ஒவ்வொரு இளைஞர்களும் இலங்கை அரசியலை அறிந்து கொள்ள வேண்டும்.
.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் வாக்குகளால் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களையும் , சுகபோகங்களையும் பற்றி நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் ? எல்லாம் மக்கள் பணம் !
நாம் தெரிவுசெய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வரி செலுத்துவோரின் இழப்பில் ஏராளமான சலுகைகளை அனுபவிக்கின்றனர். நாங்கள் செலுத்தும் வாக்குகள் அவர்களுக்கு மிகப்பெரும் வாழ்வை கொடுத்து நிற்கிறது, ஆனால் எங்கள் வாழ்வியல் எதுவித முன்னேற்றமும் இன்றி ஒற்றை புள்ளியிலேயே ஒடுங்கி விடுகிறது ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமது வாக்குகள் மூலமாக எம்பிக்கள் ஆகி என்ன என்ன வரப்பிரசாதங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் சொல்கிறேன். தற்போது, ஒரு MP மாதம் சராசரியாக, 55,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். கூடுதலாக, ஒரு எம்.பி.க்கு உரிமையுள்ள பல்வேறு சலுகைகொடுப்பனவுகள் உள்ளன. இவற்றில் அலுவலக அலவன்ஸ் மாதம் ரூ. 100,000 அடங்கும், இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதச் சம்பளத்தை விட இருமடங்காகும்.
இந்த கொடுப்பனவு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நல்லாட்சி அரசாங்கத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. முன்னாள் பிரதமரின் இந்த மிகப்பெரிய அதிகரிப்புக்கான காரணம் ஒருபோதும் விளக்கப்படவில்லை; இது நாட்டிற்கு எந்த நன்மையையும் தராத பொது நிதியின் மொத்த தவறான ஒதுக்கீடு.
ஒரு எம்.பி.க்கு அஞ்சல் கட்டணமாக ரூ.350,000 (Annually ) மற்றும் தொலைபேசி அலவன்ஸ் ரூ.50,000 மாதம் வழங்கப்படும். இவை அனைத்தும் ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் ரூபாயை சேர்க்கின்றன. தனது தொகுதியில் அலுவலகத்தை பராமரிப்பதற்காக 100,000 யும் போக்குவரத்துப்படி 15,000 யும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான வரியில்லா கொடுப்பனவுக்கு உரிமையுடையவர் மற்றும் இந்த கொடுப்பனவு 40 மில்லியனுக்குக் குறையாது.
இந்த வரி விலக்கு அளிக்கப்பட்ட வாகன உரிமைகளை பெற்றுக்கொண்டு, அதை விற்று காசாக்குகின்ற ஏராளமான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள், பட்டியல் தேவை என்றால் கேளுங்கள் தருகிறேன். Bar permit , Petrol உரிமங்கள் போன்றவை கணக்கில் இல்லாதவை. நாடாளுமன்றத்தில் வருகின்ற சட்டப் பிரேரணைகளை நிறைவேற்றுவதற்காக கைய உயர்த்தி விட்டு, பெட்டிகளை பெற்றுக் கொள்ளும் கோடிகளை கொட்டிக் கொள்ளும் வரப்பிரசாதங்கள் கணக்கில் உள்ளடக்கப்படவில்லை, (Ex -20 ம் திருத்தம் + இரட்டைப் பிரஜாவுரிமை )
இதனிடையே பிரதமருக்கு மாதம் 71,500 ரூபாய் அடிப்படை சம்பளம். நாடாளுமன்ற சபாநாயகர் 68,000 ரூபாவையும் பிரதி சபாநாயகரின் அடிப்படை சம்பளம் 63,500 ரூபாவாகவும் பெறுகிறார். அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மாதாந்தம் 65,000 ரூபா அடிப்படைச் சம்பளமாகப் பெறுகின்றனர், அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவரும் பெறுகின்றார்.
எம்.பி.க்களை பொறுத்தவரை அவர்களின் அடிப்படை சம்பளம் 54,285 ரூபாய். நாடாளுமன்றத்திற்குச் செல்லும் தினசரி 2,500 ரூபாயும் பெறுகிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் எரிபொருள் கொடுப்பனவு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தூரத்தை கணக்கிடுவதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது,
இதைவிடவும் மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள தேர்தல் தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாடகையில்லா அடுக்குமாடி குடியிருப்புக்கு உரிமை உண்டு. (Madiwela housing complex) இதற்கான மாதாந்த அறவீடு வெறுமனே 1000 ரூபா மட்டுமே. அந்த குடியிருப்புக்கான மின்சாரக் கட்டணம் வெறுமனே 2500 மட்டுமே,
ஐயாயிரம் ரூபாய் கடந்து விட்டால் என்னுடையதோ உங்களுடையதோ வீட்டு மின் இணைப்புகளை துண்டித்து விடுவார்கள். வெறுமனே 2500 ரூபாய் மாத மின் கட்டணம் என்பது சாதாரணமாக அடிப்படையில் மிக கீழ் நிலையில் இருக்கின்ற ஒருவரின் மின் கட்டணமாகும். சொகுசு வாழ்க்கையில் சுகபோகம் அனுபவிக்கும் ஒருவர் AC அறையில் ஓசியில் இருப்பதற்கு கட்டணம் 2500 மட்டுமே.
