சர்ச்சை பேச்சு, மோதல்களுக்கு நடுவே.. பிரதமர் நரேந்திர மோடி- வங்கதேச தலைவர் முகமது யூனுஸ் சந்திப்பு!
ஷேக் ஹசீனா அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அகற்றப்பட்ட நிலையில், அதன் பிறகு இரு நாட்டு உறவு மோசமடைந்தது.

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்றுள்ளார். இதற்கிடையே அங்கு வைத்து பிரதமர் மோடியை வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் சந்தித்துப் பேசினார். கடந்த சில காலமாகவே இந்தியா வங்கதேசம் இடையேயான உறவுகள் மோசமாகி வரும் சூழலில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
வங்காள விரிகுடா பகுதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு அதாவது பிம்ஸ்டெக். இதில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் உள்ளன.
பிம்ஸ்டெக் உச்சி மாநாடு
இந்த கூட்டமைப்பின் 6ஆவது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்கத் தான் பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி இந்த பயணத்தில் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை சந்திப்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு இப்போது நடந்துள்ளது.
மோடி- முகமது யூனுஸ் சந்திப்பு
ஷேக் ஹசீனா இருந்த வரை இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே பல ஆண்டுகளாகவே நல்லுறவே இருந்து வந்தது. ஆனால், ஷேக் ஹசீனா அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அகற்றப்பட்ட நிலையில், அதன் பிறகு இரு நாட்டு உறவு மோசமடைந்தது. அங்குள்ள இந்துக்கள் மீதான தாக்குதல், அந்நாட்டுத் தலைவர்கள் இந்தியா குறித்துக் கூறிய தகவல்கள் நிலைமை மோசமாக்கியது. இப்படி இரு தரப்பு உறவு மோசமாகி வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வேண்டும் என வங்கதேச தரப்பு கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. நேற்று வியாழக்கிழமை இரவு பிம்ஸ்டெக் தலைவர்களின் இரவு விருந்திலும் கூட மோடியும் யூனுஸும் அருகருகே அமர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சை பேச்சு
மேலும், வங்கதேச இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் சமீபத்தில் தான் சீனா சென்றிருந்தார். அப்போது அங்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கடலை அணுக வங்கதேசத்தின் உதவி தேவை என்றும் கூறியிருந்தார். அதாவது முகமது யூனுஸ்,"இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஏழு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. அவை கடலை அடைய எந்த வழியும் இல்லை. இங்கே கடலின் ஒரே பாதுகாவலர் நாங்கள்தான். எனவே இது சீனப் பொருளாதாரத்தின் நீட்டிப்பாக இருக்கலாம்" என்று சீனாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
சீனாவுக்கு அழைப்பு
ஏற்கனவே தென்கிழக்கு சீன கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் வங்கதேச கடல் பகுதிக்கு முகமது யூனுஸ் தானாகச் சென்று அழைப்பு விடுத்தது பேசுபொருள் ஆனது. இது இந்தியா வங்கதேச இடையே வளர்ந்து வரும் மோதலை மேலும் அதிகரிப்பதாகவே இருந்தது. முகமது யூனுஸின் கருத்துக்களுக்குப் பிரதமர் மோடி நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றாலும், இந்தியாவின் வடகிழக்கு பகுதி பிம்ஸ்டெக் குழுவின் இதயத்தில் உள்ளதாகப் பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.