Breaking News
21 ம் நூற்றாண்டின் புதிய தாராளமய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள், இது எமக்கும் பொருந்தும்.
.

21 ம் நூற்றாண்டின் புதிய தாராளமய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்கள், இது எமக்கும் பொருந்தும்.
மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவில் 'மெக்ரெப்' என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஒரு பிரதேசமாகும். இது வடக்கே மொராக்கோவையும் வடகிழக்கே அல்ஜீரியாவையும் கிழக்கிலும் தெற்கிலும் மொரிட்டானியாவையும் மேற்கே அத்திலாந்திக் சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்டது. ஐந்து இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தப் பிரதேசத்தை .பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமித்துத் தனது கொலனியாக வைத்திருந்தது . . 1975 ஆம் ஆண்டு, ஸ்பெயினில் பிரங்கோவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தபின்பு, ஸ்பெயின் இந்த நாட்டிலிருந்து வெளியேறத் தீர்மானித்தது. அவ்வாறு வெளியேறும்போது இந்த நாட்டை மொராக்கோவும் மொரிட்டானியாவும் இணைந்து நிர்வகிக்கும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தி அவ்விரு நாடுகளிடமும் கையளித்து விட்டுச் சென்றது .
இதனால் அந்தப் பகுதியில் வாழும் சஹாரா (ஸஹ்ரவி) பழங்குடியினர் அதாவது அந்த நாட்டின் பூர்வீக குடிகள் மொராக்கோவுக்கும் மொரிட்டானியாவுக்கும் எதிராகப் போராடினர். இது பாரிய உள்நாட்டு யுத்தமாகியது. தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைத்து ஸஹ்ரவி மக்களின் பொலிசாரியோ முன்னணி என்ற விடுதலை இயக்கம் போராடியது. இந்த இயக்கம் 'ஸஹ்ரவி அரபு ஜனநாயக் குடியரசை' பிரகடனப்படுத்தி நாடு கடந்த அரசாங்கத்தையும் நிறுவியது. இந்நாடுகடந்த அரசாங்கம் அல்ஜீரியாவிலிருந்து செயற்பட்டது. 1979 ஆம் ஆண்டு மொரிட்டானியா தனது நிர்வாகத்தின் கீழ் இருந்த பகுதிகளிலிருந்து விலக, மொராக்கோ அப்பகுதிகளையும் கைப்பற்றியது. அதன்பின், பொலிசாரியோ முன்னணிக்கும் மொராக்கோவுக்கும் தீவிரமான உள்நாட்டு யுத்தம் நடந்தது. 1991 ஆம் ஆண்டு ஐ.நா தலையி ட்டு போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்தது.
இவ்வுடன்படிக்கையில் இரண்டு அடிப்படை விடயங்கள் இருந்தன. முதலாவது, போர்நிறுத்தத்தைக் கண்காணிக்க ஐ.நா அமைதிகாக்கும் படைகளை அனுமதிப்பது. இரண்டாவது, மேற்கு சகாரா மக்கள் மத்தியில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி சுயநிர்ணய உரிமையை அடிப்படியில் தனிநாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதோ அல்லது மொராக்கோவுடன் இணைப்பதோ என முடிவெடுப்பது. இதற்காக 'மேற்கு சகாராவில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும் ஐ.நாப்பணிக்குழு' என்ற ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதாவது 33 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் சர்வஜன வாக்கெடுப்பை ஐநா திட்டமிட்டபடி நடத்தவில்லை . ஐ.நாவின் அமைதி காக்கும் படைகள் இன்னமும் மேற்கு சகாராவில் நிலைகொண்டுள்ளன.
