ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் – இலங்கை தொடர்பிலான தீர்மானத்துக்கு காலநீடிப்பு
.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் நாளைய தினம் (9) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
‘இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் தற்போது வரையிலான உள்நாட்டு மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் அமர்வின் முதல் நாளான நாளை திங்கட்கிழமை (09) பிற்பகல் 12.30 மணிக்கு இலங்கை குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது.
பிற்பகல் வரை நடைபெற உள்ள இந்த விவாதத்துக்கு பின்னர் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் பக்க நிகழ்வொன்றுக்கும் ஏற்பாடாகியுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்து மூலமாக விரிவான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை அடிப்படையாக வைத்து முதல் நாளில் விவாதம் நடைபெறவுள்ளது.
அத்துடன் இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் ஆயுட்காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்டமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது எத்தகைய நகர்வை முன்னெடுக்கப் போகிறது என்பதில் உத்தியோக பூர்வமான நிலைப்பாடுகள் எவையும் வெளியிடப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான பிரேரணையை முன்னகர்த்த வேண்டாம் என்று கோரியுள்ளது.
விசேடகமாக உள்நாட்டில் தேர்தல் காலம் என்பதால் ஐ.நா.விவகாரம் அரசியல் மயமாக்கப்பட்டுவிடும் என்பதோடு பொருளதார ரீதியான மீண்டெழும் செயற்பாட்டிக்கு சவர்தேச தரப்புக்கள் உதவி வருகின்ற செயற்பாட்டையும் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காகவும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடம் இலங்கை தொடர்பான தீர்மானத்திதை பிற்போடுமாறும் கோரியுள்ளது.
தற்போது வரையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானம் குறித்து எவ்விதமான உத்தியோக பூர்வமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான தரப்பினரும் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பில்எவ்விதமான உத்தரவாதத்தினையும் உத்தியோக பூர்வமாக வெளியிடவில்லை. அத்துடன் குறித்த இணை அனுசரணை வழங்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மன் ஏலவே வெளியேறியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தொடர்பில் ‘இலங்கையில் நல்லிணக்கம்ரூபவ் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் 51ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஓராண்டுக்கு நீடிப்புச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு ஜெனிவாவுக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக்க பதிலளித்து உரையாற்றவுள்ளதோடு விவாதங்கள் மற்றும் பக்க நிகழ்வுகளிலும் பங்காற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.