யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒளிவிழா!
.
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2024 ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் உதவி மாவட்ட செயலாளருமான செல்வி உ. தர்சினி தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நத்தார் தீப ஔியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, ஆசியுரையினை சுண்டுக்குளி சென்ஜோன்ஸ் ஆலய முகாமைக்குரு வணக்கத்திற்குரிய ஜே. ஸ்ரிபன் ஜெபச்செல்வனும், கிறிஸ்துமஸ் செய்தியை பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தனும் வழங்கினார்கள்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களின் வரவேற்பு நடனம், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்கள், பாடல், நாடகம், பேச்சு மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், நத்தாா் தாத்தா வருகையுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கிறிஸ்மஸ் நத்தார் இசையுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவு பெற்றது.