சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்: ரணிலின் அடுத்தடுத்த நகர்வுகள் – வெல்லவாயவில் பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு
.
ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவருவதால் எவரும் எதிர்பாராத பல திரும்புமுனைகள் அரசியல் களத்தில் இடம்பெற்று வருகின்றன.
26 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையொன்றை ஆற்ற உள்ளார்.
இந்த உரையில் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவிக்க உள்ளதுடன், தாம் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் அறிவிக்க உள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
விசேட உரையை நிகழ்த்திய கையோடு நாளை 27ஆம் திகதி கண்டி தலதா மாளிகை மற்றும் அஸ்கிரிய பீடத்தில் வழிபாடுகளிலும் ரணில் ஈடுபட உள்ளார்.
மகாநாயக்க தேரர்களுக்கு அவரது நற்செய்தியை கூறிய கையோடு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் 29ஆம் திகதி பிரமாண்ட பொதுக் கூட்டமொன்றை வெல்லவாயவில் நடத்த ஐ.தே.க திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் ஊடாகவே ரணில் விக்ரமசிங்க தமது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்க உள்ளதாக ஐ.தே.கவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களின் இணைவின் பின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குமே போட்டி ஏற்படும் எனவும் பரவலான கருத்துகள் வெளியாகி வருகின்றன.