நாட்டில் அதிகரித்து வரும் இனவெறி! சூழ்ச்சிகள் குறித்த இரகசியத் தகவல்கள் கைவசம் - அநுரவிடம் வாய்ப்பு கோரும் ஞானசார!!
.
நாட்டில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் மத வெறி குறித்து தாம் சேகரித்துள்ள முக்கியமான தகவல்களைப் பெற்று விவாதிக்க ஒரு முறையான நிறுவனத்தை நிறுவுமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறையிடம் இல்லாத தகவல்கள்கூட தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
எனினும், இந்தத் தகவல்களை தாம் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
தாம் இந்த அரசாங்கத்தை நம்புவதால், அவற்றை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு உண்மையான நிறுவனத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மகா சங்கத்தினராக, பண்டைய காலங்களிலிருந்து நாட்டையும் தேசத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது.
கடந்த காலங்களிலும் தாங்கள் அந்த கடமைகளை செய்தபோதும், துரதிஸ்டவசமாக, எவரும் தங்களின் பேச்சைக் கேட்கவில்லை. அதற்கு பதிலாக, நாட்டில் இனவெறியை உருவாக்கியவர்கள் போல தாம் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இனவெறி மற்றும் மத சகிப்பின்மை இல்லாத சூழலை உருவாக்க இப்போது நாடு ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர் சில மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
தனது உரையில், எந்தவொரு இனவெறி நடவடிக்கைகளையும் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
எனவே இந்த வாக்குறுதியை தாம் மரியாதையுடனும் ஒப்புதலுடனும் முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பல வருட இனவெறி மற்றும் பிரிவினைவாதத்தால் இலங்கை தேசம் சோர்வடைந்துள்ளது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.