கதவைத் தட்டும் ஆபத்து , காவல்துறை எச்சரிக்கை!
'காலண்டர்' விற்பனை என்ற பெயரில் உலாவும் மோசடி கும்பல்!
கதவைத் தட்டும் ஆபத்து: 'காலண்டர்' விற்பனை என்ற பெயரில் உலாவும் மோசடி கும்பல்!
ஆண்டின் இறுதி நெருங்கினாலே பிரான்ஸ் (L'Hexagone) முழுவதும் தீயணைப்பு வீரர்கள் (Pompiers), தபால்காரர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் (Éboueurs) வீடு வீடாகச் சென்று நாட்காட்டிகளை (Calendriers) விற்பனை செய்வது ஒரு நீண்ட கால மரபு. ஆனால், இந்த நல்லெண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, போலியான நபர்கள் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதுகுறித்துப் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய சம்பவங்கள்:
அர்டென் (Ardennes): Montsûrs என்ற நகரில், நகராட்சியின் பெயரில் இரண்டு இளம்பெண்கள் வீடு வீடாகச் சென்று போலியான காலண்டர்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தெற்கு பிரான்ஸ்: La Seyne-sur-Mer பகுதியில், நகராட்சிப் பணியாளர்கள் போலவும், துப்புரவுத் துறை ஊழியர்கள் போலவும் வேடமணிந்த சிலர் போலி காலண்டர்களுடன் வலம் வந்தனர். "எங்கள் தரப்பில் எந்த விற்பனையும் நடக்கவில்லை" என்று அந்த நகரத்தின் மேயர் அலுவலகம் (Mairie) அவசரமாக அறிக்கை வெளியிடும் அளவிற்கு நிலைமை சென்றது.
சந்தேகத்திற்குரிய நுழைவு: Sundhoffen பகுதியில், மூதாட்டி ஒருவர் வசிக்கும் வீட்டிற்குள், அனுமதி கேட்காமலே சுமார் 50 வயது மதிக்கத்தக்கப் பெண்மணி ஒருவர் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாரிஸ் மக்களே உஷார்! தலைநகர் பாரிஸில் வசிப்பவர்கள் ஒன்றை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும்: பாரிஸ் மாநகராட்சி ஊழியர்கள் இது போன்று வீடு வீடாகச் சென்று காலண்டர் விற்பதோ, நன்கொடை கேட்பதோ சட்டப்படி முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது (Interdiction). எனவே, பாரிஸில் யாரேனும் "நான் மாநகராட்சி ஊழியர்" என்று வந்து காலண்டர் நீட்டினால், அவர் நிச்சயம் ஒரு மோசடி நபரே.
மோசடியைக் கண்டறிவது எப்படி? - 5 எளிய வழிகள்
உங்கள் வீட்டு வாசலில் நிற்பவர் உண்மையான ஊழியரா அல்லது போலியானவரா என்பதை அறிய, பின்வரும் வழிமுறைகளைக் கையாளுங்கள்:
அடையாள அட்டை அவசியம்: வந்திருப்பவரிடம் அவருடைய அலுவலக அடையாள அட்டை (Carte professionnelle) அல்லது பணிப்பட்டை (Badge) உள்ளதா எனக் கேட்டுச் சரிபாருங்கள்.
சீருடை கவனம்: குறிப்பாகத் தீயணைப்பு வீரர்கள் (Pompiers) என்றால், அவர்கள் முழுமையான சீருடையில் இருக்க வேண்டும்.
லோகோ இருக்கிறதா? விற்கப்படும் காலண்டரில் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரப்பூர்வச் சின்னம் (Logo) இருக்கிறதா எனப் பாருங்கள். உதாரணமாக, தபால்காரர் என்றால் La Poste சின்னம் அதில் தெளிவாக இருக்க வேண்டும். மொட்டையாக, எந்தச் சின்னமும் இல்லாத காலண்டராக இருந்தால் உஷாராகி விடுங்கள்.
விலை அல்ல, நன்கொடை: வழக்கமாக, இந்தக் காலண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ஏதுமில்லை. இது ஒரு விருப்ப நன்கொடை (Don libre) மட்டுமே. வந்திருப்பவர் "இவ்வளவு பணம் கொடுத்தே ஆக வேண்டும்" என்று கட்டாயப்படுத்தினால், அது மோசடியாக இருக்கலாம்.
பற்றுசீட்டு கேளுங்கள்: தீயணைப்பு வீரர்கள் நன்கொடை பெற்றுக் கொண்டால், அதற்கான பற்றுசீட்டு (Facture) வழங்குவார்கள்.
இறுதியாக: அறிமுகம் இல்லாத நபர்களை, எந்தக் காரணத்தைக் கொண்டும் வீட்டிற்குள் அனுமதிக்காதீர்கள். சந்தேகம் இருந்தால், உடனே உங்கள் நகர மேயர் அலுவலகத்தையோ (Mairie) அல்லது காவல்துறையையோ (Gendarmerie) தொடர்பு கொள்ளுங்கள். ஆபத்து என்று உணர்ந்தால் தயங்காமல் 17 என்ற எண்ணை அழையுங்கள்.


