தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு. ஆயர் பூரண ஆதரவு
.
இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடிகள். அவர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் உரிமை உண்டு. தமிழர்களின் பொதுக் கட்டமைப்பு அரியநேத்திரனை தமிழ் தேசியத்தின் ஓர் அடையாளமாக தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆதலால் தமிழ் தேசியத்தினர் அவரை முழுமையாக ஆதரிக்க வேண்டும். இதனை உருக்கமாக முன்வைக்கின்றேனென மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் தேசியத்தினர் இதுவரை 8 சிங்களத் தலைவர்களை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்துள்ளார்கள். வாக்குகளைப் பெற்று பதவியில் அமர்ந்தவர்கள் யாருமே தமிழ் தேசியத்தின் குறைகளை அல்லது கஷ்டங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அப்படி இருக்கையில் இன்னுமின்னும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்று தமிழ் தேசியம் கேட்பதில் தவறேதுமில்லை.
தமிழ் தேசியம் ஒரு சிறுபான்மை இனம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. ஆயினும் இவ்வளவு காலமும் ஜனாதிபதியாக இருந்த சிங்களத் தலைவர்கள் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவதற்கான ஒரு செயற்பாடே தமிழ் பொதுக் கட்டமைப்பினர் அரிய நேத்திரனை தெரிவு செய்தமைக்கான காரணமாகும்.
இந்த தமிழ் பொதுக் கட்டமைப்பினர் தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல தீர்க்கமான முடிவை ஒவ்வொரு விடயத்திலும் வெளிப்படையாகக் கலந்து பேசி எடுக்க வேண்டும். தமிழ் பொதுக் கட்டமைப்பினர் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்க வேண்டும். எமது அரசியல்வாதிகளின் கோணல் மாணல்களுக்கு முகம் கொடுத்து நல்லதைச் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுகின்றேன் என்றார்.