மேலும், அவர்கள் ஓய்வூதியம் பெறவும் தகுதியுடையவர்கள். பொதுவாக, அரசு ஊழியருக்கு மட்டுமே ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடைக்கும்; ஆனால் MP க்கள் MP யாக ஐந்தாண்டுகளை முடித்த பிறகு ஓய்வூதியத்தை அனுபவிக்கின்றனர்.
இம்முறை 70-க்கும் மேற்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான ஐந்து ஆண்டு காலத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு முன்னர், நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்ட காரணத்தால் தங்களுக்கான ஓய்வூதிய தொகையை பெறுவதற்கு தகுதியற்றவர்களாக மாறியமை வேறுகதை.
உதாரணமாக, ஒரு MP தனது ஐந்தாண்டு சேவைக்காக 18,091 ஓய்வூதியமாகப் பெறுகிறார். மறுபுறம் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் சேவைக்காக 21,666 மதிப்பிலான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள். ஐந்தாண்டு பணிக்கான சபாநாயகரின் ஓய்வூதியம் 22,833.50. ஐந்தாண்டுகளின் முழு பதவிக்காலத்தை முடிக்கும் ஒரு பிரதமர் ஓய்வூதியமாக 23,500 ரூபாய் பெறுகிறார்.
இதனிடையே சில அமைச்சர்கள் தமது அமைச்சில் மூன்று அல்லது நான்கு வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் 15 பேர் வரையிலான துணை ஊழியர்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்களின் ஒருங்கிணைப்புச் செயலர் தற்போதைய விலையின் அடிப்படையில் 100 மணிநேர கூடுதல் நேர ஊதியம்( over time) மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளுக்குத் தகுதியுடையவர், மேலும் ஒரு துணைப் பணியாளர் நியமிக்கப்படுகிறார், அவர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.
அமைச்சர்களின் இந்த ஊழியர்கள் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளையும் பெறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பேர் அடங்கிய துணை பணியாளர்கள் வழங்கப்படுவதுடன் (அதுவும் குடும்ப உறுப்பினர்களே), அமைச்சர்கள் பதவிக்காலத்தில் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு உரிமை உண்டு. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஐந்து மில்லியன் ரூபாவையும் இரண்டு மில்லியன் ரூபா வரையிலான காப்புறுதித் (Insurance ) தொகையையும் பெறுகின்றனர்.
ஒரு எம்.பி., பயங்கரவாதத் தாக்குதலால் அல்லது விபத்தில் இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு ஆறு மில்லியன் ரூபாய் வழங்கப்படும். இந்தச் சலுகைகள் அனைத்தும் அரசாங்கத்தில் அவர்கள் பணியாற்றிய ஐந்தாண்டு காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
‘நீங்கள் ஈட்டும்போது வரி செலுத்துங்கள்’ Pay As You Earn Tax (PAYE) முறையின் கீழ் அரசாங்கம் அண்மையில் வெவ்வேறு வருமான வரையறைகளை அறிமுகப்படுத்தியது.
நீங்கள் மாதத்திற்கு 100,000 முதல் 141,667 ரூபாய் வரை சம்பாதித்தால், ரூபாய் 100,000க்கு மேல் சம்பாதித்ததற்கு 6% வரி விதிக்கப்படும். இதே முறையில் நீங்கள் மாதத்திற்கு 141,667 முதல் 183,333 ரூபாய் வரை சம்பாதித்தால், உங்களிடமிருந்து 12% வசூலிக்கப்படும்.
நீங்கள் அதிகம் சம்பாதிக்கும் போது வரி விகிதம் அதிகரிக்கிறது - 183,333 முதல் 225,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 18%, 225,000 முதல் 226,267 ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 24% மற்றும் மாதத்திற்கு 226,267 முதல் 308,333 ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 30%; நீங்கள் மாதத்திற்கு 308,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், உங்களிடமிருந்து 36% வரி விதிக்கப்படும்.
சரி இந்த வரி வரையறை முறைகளை ஏன் உங்களுக்கு சொல்லி இருக்கிறேன் என்று நீங்கள் யோசிக்கலாம், வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம் .
