அரவிந்தர் ஆசிரமத்தில் 98ம் ஆண்டு சித்தி தினம்
.
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இன்று 98ம் ஆண்டு சித்தி தினத்தையொட்டி, அரவிந்தர் அறையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுச்சேரி மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்த மகான் அரவிந்தர் 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி பொன்னொளி பூமிக்கு வந்ததை உணர்ந்து, அதன்பின் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டார். அதனையொட்டி அந்த நாள் ஆசிரமம் நிறுவும் தினமாக அறியப்பட்டு, ஆண்டுதோறும் நவ.24ம் தேதி சித்தி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 98ம் ஆண்டு சித்தி தினமான இன்று அரவிந்தர் ஆசிரமத்தில் காலை 6 மணி முதல் ஆசிரம உறுப்பினர்களின் கூட்டு தியானம் நடந்தது. ஆசிரமத்தில் உள்ள அரவிந்தரின் சமாதி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அரவிந்தர் வாழ்ந்த அறை திறந்து வைக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி மட்டுமன்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, அரவிந்தர் தங்கியிருந்த அறையையும், சமாதியையும் தரிசனம் செய்தனர்.