மட்டக்களப்பு நீதிமன்றை வெடி குண்டுவைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல்: விசேட அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை!
.
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
குறித்த நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்க்க போவதாக பொலிஸாருக்கு கடிதம் ஒன்று இனம் தெரியாதோரால் நேற்று வியாழக்கிழமை (24) அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக பொலிஸார் நீதிமன்ற பதிவாளர், நீதவான் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர்.
அத்துடன் கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அந்த பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை ஐந்து மணி தொடக்கம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் கட்டிடப்பகுதியை சுற்றி பாரிய தேடுதல் நடவடிக்கையினை எட்டு மணிவரை முன்னெடுத்தனர்.
இதேவேளை மட்டக்களப்பில் சீயோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட சந்தேக நபர்களின் வழக்குகள் இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதியின் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.