Breaking News
வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த தென்னை ஓலைகளை கழுவுங்கள்!
ஈயைக் கட்டுப்படுத்த அணுகவேண்டிய விவரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்

வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை , சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை முழுவதும் வெள்ளை ஈ தாக்கம் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே இதன் தாக்கம் பெரிதும் காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்களின் காலநிலை குறிப்பாக காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ளை ஈ தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதன் பரவல் அதிகமாக உள்ளது.
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமே கூடுதல் அக்கறை எடுத்து இதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவேண்டும். இதற்கான நிரந்தரத் தீர்வு ஆராய்ச்சி அடிப்படையிலேயே அமையவேண்டும்.
தற்போது வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை , சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடு 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை முன்னெடுக்கும் போது அந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்து தென்னை மரங்களிலும் செய்தால் மாத்திரமே அது உரிய வெற்றியைத் தரும் என தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து, பிராந்திய மேலதிக பணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணா கருத்து தெரிவிக்கையில்,
ஒட்டுமருந்தை (Surfactant) சாதாரணமாக பூச்சி நாசினிக்கு பயன்படுத்தும் அளவை விட 4 மடங்கு அதிகம் பயன்படுத்தி தெளிப்பதன் ஊடாக வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.அதேநேரம், இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த முயற்சிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும், மக்களுக்கு வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த அணுகவேண்டிய விவரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
கலந்துடையாடலின் முடிவில், உடனடியாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகம் பாதிப்புக்குள்ளான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு இதைக் கட்டுப்படுத்துவதற்கான மாதிரி செயற்பாடுகள் மக்களுக்கு செய்து காட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.