அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்!
.
கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கிற்கு வந்து 13 ஆம் திருத்தம் தீர்வு என கூறும் போது, தெற்கில் இலங்கை எரியும் என்கிறார்கள். 13 ஆம் திருத்தம், சமஸ்டி எனக் கூறுவதால் தெற்கில் எதிர்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை அறியாத அரசியல் தலைவர்களாக உள்ளனர்.
இன்று பாராளுமன்றத்தில் உள்ளவர்களில் சிலர் தூக்கில் தொங்க வேண்டியவர்களும், சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்களுமாக உள்ளனர். முள்ளிவாய்க்காலில் அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டியவர்கள், இன்று நினைவேந்தல் செய்கின்றனர்.
கடந்த 4 தடவைகளில் பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் சட்டவிரோதமானவர்கள். நான் எல்லோரையும் கூறவில்லை.
பாராளுமன்றம் இறைமையை இழந்து பல ஆண்களாகிவிட்டது. வழக்கு தொடர்ந்தாலும் அதை எதிர் கொள்ள தயாராகவே இதை கூறுகிறேன். பாராளுமன்றம் இறைமை இழந்துள்ளது. அங்கு இருப்பவர்களில் சிலர் சிறையில் இருக்க வேண்டியவர்கள்.
அரசியலில் அனுபவம் இல்லாதவர்களால் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயுள்ளது. தமிழ், சிங்கள அரசியல்வாதிகளில் நான் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி. இன்று பேசப்படும் அரசியல் தீர்வுகள் தீர்வாகாது.
இந்திய முறையிலான அரசியல் தீர்வே பொருத்தமானது. அந்த தீர்வுத்திட்டம் என்னால் எடுத்து செல்லப்பட்ட போது ஜனாதிபதி, அமைச்சர்கள், பெளத்த மதத் தலைவர்கள், சிங்கள தலைவர்கள், சிங்கள மக்களும் மற்றும் சர்வேதேசமும் ஏற்றுக் கொண்டது.
என்னைப் பொறுத்த வரையில், அந்த தீர்வுத் திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பொருத்தமான தீர்வும் அதுவாக இருக்கும். இன்று முக்கிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறவுள்ளது.
இந்த தீர்வுத் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்து போட்டியிடும் வேட்பாளரை ஒன்றாக சேர்ந்து ஆதரிப்போம். அதற்காக எந்த தரப்பாக இருந்தாலும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறேன். மற்றபடி அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு எனது ஒத்துழைப்பு இருக்காது.
விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்த போது பேச வேண்டிய சந்தர்ப்பங்களை விட்டுவிட்டார். நானே அழிவுகளிலிருந்து காப்பாற்ற வாருங்கள் என அழைத்தும் எதுவும் செய்யவில்லை.
அப்போது அமைதியாக இருந்தவர், இன்று ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு ஏதோவெல்லாம் பேசுகிறார். அவர் பேசுவது அரசியலுக்கு இன்று பயனுள்ளதாக இல்லை. அவர் என்னுடைய நண்பராக இருந்தாலும், இதனை சொல்ல வேண்டியதாக உள்ளது.
இன்று பொது வேட்பாளர் என பேசப்படுவது வாக்குச் சிதைவுகளை ஏற்படுத்துமேயன்றி வேறு எதையும் பெற்றுத்தராது என தெரிவித்தார்.