்ச்சல், கடுமையான மூட்டு வலி மற்றும் தசை வலி, மூக்கு கருமையாதல் மற்றும் தோலில் ஆங்காங்கே கறுப்பு புள்ளிகள் தோன்றுதல் என்பன ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நுளம்புகள் பெருகும் இடங்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்த நிலையைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
* சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படுள்ள அறிவித்தல்! ; 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்றவும், கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் என அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த அறிவித்தல் வழங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
* முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை சடுதியாக குறைவு!; சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முட்டையின் விலை 24 ரூபா முதல் 30 ரூபா வரையிலும், கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் 650 ரூபா முதல் 850 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
*சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!; சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் இருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 50 வயதுடைய இரு சந்தேக நபர்கள் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
* அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு! ; யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (2) உயிரிழந்துள்ளார். 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின் போது அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்டமைக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே, அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
* ‘Govpay’ திட்டத்தை அறிமுகம் செய்யும் அரசாங்கம்! ; அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ‘Govpay’ திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.