தங்களுக்கான தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில், மேற்கு சகாரா மக்கள் 2005 ஆம் ஆண்டு 'சுதந்திரத்துக்கான இன்டிபாடா' எனும் மக்கள் எழுச்சியில் ஈடுபட்டனர். இதனால் மொராக்கோ அரசாங்கம் மேற்கு சகாராவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பொலிசாரியோ முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து பிரிப்பதற்காக 2,700 கிலோமீட்டர் நீளத் தடுப்பு சுவரை அமைத்தது . உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுவரெனப்படும் இச்சுவர் மேற்கு சகாராவின் மீதான மொராக்கோவின் அடக்குமுறையின் சின்னமாகும்.ஐ.நாவின் அமைதி காக்கும் படைகள் கைகட்டி பார்த்திருக்கத்தான் இந்தச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது
பாலைவனமாகத் தெரியும் மேற்கு சகாரா இயற்கை வளம்மிகுந்த ஒரு பிரதேசமாகும். எண்ணெய் வயல்களும் பொஸ்பேற் கனிமச் சுரங்கங்களும் நிறைந்த பகுதியாகும். அது மேலும் 1,100 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையையும் அதையண்டி அத்திலாந்திச் சமுத்திரத்தின் முக்கியமான மீன் வளம் மிக்க பெருங் கடற்பரப்பையும் கொண்ட பொருளாதார வளம் நிறைந்த பிரதேசமாகும். இப்பகுதியின் எண்ணெய்க் கிணறுகளுக்கு உரிமை கொண்டாடும் மொராக்கோவைப் பொறுத்தவரை இவ்வளவு வளமுள்ள பகுதியைக் கைவிடுவது இயலாத காரியம். எண்ணெய் அகழும் பல்தேசியக் கம்பெனிகளுடன் மொராக்கோ உடன்படிக்கைகளை மேற்கொள்கிறது. பொஸ்பேட் சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுகின்றது. சர்வதேசச் சட்டங்களை மீறி, ஐரோப்பிய ஒன்றியம், மேற்கு சகாராக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு மொராக்கோவுடன் உடன்படிக்கை செய்துள்ளது.இன்று மேற்கு சஹாராவின் பெரும் பகுதி மொரோக்காவல் ஆக்கிரமிக்கப்பட்டு ஸஹ்ரவி மக்களின் அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டது.
ஆபிரிக்காவில் மட்டுமல்லாமல் உலகின் எந்தவொரு மூலையிழும் விடுதலைக்கு போராடும் இனங்களின் சுயநிர்ணய உரிமைபற்றி உலகம் அலட்டிக் கொள்ளாது. மேற்குலக நாடுகளுக்கு அவர்களது பிராந்திய நலன்களுக்காக மொராக்கோவுடன் இணைந்து செயல்படுவது அவசியமாகிறது . இந்தப் பிராந்தியத்தில் மேற்குலகின் நலன்களுக்கு இடையூறாக இருக்கும் அல்ஜீரியா மொரோக்கோவின் பிரதான எதிரியாக இருப்பதால் மொரோக்கோவுடன் இணைந்து செயல்படுவது முக்கியமானதாக இருக்கிறது.
மனித உரிமைகள், சர்வதேச சட்டம் என வகுப்பெடுக்கும் அமெரிக்காவும் , ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மேற்கு சகாராவின் வளங்களைச் சூறையாடுதற்கான உடன்படிக்கைகளை மொராக்கோவுடன் செய்கின்றன . அதை 'அரசியல் வேறு பொருளாதாரம் வேறு. இரண்டையும் இணைத்துப் பார்க்கக் கூடாது' என நியாயப்படுத்துகின்றன.இந்தப் பின்னணியில் ஸஹ்ரவி இன மக்களின் துயரமோ கோரிக்கைகளோ மேற்குலகையும் ஐக்கிய நாடுகள் சபையையும் பொறுத்தவரை முக்கியமற்றவை.
21 ம் நூற்றாண்டின் புதிய தாராளமய உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்கள் எதிர்நோக்கும் சவால்களின் நிதர்சனம் இன்று மேற்கு சகாராவில் தெரிகிறது. இது எமக்கும் பொருந்தும்.