பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ‘பாதரசமாக’ தான் இருப்பார்கள் - கருணாஸ்
ஆளுகின்ற அரசின் மீது குறை சொல்லுகின்ற போதுதான், ஆத்திரத்தில் இருக்கக்கூடிய சிலரை ஒருங்கிணைக்க முடியும் என்ற உள்நாக்கத்தோடு நடக்கிற அரசியல்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைகோ, கருணாஸ், நாராயணசாமி உள்பட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை முதலமைச்சர் கொண்டாடினார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழாவில், கட்சி நிர்வாகிகள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, முதலமைச்சர் கேக் வெட்டி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இதன்பிறகு ஒரே இலக்கு, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து கூட்டணிக் கட்சி தலைவர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவை உறுப்பினர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்களான நாரயணசாமி, வைத்தியலிங்கம் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை: வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளோம். சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் விளங்கி கொண்டிருக்கிறார். மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, இந்தியாவில் எல்லாவற்றுக்கும் முதலில் குரல் கொடுப்பவராக முதலமைச்சர் விளங்கிக் கொண்டிருக்கிறார். தாய் மொழியை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மைக்கு புறம்பாக பேசுபவர்கள் தான் பா.ஜ.க தலைவர்கள்,” என்றார்.
முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ்.
இதையடுத்து பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், “இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் மும்மொழிக் கொள்கைகளை எதிர்கொண்டு, எந்த ரூபத்திலும் மத்திய பாசிச அரசு செயல்படுத்த துடிக்கின்ற எந்த செயல்பாடுகளையும், செயல் திட்டங்களையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.அண்ணாவின் இருமொழிக் கொள்கையையே செயல்படுத்துவோம். மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம் என்ற உறுதியில் இருக்கிறார் முதலமைச்சர். 5,000 கோடி அல்ல 10,000 கோடி ரூபாய் தந்தாலும், இருமொழிக் கொள்கை மட்டும்தான் செயல்படுத்துவோம் என்று சொன்ன முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர்.
ஜனநாயக நாட்டில் அரசியல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் இன்றைக்கு நாடு இருக்கக்கூடிய நாசமான சூழலில் ஒட்டுமொத்தமாக ஆரிய, ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தின் கொள்கைகளை கொண்டு செயல்பட்டு வரும் பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் பாதரசமாகத்தான் இருப்பார்கள்.
பாசிசம் Vs பாயாசம் = பாதரசம்
பாதரசம் எந்த உலோகத்தோடும் ஒட்டாத ஒன்று. அதுபோல இவர்கள் மக்களோடும் ஒட்ட மாட்டார்கள். பாசிசத்தின் சித்தாந்தமாக விஜய் உள்ளார். அதை போக போக புரிந்து கொள்வீர்கள்.
இன்றைய சூழலில், ஒட்டுமொத்தமாக நமக்கான முக்கியத்துவத்தை, அரசியல் ரீதியாக நாடாளுமன்றத்தினுடைய எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், தமிழ்நாட்டு மக்களால், தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நடிகன், கலைஞன் தமிழ் மக்களுக்கு துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார்.
ஆளுகின்ற அரசின் மீது குறை சொல்லுகின்ற போதுதான், ஆத்திரத்தில் இருக்கக்கூடிய சிலரை ஒருங்கிணைக்க முடியும் என்ற உள்நாக்கத்தோடு நடக்கிற அரசியல். பொதுவாழ்வு என்பது பூங்காவில் அமர்ந்திருப்பது அல்ல; புயலை எதிர்த்து நிற்பது.
அந்த பெண் விருப்பதுடனே என்னுடன் இருந்தார் என சீமான் இப்படி ஒரு வார்த்தையை பேசியது ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய பேர் இதற்கு வருத்தப்படுகிறார்கள். அது நல்லதாக தெரியவில்லை. சாதி ரீதியிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
பா.ஜ.க., கூட்டணியில் உள்ளவர்கள், அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு எடுத்தாலும் கூட அதை நடைமுறைப்படுத்துவது ஒன்றிய அரசுதான். சாதி ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒன்றிய அரசை அண்ணாமலை வலியுறுத்தலாமே,” என்று தனது பேச்சை நிறைவு செய்தார்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இதையடுத்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிற மாநிலங்களில் உள்ளவர்களும், வெளிநாட்டினரும் கூட வருகை தருகின்றனர். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை செய்யப்படுவதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு பாதிப்பு உள்ளது,” என்றார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.
இதையடுத்து பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “தமிழ்நாடு முதலமைச்சருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தோம். நீங்கள் தமிழ் மண்ணுக்காகவும், தமிழ்நாடு மக்களுக்காகவும் தொடர்ந்து பணி செய்து வருகிறீர்கள் என்று வாழ்த்து தெரிவித்தோம். தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்துள்ளது.
மும்மொழி கொள்கை என்பது தென் மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கொள்கை. ஒன்றிய அரசு செய்து வருவது கேவலமான ஒன்று. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புதுச்சேரியில் படித்த மாணவர்கள் சிறந்த விஞ்ஞானிகளாக மருத்துவர்கள் ஆக உள்ளனர். உத்திர பிரதேசத்தில் எத்தனை பள்ளிகளில் தமிழை பாஜக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில ஆதிக்கத்தைக் கொண்டு வர பாஜக முயற்சி செய்கிறது,” என்றார்.