வடக்கில் ‘Beyond Borders’
.
கடந்த வாரம் பிரித்தானியாவைச் சேர்ந்த ‘எல்லைகளுக்கு அப்பால்’ (Beyond Borders) ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் வடமாகாணம் சென்றிருந்தார்கள். அங்கு அவர்கள் கிளிநொச்சியில் முன்னாள் போராளியும் ஊடகவியலாளருமான கோகிலவாணி, யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவர் ஜஸ்டின் குமார் மற்றும் The Jaffna Club நிறுவனரும் பத்தி எழுத்தாளருமான ஜெகன் அருளையா அவர்களையும் சந்தித்து வடக்கு வாழ் மக்களின் வாழ்வியல் தொடர்பான ஆவணப்படமொன்றிற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டார்கள்.
லண்டனைச் சேர்ந்த நண்பர்கள் லூயி கோல் (Louis Cole) மற்றும் ஜே.பி. என அழைக்கப்படும் ஹுவான் -பீற்றர் ஷுள்ஸ் (Juan-Peter (JP) Schulze) ஆகிய இருவரும் இரண்டு ஆசனங்களைக் கொண்ட இரட்டை இயந்திர விமானத்தில் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்த்து பல்வேறு வகையான மக்களின் கலாச்சாரங்கள் பற்றி ஆவணப்படங்களைத் தயாரித்து Beyond Borders என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் வட மாகாணத்திற்கு சென்றிருந்தபோது நிகழ்ந்த மேற்படி சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் நண்பர் ஜெகன் அருளையா அவர்கள் தன் முகநூலில் இவர்களது வருகை பற்றிப் பதிவிட்டிருந்தார்.
Beyond Borders தயாரிப்பாளர்களில் லூயி கோல் ஒரு யூ-ரியூப் காணொளிகளைத் தயாரிப்பதில் ஆரம்பித்து இப்போது உலகம் முழுவதும் சென்று எல்லைகளுக்கப்பால் கண் காணாத மக்களையும் அவர்களது கலாச்சாரங்களையும் ஆவணப்படுத்தி வருகிறார். இவரது நண்பரான ஜே.பி. ஒரு விமான ஓட்டி. 2015 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பித்த இவர்களது சுற்றுப்பயணம் 90 நாட்களில் பல்வேறு நாடுகளையும் தரிசித்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருந்தது. மீண்டும் 2017 இல் இதே போன்றொரு சுற்றுப்பயணம் நடைபெற்றிருந்தது. இதுவரை உலகின் 6 கண்டங்களில் 22 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். இவர்களது படைப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இக்குழு முழுநீள ஆவணப்படத் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
காலை உணவிற்காக ஜெகன் அருளையா அவர்களை பலாலி வீதியிலுள்ள அம்மாச்சி உணவகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். இலங்கை விவசாயத் திணைக்களத்தின் வெற்றிகரமான கருத்துருவாக்கத்தில் உருவான அம்மாச்சி-யாழ்ப்பாணம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் அதே வேளை குறைந்த விலையில் நிறைந்த சுவையுடனான உணவை வழங்கும் ஒரு உணவகம் (food court) ஆகும்.