கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!
.

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார அமைச்சுக்கு முன்பாக இணை சுகாதார அறிவியல் பீட மாணவர் சங்கத்தினர் மார்ச் 27 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக 27 பேர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அத்துடன் கைது செய்யப்பட்ட மற்ற 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளரான மதுஷன் சந்திரஜித் உட்பட இருவரை விடுதலை செய்யுமாறு கோரி தென்கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று (28) வெள்ளிக்கிழமை பல்கலைக் கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.