மகிந்தவின் ஆதரவை வெளிப்படுத்துகிறதா ”ரணிலின் நற்செய்தி”?; பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதி எனவும் பேச்சு
.
சமூக ஊடகங்களிலும் இது தொடர்பில் பலவாறு பகிரப்பட்டு வருகின்றன.
எனினும், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவின் பிரச்சார நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த நற்செய்தி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (26) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது இந்த நற்செய்தியை தெரிவிக்கவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
“நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றினேன்” என்பதே அந்த நற்செய்தியின் தொனிப்பொருளாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் தற்போதைய பொருளாதார அபிவிருத்தியில் எவ்வித மாற்றங்களும் இன்றி தொடர்வதும், சர்வதேச கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை சரியான முறையில் தொடர்வதும் அவசியமானது எனவும் எனவே அதற்கு “ஜனாதிபதி பதவியை தொடர்வது அவசியமானது“ எனவும் அறியப்படுத்தவுள்ளார்.
தலைநகர் கொழும்பு முழுவதும் “நாட்டு மக்களுக்கு நற்செய்தி” என்ற சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பச்சை மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிவப்பு ஆகிய நிறங்களை பயன்படுத்தி இந்த சுவரொட்டிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்பதை அறிவித்ததன் பின்னர் ரணில் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெறவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
குறித்த ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் விதத்தில் எதிர்வரும் நாட்களில் அமைச்சர்களாக பலர் ரணில் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.