அண்மையிலே நாடாளுமன்றத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (தயாசிரி ஜெயசேகர) தான் வரியாக 36% செலுத்தியதாக (77,466) புலம்பி தள்ளுகிறார். ஓகே வரியாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் 36 வீதத்தை செலுத்தி இருப்பாராக இருந்தால் அவரின் மாதத்துக்கான வருமானம் (350,000 +) என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் அனுமானித்துக் கொள்ளுங்கள் .2023 ஜனவரி மாதம் MP ஒருவரின் சமூக வலைத்தளத்தில் வெளியான Pay sheet ஒன்றையும் நான் இங்கே இணைத்து இருக்கிறேன். (322,658 ரூபா சம்பளமாக ஒரு குறித்த மாதத்தில் அவர் சம்பளமாக பெற்றிருக்கிறார்.
நாடாளுமன்ற உணவுக்கான செலவுகள் ரூ. ஆண்டுக்கு 120 மில்லியன். மேலும், மின்சாரம், தொலைபேசி வசதிகள், குடிநீர் ஆகியவற்றிற்காகச் செலவிடப்பட்ட மொத்தத் தொகை தோராயமாக ரூ. ஆண்டுக்கு 103 மில்லியன். இதன் மூலம் மொத்தம் ரூ. 220 மில்லியன் நாடாளுமன்றத்தை ஓராண்டுக்கு இயங்க வைக்க தேவைப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத்தின் (2020) ஆரம்ப நாட்களிலான தொராயமான செலவு விபரங்கள் இவை.
நாடாளுமன்றத்தில் ஐந்து பிரத்தியேக உணவகங்கள் மற்றும் VVIP உணவு அறைகள் உட்பட 12 உணவு மற்றும் பானங்கள் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதன் விளைவாக ஏற்படும் செலவு ரூ. 225 பேருக்கு உணவளிக்க மாதத்திற்கு 10 மில்லியன் அல்லது தோராயமாக ஒரு நபருக்கு மாதம் 45,000.
உணவுக்காக ஒரு நபருக்கு மாதத்திற்கு 45,000 என்பது ஒப்பீட்டளவில் பெரிய தொகை. இந்த எண்ணிக்கையைப் பார்த்தால், உணவுச் செலவை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது தெளிவாகிறது. இதற்கு நடவடிக்கை எடுக் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? மோசமான வருகை உணவுக்கான செலவு அதிகமாக இருந்தாலும், பார்லிமென்டில் வருகை குறைவாக உள்ளது. 20 எம்.பி.க்களின் கோரம் கூடாததால், பல நாட்கள் நாடாளுமன்றம் கூட்டப்படாமல் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களின் செலவில் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பது இப்போது தெளிவாகிறது.
யாருக்கு பாதிப்பு?
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் தங்கள் இடத்தைப் பாதுகாக்க மக்கள் ஏன் தேர்தல் பிரச்சாரங்களுக்கு இவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லையா?
வரி செலுத்துவோர் மறைமுகமாகச் செலுத்தும் இத்தகைய அதிகப்படியான செலவுகளைக் குறைக்கும் திறன் அரசுக்கு உள்ளது என்பதும் தெளிவாகிறது. எம்.பி.க்களுக்கு இவ்வளவு சலுகைகள் அளிக்கப்பட்டாலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் குறைந்த போக்குதான் உள்ளது. சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால், நாம் அவர்களுக்காக செலவிடும் பணத்திற்கு அவர்களின் சேவை மதிப்புள்ளதா?
கஷ்டப்பட்டு சம்பாதித்த பொதுப் பணத்தை பொறுப்புடன் கையாளும் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா? நாங்கள் நிதியளிப்பவர்கள், அவர்கள் எங்கள் குரல். இந்தச் செலவையெல்லாம் நாம் தாங்கிக்கொள்ள அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்கிறார்களா என்பதுதான் கேள்வி. அது மதிப்புள்ளதா?
மிகப்பெரிய இன்னல்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு படித்து அரச கல்வி & நிர்வாக சேவை ( SLAS , SLEAS, SLPS ) போட்டி பரீட்சைகளில் முட்டி மோதி சித்தியடைந்து மிகப்பெரிய கல்விமான்கள் கூட இவ்வளவு தூரமான வருமானமீட்டல்களை தங்கள் வாழ்நாளில் பெறுவது கிடையாது.
ஆகவே மக்கள் சேவையாற்றுவதற்காக நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும், என்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குங்கள் என்று யாராவது உங்களிடம் வந்து கேட்டால் அவரை நேரடியாக என்னிடம் கூட்டிவாருங்கள், இங்கே இருக்கின்ற வரப்பிரசாதங்களை வைத்துக்கொண்டு நிற்க வைத்து நான்கு கேள்வி கேளுங்கள்.
