கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட யாழ். கொள்ளைக் கும்பல் கண்டியில் சிக்கியது!
.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 21க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தங்க நகைக் கடைகளில் நுழைந்து பணம், தங்க நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்ட சந்தேகநபர்களை கண்டி, கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 19, 21, 22, 23 மற்றும் 26 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், வவுனியா, ஊர்காவற்துறை, கம்பளை, கலஹா, நுவரெலியா, கந்தபொல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள், கோவில்கள், தங்க நகைக் கடைகள் என்பனவற்றில் 4 வருடங்களாக இந்தக் குழுவினர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களுக்கு எதிராக இதுவரை 24 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் எல்லைக்குள் மாத்திரம் 9 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையால், சந்தேகநபர்கள் அவ்வப்போது பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாடகைக்கு வீடுகளை எடுத்து அங்கிருந்து இந்த கொள்ளைச் சம்பவங்களைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கொள்ளையிட்ட பணத்தை ஏற்கனவே செலவு செய்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள அடகு கடை ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சில தங்க ஆபரணங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.