என்னை பொறுத்தவரையில் இந்த நாட்டில் உயர் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் செல்வதற்கு ஆசைப்படும் எல்லோரும் 75 % + மானவர்கள் உழைப்பதற்காகவும் சொத்து சேர்ப்பதற்காகவும் மட்டுமே ஆசைப்படுகிறார்கள், இல்லாவிட்டால் தங்கள் Illegal Business ஐ பாதுகாக்கவே என்பதை பகிரங்கமாகவே சொல்லி வைப்பேன்.
வெறும் பத்து வீதமானவர்கள் மட்டுமேதான் உண்மையான சேவையுடனும் மக்கள் சேவையாற்றவும் என்று புறப்படுகிறார்கள்.
இம்முறை தூய சிந்தனையோடு நாடாளுமன்றம் சென்று ஊழலற்ற நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும் என்கின்ற போர்வையில் போட்டி போட தயாராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை ,நீங்கள் நான் குறிப்பிடும் அந்த பத்து வீதத்தில் ஒருவராய்
இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
எங்கள் திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழர் பிரதிநிதித்துவம் காக்கப்பட வேண்டும், தமிழ் மக்கள் தமிழ் எம்பி ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் இல்லாவிட்டால் எங்கள் தமிழருக்கான உரிமை இல்லாத போய்விடும் என்று மக்களின் மண்டையை கழுவி ஒரு வயது முதிர்ந்த பெருந்தலைவர் ஒருவரை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்.
இறுதியாய் அவர் நாடாளுமன்றம் சென்றதற்கு பின்னர் அவர் உயிர் நீத்த பின்னர்தான் அவர் உடலம் திருமலையை வந்தடைந்தது, இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டு காலத்தில் எத்தனை கோடிகள் அளவிலான வரப்பிரசாதங்களை அந்த பெருந்தலைவர் பெற்றிருப்பார் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
மக்களுக்காகவும் தேசியத்திற்காகவும் நாட்டின் உரிமைக்காகவும் நாடாளுமன்றம் அனுப்புங்கள் என்று கேட்ட ஒருவர், தன் உடல்நிலை இயங்க மறுத்தபோது அதனால் ஏற்பட்ட வருமான ஈட்டல்களையும் வரப்பிரசாதங்களையுமாவது அந்த மாவட்டத்தில் இருக்கின்ற மக்களுக்கு அல்லது பாடசாலைகளுக்கோ கொடுத்து உதவி இருந்தால்கூட நான் கையெடுத்து கும்பிட்டு இருப்பேன்.
இதனை எல்லாம் உரக்க உரக்கச் சொன்னால் உங்களுக்கு என்னை பைத்தியகாரனை பார்ப்பது போன்றுதான் பார்க்கத் தோன்றும். இப்படித்தான் ஜேவிபி இவ்வாறான ஊழல்களை புட்டு புட்டு வைத்த போது நீங்களும் நானும் நோக்கினோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 11 பில்லியன் என்று அறியப்படுகிறது ,அப்படியாக இருந்தால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நாம் நாடாளுமன்றம் அனுப்புவதற்காக மட்டும் ஐந்து கோடி ரூபாய் அளவிலான எங்கள் தொகையை விரயம் செய்கிறோம் . இத்தனைக்கும் இது கடந்தாண்டு Budget ல் ஒதுக்கப்படாத நிதி என்பதும் சிந்திக்கவேண்டியது, ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 பில்லியனுக்கும் அதிகமான நிதி செலவு செய்யப்பட்டு இருக்கிறது, ஆக குறித்த கால இடைவெளியில் இரண்டு பெரும் தேர்தலுக்காக இவ்வளவு பெரிய நிதி நாட்டின் திறைசேரியால் செலவு செய்யப்படுகிறது.
இத்தனை புள்ளி விபரங்களையும் உங்களுக்கு எதற்காக நான் முன் வைத்திருக்கிறேன் என்று சொன்னால், உங்கள் வாக்கு என்பது எவ்வளவு பலமானது என்பதும் உங்கள் வாக்குகளால் அனுப்பப்படும் ஒரு உறுப்பினர் எவ்வளவு வரப்பிரசாதங்களை அனுபவிக்கிறார் என்பதையும் உணர்ந்து சரியான தெரிவை தேர்வு செய்யுங்கள்.
ஊழல் அற்ற நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்க உதவுங்கள், உங்கள் வாக்குகளை செலுத்த தயாராக முன் ஆழமாய் சிந்தியுங்கள் + செயல்படுங்கள் . ஊழலற்ற நாடாளுமன்றம் ஒன்று அமையட்டும் .
தில்லையம்பலம் தரணிதரன்
27.09.2024